துபாய்: போர் நிறுத்தத்திற்கான இறுதி ஒப்பந்தத்தை எட்ட 60 நாள் நிர்ணியக்கப்பட்ட நிலையில், அமெரிக்காவும் ஈரானும் ஹார்முஸ் ஜலசந்திக்காக போட்டி போடுவதிலேயே பாதி நாட்கள் முடிந்துள்ளன. அமெரிக்கா-ஈரான் இடையே இடைக்கால போர் நிறுத்த ஒப்பந்தம் கடந்த ஜூன் 15ம் தேதி முடிவான போது, 60 நாளில் இறுதி ஒப்பந்தத்தை எட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அதற்கான பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டாலும், ஹார்முஸ் ஜலசந்தியில் வணிக கப்பல்கள் மீது ஈரான் தொடர்ந்து தாக்குதல் நடத்தியதால் கடும் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் அமெரிக்காவின் தாக்குதலுக்கு பதிலடியாக வளைகுடா நாடுகள் மீது ஏவுகணைகளை ஏவிய ஈரான் மறு அறிவிப்பு வரும் வரை ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டிருக்கும் என அறிவித்துள்ளது.Geographic Reference
ஆனால், அமெரிக்க படைகளும், அதிபர் டிரம்பும் ஹார்முஸ் ஜலசந்தி திறந்தே இருப்பதாக கூறி உள்ளனர். ‘‘ஹார்முஸ் ஜலசந்தி உலகளாவிய வர்த்தகத்திற்கான முக்கிய கடல் வழிப்பாதை. ஈரான் அதை கட்டுப்படுத்தவில்லை’’ என அமெரிக்க ராணுவ மத்திய கட்டளை மையம் கூறி உள்ளது. ஹார்முஸ் ஜலசந்தி தங்கள் கட்டுப்பாட்டில் இருப்பதாக அமெரிக்காவும், ஈரானும் தனித்தனியாக உரிமை கோருவதே தற்போதைய பெரும் சிக்கலாக மாறியிருக்கிறது. ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் கட்டுப்படுத்தினாலும் ஓமன் கடல் பகுதியை ஒட்டிய, ஈரான் அங்கீகரிக்காத பகுதி வழியாக அப்பகுதியை கப்பல்கள் கடந்து வருகின்றன. அப்பகுதியில் கப்பல்கள் செல்ல அமெரிக்க படை பாதுகாப்பு அளிக்கிறது.
‘
இது ஹார்முஸ் ஜலசந்தி மீதான ஈரானின் இரும்பு பிடியை தளர்த்துவதால் ஈரான் கோபமடைந்துள்ளது. எனவே ஓமன் கடல் பகுதியை ஒட்டி செல்லும் வணிக கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. அமெரிக்கா, ஈரானின் இந்த சண்டையால் இறுதி ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட வேண்டிய 60 நாளில் பாதி நாட்கள் முடிந்து விட்டன. இனியும் இருதரப்பு பேச்சுவார்த்தை நடக்குமா என்பது கேள்விக்குறியாகி உள்ளது. இது ஈரான் உடனான போர் முழுவீச்சில் மீண்டும் தொடங்கக்கூடும் என்ற கவலையை உலகத் தலைவர்களிடையே ஏற்படுத்தியுள்ளது. ‘‘முழு அளவிலான மோதல்கள் மீண்டும் ஏற்பட்டால் அது பேரழிவு விளைவுகளை ஏற்படுத்தும்” என்று ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் தெரிவித்துள்ளார்.
இனி கட்டணம் செலுத்த வேண்டும்: டிரம்ப் அதிர்ச்சி
அமெரிக்க அதிபர் டிரம்ப் நேற்று அளித்த பேட்டியில், ‘‘ஹார்முஸ் ஜலசந்தியை எங்கள் கட்டுப்பாட்டில் எடுக்கிறோம். ஈரானிடம் இப்போது எதுவும் இல்லை. நாங்கள் தான் ஹார்முஸ் ஜலசந்தியை நிர்வகிப்போம். அதன் பாதுகாவலராக இருப்போம். எங்களை ஜலசந்தியின் காவல் தேவதை என்று கூட அழைக்கலாம். இவ்வளவு நாளும் இலவசமாக தான் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாத்தோம். இனி அதற்கான பலன் எங்களுக்கு கிடைக்க வேண்டும். அதற்காக ஹார்முஸ் ஜலசந்தியை கடக்கும் பணக்கார நாடுகள் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்’’ என புதிய பிரச்னையை தொடங்கி வைத்துள்ளார்.



