பிராந்தியத்தில் நிலவும் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக இரு நாடுகளுக்கும் இடையே எட்டப்பட்ட ஆரம்பகட்ட உடன்படிக்கையைச் செயல்படுத்துவது தொடர்பாக, சுவிட்சர்லாந்தின் லூசெர்ன் ஏரிக்கு அருகிலுள்ள பர்கன்ஸ்டாக் மலை உச்சி ரிசார்ட்டில் இன்று வெள்ளிக்கிழமை இப்பேச்சுவார்த்தை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.
எனினும், அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வேன்ஸ் இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்பதற்கான தனது சுவிஸ் பயணத்தை திடீரென இரத்து செய்துள்ளதாக வெள்ளை மாளிகை ஊடகப்பிரிவுமூ நள்ளிரவில் அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து, இன்றையதினம் திட்டமிடப்பட்டிருந்த இருதரப்பு பேச்சுவார்த்தைகள் நடைபெறாது என்பதை சுவிட்சர்லாந்து வெளிவிவகார அமைச்சகமும் உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.
கடந்த 17 ஆம் திகதி பிரான்ஸின் வெர்சாய்ஸ் நகரில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ஈரான் தரப்புக்கு இடையே போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்த ஒப்பந்தத்தின்படி இரு நாடுகளுக்கும் இடையே அடுத்தகட்ட இறுதி உடன்பாட்டை எட்ட 60 நாட்கள் காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது. அதற்கான முதற்கட்ட அமர்வாகவே இந்த பர்கன்ஸ்டாக் சந்திப்பு திட்டமிடப்பட்டிருந்தது.
ஈரானிய துறைமுகங்கள் மீதான கடல்சார் தடைகளை அமெரிக்கா நீக்குவது, ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் கப்பல் போக்குவரத்திற்காகத் திறப்பது மற்றும் ஈரானுக்கு பொருளாதார மறுசீரமைப்புத் திட்டங்களை வழங்குவது போன்றவை இந்த 14 அம்ச வரைவு ஒப்பந்தத்தில் அடங்கும்.
அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வேன்ஸ் இப்பேச்சுவார்த்தையை முற்றிலுமாக கைவிடவில்லை எனவும், தற்காலிகமாக மட்டுமே தனது பயணத்தைத் தாமதப்படுத்தியுள்ளார் எனவும் வெள்ளை மாளிகை தரப்பு விளக்கியுள்ளது. “இந்த உயர்மட்ட பேச்சுவார்த்தைகளின் தளவாட மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் (Logistics) ஒருபோதும் எளிமையானதாகவோ அல்லது எளிதில் கணிக்கக்கூடியதாகவோ இருப்பதில்லை” என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இந்த உடன்படிக்கை ஏதேனும் ஒரு தரப்பால் மீறப்பட்டால், ஈரானின் பதில் “மிகவும் தீர்க்கமானதாக” இருக்கும் என்று ஈரானின் தலைமைப் பேச்சுவார்த்தையாளர் முகமது பாகர் காலிபாஃப் இன்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இருப்பினும், கத்தார் மற்றும் பாகிஸ்தான் நாடுகளின் மத்தியஸ்தத்துடன் சுவிஸ் அரசு ஏற்பாடு செய்துள்ள இந்த அமைதிப் பேச்சுவார்த்தை, அடுத்த சில நாட்களில் மாற்றுத் தேதிகளில் மீண்டும் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.




