மொட்டை மாடியில் தூங்கிய தம்பதி.. கணவர் பலி, மனைவி கவலைக்கிடம் நள்ளிரவில் நடந்த நிகழ்வு

 

டெல்லியில் மொட்டை மாடியில் தம்பதி கீழே விழுந்த சம்பவம்,(புகைப்படங்கள்- Samayam Tamil)
இந்தியாவில் டெல்லி, மும்பை , ஹரியானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கடும் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதனால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இந்த நிலையில், டெல்லியில் உள்ள காந்தி நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பழைய சீலம்பூரில் உள்ள நானக் பஸ்தியில் பகுதியில் வசித்து வந்தவர் வருண் சர்மா. வயது 32. இவருக்கு திருமணமாகி கீதா (29) என்ற மனைவி உள்ளார்.

வெயில் காரணமாக மொட்டை மாடியில் தூங்க சென்ற தம்பதி
இந்தத் தம்பதியினர் 2019 பிப்ரவரியில் திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு இரண்டரை வயது மகன் உள்ளார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று, தம்பதியினர் இரவு 9 மணியளவில் குடும்பத்தினருடன் இரவு உணவு அருந்திவிட்டு, பின்னர் வீட்டின் நான்காவது மாடியில் உள்ள மொட்டை மாடியில் உறங்கச் சென்றுள்ளனர். அப்போது நள்ளிரவில் தூக்கக் கலக்கத்தில் இருந்தபோது, எதிர்பாராதவிதமாக தடுமாறி இருவரும் மொட்டை மாடியில் இருந்து கீழே விழுந்ததாகத் தெரிகிறது.

தூக்க கலக்கத்தில் இருந்து கீழே விழுந்து கணவர் உயிரிழப்பு
நான்காவது மாடியில் இருந்து பயங்கர சத்தத்துடன் கீழே விழுந்த தம்பதியைக் கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக ஓடிவந்தனர். அப்போது தம்பதிகள் இருவரும் ரத்த காயங்களுடன் கிடந்தனர். இதனைத் தொடர்ந்து அவர்களை மீட்டனர். ஆனால் அதற்குள் பலத்த காயமடைந்த கணவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், உயிரிழந்த வருண் சர்மா உடலை மீட்டு பிரேதப்பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் மனைவி
மேலும் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த மனைவியை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போதைய நிலவரப்படி அவரது நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

டெல்லி காவல்துறையின் தீவிர விசாரணையில் அதிர்ச்சி தகவல்
இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள டெல்லி போலீசார் விசாரணை மேற்க்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில், “இரவு சுமார் 10 மணியளவில், மாடியில் தம்பதியினர் வாக்குவாதம் செய்வதையும், அதைத் தொடர்ந்து யாரோ ஒருவர் கீழே விழும் சத்தத்தையும் குடும்பத்தினர் கேட்டனர் என்று காவல்துறையினர் விசாரணையில் தெரிவந்தது . மேலும் உறவினர்கள் வெளியே விரைந்து வந்தபோது, வருண் மற்றும் கீதா இருவரும் கீழே இருந்த சந்தில் காயங்களுடன் கிடப்பதைக் கண்டனதாக தெரிவித்துள்ளனர்.

மாடியில் தூங்கிய தம்பதிக்கு நேர்ந்த சோகம் சம்பவம்
வாக்குவாதத்தின் போது தம்பதியினர் தவறி விழுந்தனரா அல்லது ஒருவர் மற்றவரைத் தள்ளினாரா ? இது தற்செயலாக நடந்த விபத்தா அல்லது இதற்குப் பின்னால் வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா என்ற கோணத்தில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.கோடை வெப்பத்தில் இருந்து தப்பிக்க மொட்டை மாடியில் தூங்கிய தம்பதிக்கு நேர்ந்த இந்த சோகம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறமால் இருக்க மருத்துவரை அணுக வேண்டும் என்று காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.