அன்னூர்- மேட்டுப்பாளையம் சாலையில் தனியார் இடத்தில் உள்ள பாழடைந்த கிணற்றில் கிடந்த சாக்குமூட்டையில் கை கால் கட்டப்பட்ட நிலையில் பெண் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. பெண்ணை அடித்துக் கொன்று, உடலுடன் கல் வைத்துக் கட்டி, சாக்கு மூட்டையில் கிணற்றில் வீசப்பட்டுள்ளதா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அன்னூர் அருகே கிணற்றில் இருந்து சாக்கு மூட்டையில் சடலம் இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். தீயணைப்புத் துறையினர் நிகழ்விடத்துக்கு வந்து கயிறு கட்டி கிணற்றில் இருந்து சடலத்தை மீட்டனர். சடலம் அழுகிய நிலையில் மீட்கப்பட்டுள்ளதால் அடையாளம் காண முடியவில்லை.
சடலத்தை மீட்ட சிறுமுகை போலீசார் தடயவியல் நிபுணர்களை வரவழைத்து, உயிரிழந்த பெண் யார்? அவரை கொலை செய்து வீசியவர்கள் யார்? என்று விசாரணை நடத்தி வருகின்றனர். மோப்பநாய் உதவியுடன் போலீசார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது தொடர்பாக சுற்று வட்டாரத்தில் பெண் காணாமல் போனதாக ஏதும் வழக்கு பதியப்பட்டுள்ளதா என்று போலீசார் விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் சுற்றுப்புற பகுதிக்கு பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




