ரஷ்யா – உக்ரைன் இடையிலான போர் நிறுத்தம் மேலும் 3 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையே டொனால்ட் ட்ரம்ப் பேச்சுவார்த்தை நடத்தியதன் பலனாக, ரஷ்யா, உக்ரைன் ஆகிய இரண்டு நாடுகளும் மூன்று நாள் தற்காலிக போர்நிறுத்தத்துக்கு சம்மதம் தெரிவித்துள்ளன.
தனது ‘ட்ரூத் சோஷியல்’ தளத்தில் இது குறித்து பதிவிட்ட ட்ரம்ப் “மே 9, 10 மற்றும் 11 ஆகிய திகதிகளில் ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையான அனைத்து விதமான இராணுவ நடவடிக்கைகளும் நிறுத்தப்படும்” என அறிவித்துள்ளார்.
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மற்றும் ட்ரம்ப் இடையே அண்மையில் நடத்தப்பட்ட தொலைபேசி உரையாடலைத் தொடர்ந்து, இந்த போர் நிறுத்த இணக்கம் ஏற்பட்டுள்ளது.
“இரண்டாம் உலகப் போரில் நமது இரு நாடுகளுமே நட்பு நாடுகளாக இருந்து வெற்றியில் பெரும் பங்கு வகித்தன. எனவே, அந்த நாளை கௌரவிக்கும் வகையில் இந்தப் போர்நிறுத்தம் அமைய வேண்டும்” என டிரம்ப் கோரிக்கை விடுத்ததை தொடர்ந்து, இந்தப் போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.




