மயிலத்தமடு – தரைகள் சேதமாக்கப்படும் முறைப்பாடுகள் ஏற்கப்படவில்லை – பண்ணையாளர்கள் குற்றச்சாட்டு

 

மட்டக்களப்பு மாவட்டத்தின் மயிலத்தமடு–மாதவனைப் பகுதியில் விவசாயப் பயிர்ச் செய்கைகளுக்காக கால்நடைகளின் மேய்ச்சல் தரைகள் உழவுபடுத்தப்பட்டு சேதமாக்கப்பட்டு வருவதாக அப்பகுதி கால்நடை வளர்ப்பு பண்ணையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

பண்ணையாளர்களின் கூற்றுப்படி, செவ்வாய்க்கிழமை (30) அன்று அப்பகுதிக்குச் சென்ற சில அயல் மாவட்டத்தைச் சேர்ந்த சிங்கள விவசாயிகளுடன் பதற்றமான நிலை ஏற்பட்டதாகவும், அவர்கள் கத்திகளுடன் வந்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்தச் சம்பவம் தொடர்பில் முறைப்பாடு ஒன்றைப் பதிவு செய்வதற்காக மயிலத்தமடு பண்ணையாளர்கள் சிலர் கரடியனாறு பொலிஸ் நிலையத்திற்குச் சென்றுள்ளனர்.

எனினும், தங்களது முறைப்பாட்டை கரடியனாறு பொலிஸார் ஏற்க மறுத்ததுடன், சம்பவம் தொடர்பில் மயிலத்தமடு பொலிஸாருக்கு தாங்களே அறிவிப்பதாகக் கூறி தங்களைத் திருப்பி அனுப்பியதாக பண்ணையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதனையடுத்து, இந்த விடயம் தொடர்பில் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவிற்கு முறைப்பாடு செய்ய முயன்றபோது, தங்களைத் திருப்பி அனுப்பிய பொலிஸ் அதிகாரியின் பெயர் மற்றும் தகட்டு இலக்கம் போன்ற விபரங்கள் வழங்கப்பட்டால் மட்டுமே மேலதிக நடவடிக்கை எடுக்க முடியும் என அங்கிருந்த அதிகாரி தெரிவித்ததாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

மேலும், 01.07.2026 அன்று மயிலத்தமடு–மாதவணைப் பண்ணையாளர்கள் சங்கத் தலைவர், இந்தச் சம்பவங்கள் தொடர்பாக மட்டக்களப்பு மாவட்ட செயலகம் மாவட்ட செயலாளருக்கு நேரில் சென்று விரிவான விளக்கமொன்றை வழங்கியுள்ளதாகவும் அறியமுடிகிறது.

தற்போது நிலவி வரும் கடுமையான வறட்சி காரணமாக கால்நடைகளுக்கான குடிநீர் மற்றும் மேய்ச்சல் வளங்கள் கடுமையாகக் குறைந்துள்ள நிலையில், மேய்ச்சல் நிலங்கள் விவசாய நடவடிக்கைகளுக்காக அத்துமீறி செயற்பட்டு சேதப்படுத்துவது பண்ணையாளர்களின் வாழ்வாதாரத்தை மேலும் பாதிக்கும் என அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

அத்துடன், இந்நடவடிக்கைகள் திட்டமிட்ட சிங்களக் குடியேற்ற முயற்சிகளுடன் தொடர்புடையவை என்றும், சில அரச அதிகாரிகளின் ஒத்துழைப்பும் இதற்கு இருப்பதாக உள்ளூர் மக்களிடையே கவலை நிலவுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.