நீரிணையை மூடிய ஈரான்-புதிய தாக்குதல்களை ஆரம்பித்த அமெரிக்கா

 

ஹோர்முஸ் நீரிணை வழியாகச் சென்ற கப்பல் ஒன்றின் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, ஈரான் மீது புதிய கட்டத் தாக்குதல்களை தொடங்யுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அங்கீகரிக்கப்பட்ட பாதையில் இருந்து விலகிச் சென்றதாலும், அதன் கண்காணிப்பு அமைப்புகளை அணைத்துவிட்டுச் சென்றதாலும் ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படை அந்த கப்பலைத் தாக்கியுள்ளதாக அந்நாட்டு அரசு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன் ஹோர்முஸ் நீரிணை மறு அறிவிப்பு வரும் வரை மூடப்படுவதாக ஈரான் அறிவித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சைப்ரஸ் நாட்டைச் சேர்ந்த கப்பல் ஒன்றின் மீது ஈரான் “வெளிப்படையாகத் தாக்குதல்” நடத்தியதைத் தொடர்ந்து, “இந்த வாரத்தின் மூன்றாவது சுற்றுத் தாக்குதலை” நடத்தியுள்ளதாக அமெரிக்க மத்திய கட்டளை மையம் (Centcom) தெரிவித்துள்ளது.

இந்தத் தாக்குதலால் கப்பலின் இயந்திர அறை கடுமையாகப் பாதிக்கப்பட்டு, அது பயணத்தைத் தொடர முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும், ஒரு மாலுமி காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க பாதுகாப்புத் துறை செயலாளர் பீட் ஹெக்செத் தனது சமூக வலைதளப் பதிவில், வணிகக் கப்பல்கள் மீதான முந்தைய தாக்குதல்களுக்கு ஈரான் பொறுப்பேற்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டும், மீண்டும் அதே தவறைச் செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் ஈரான் தவறான முடிவை எடுத்துவிட்டது, அதற்கான விளைவை இப்போது சந்திக்கிறது என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

முன்னதாக, ஒரு வணிகக் கப்பல் மீது எச்சரிக்கையாகக் கப்பல் ஏவுகணையைத் தாங்கள் ஏவியதாகவும், பலமுறை எச்சரித்தும் கேட்காததால் அந்த கப்பல் தடுத்து நிறுத்தப்பட்டதாகவும் ஈரான் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும், ஹோர்முஸ் நீரிணையை மூடியதால் அமெரிக்கா மேற்கொள்ளும் எந்தவொரு “ஆக்கிரமிப்புக்கும்” கடும் பதிலடி கொடுக்கப்படும் என்றும், பிராந்தியத்தில் உள்ள அமெரிக்கத் தளங்கள் இலக்கு வைக்கப்படும் என்றும் ஈரான் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.