டிரம்ப்பை படுகொலை செய்ய ஈரான் போட்ட பகீர் ஸ்கெட்ச்!

 

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு ஈரானின் மிக உயரிய ஆன்மீகத் தலைவரின் ஆலோசகர் நேரடி கொலை மிரட்டல் விடுத்துள்ளது சர்வதேச அரங்கில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் அண்மைக்கால ராணுவத் தாக்குதல்களுக்குப் பழிவாங்கும் விதமாக, அதிபர் டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவின் வெள்ளை மாளிகை அல்லது அவரது பிரத்தியேக மார்-ஏ-லாகோ (Mar-a-Lago) சொகுசு விடுதியில் தங்கியிருந்தாலும், அங்கு புகுந்து அவரைப் படுகொலை செய்யும் தொழில்நுட்பத் திறன் ஈரானிடம் இருப்பதாக ஈரான் அரசுத் தொலைக்காட்சி விவாதத்தில் பகிரங்கமாக முழங்கப்பட்டுள்ளது.

 

ஈரானின் உச்சக்கட்ட ஆன்மீகத் தலைவர் ஆயதுல்லா அலி கமேனியின் நெருங்கிய ஆலோசகரும், அந்நாட்டின் மூத்த அதிகாரியுமான முகமது-ஜவாத் லாரிஜானி (Mohammad-Javad Larijani) ஈரான் அரசுத் தொலைக்காட்சியில் தோன்றி ஈரானின் அதிநவீன ராணுவத் தொழில்நுட்பங்கள் குறித்துப் பேசினார். அப்போது அவர், “டொனால்ட் டிரம்ப் இனி புளோரிடாவில் உள்ள தனது மார்-ஏ-லாகோ விடுதியில் நிம்மதியாக வெயிலில் படுத்துக் கிடக்க முடியாது; அவர் தொப்பையை வானத்தை நோக்கி காட்டிப் படுத்திருக்கும் போதே, ஒரு சிறிய மைக்ரோ ட்ரோன் (Micro-Drone) துல்லியமாகப் பாய்ந்து வந்து அவரது தொப்புள் பகுதியிலேயே தாக்கி அழிக்கும். இது மிகவும் எளிமையானது” என்று நேரலையில் சிரித்துக் கொண்டே சவால் விடுத்துள்ளார்.

ஈரான் அதிகாரியின் இந்த அச்சுறுத்தலான பேச்சு குறித்து வாஷிங்டனில் செய்தியாளர்கள் அதிபர் டொனால்ட் டிரம்பிடமே நேரடியாகக் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அதிபர் டிரம்ப், “ஆம், இது ஒரு நேரடி மிரட்டல் தான் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. நான் கடைசியாக எப்போது வெயிலில் படுத்து ஓய்வெடுத்தேன் என்றே தெரியவில்லை; ஒருவேளை எனக்கு 7 வயது இருக்கும்போது அப்படிச் செய்திருப்பேன், தற்போது எனக்கு அதில் பெரிய ஆர்வமும் இல்லை” என்று தனது பாணியில் கிண்டலாகப் பதிலடி கொடுத்துள்ளார். இருப்பினும், அமெரிக்க உளவுத்துறையும் இஸ்ரேலிய உளவு அமைப்பான மொசாத்தும், டிரம்பைக் குறிவைத்து ஈரான் தீட்டியுள்ள புதிய ரகசியக் கொலைப் பட்டியலை (Kill List) அண்மையில் கண்டறிந்து பாதுகாப்பு அரண்களை பலப்படுத்தியுள்ளன.

கடந்த காலங்களில் ஈரானின் புரட்சிகர காவல்படையின் (IRGC) தளபதி காசிம் சுலைமானி அமெரிக்க ட்ரோன் தாக்குதலில் கொல்லப்பட்டதில் இருந்தே டிரம்பைப் பழிவாங்க ஈரான் துடித்து வருகிறது. அமெரிக்காவின் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் இந்த மிரட்டல்களை மிகவும் தீவிரமானதாகக் கருதுவதாகவும், ஈரானிய உளவு அமைப்புகள் தங்களின் சொந்த நாட்டு வீரர்களைப் பயன்படுத்தாமல், மூன்றாம் தரப்புக் குற்றவியல் கும்பல்கள் மூலம் இங்கிலாந்து மற்றும் அமெரிக்க மண்ணில் இத்தகைய தாக்குதல்களை நடத்தத் திட்டமிட்டுள்ளதாகவும் எச்சரித்துள்ளனர். அதிபர் டொனால்ட் டிரம்ப் தம்மைக் கொல்வதற்கு ஈரான் முயன்றால், அந்நாட்டின் மீது 1,000 ஏவுகணைகள் உடனடியாகப் பாயும் வகையில் ‘லாக் அண்ட் லோடட்’ நிலையில் ராணுவம் தயார் படுத்தப்பட்டுள்ளதாக எச்சரித்துள்ளதால் உலகப் போர் அபாயம் சூழ்ந்துள்ளது.