பாம்பை கடிக்கவிட்டு கணவனை கொன்று நாடகமாடிய பெண்!

 

ரூ.20 லட்சம் இன்சூரன்ஸ் பணத்தை வைத்து கள்ளக்காதலனுடன் சேர்ந்து வாழ முடிவெடுத்த பெண் ஒருவர் தனது கணவரின் பெட்டில் விஷப்பாம்பை விட்டு கடிக்க வைத்து கொன்று நாடகமாடி சிக்கி கொண்ட சம்பவம் நடந்துள்ளது. இந்த திடுக்கிட வைக்கும் சம்பவம் குறித்த முழு விவரம் வருமாறு: உத்தர பிரதேச மாநிலம் மீரட் அருகே உள்ள ஹஸ்தினாபூர் கிராமத்தை சேர்ந்தவர் அதுல் பன்வார்.

இவரது மனைவி பெயர் தாமினி. இவர்கள் 2 பேருக்கும் கடந்த 2019ம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டனர். தற்போது கணவன் – மனைவி சேர்ந்து ‘கிட்ஸ் ப்ளே ஸ்கூல்’ நடத்தி வந்தனர். இந்நிலையில் தான் அதுல் பன்வார் வழக்கம்போல் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது அவரை பாம்பு கடித்தது.

இதையடுத்து அவரை மனைவி தாமினி மீட்டு அருகே உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அதுல் பன்வார் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதற்கிடையே தான் அதுல் பன்வார் இறப்பில் குடும்பத்தினர் சந்தேகம் தெரிவித்தனர். இதுபற்றி போலீசில் புகார் செய்தனர். போலீசார் விசாரணையை தொடங்கினர். அப்போது தான் அதுல் பன்வார் பாம்பு கடித்து இறக்கவில்லை. அவர் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

மேலும் கணவர் அதுல் பன்வாரை கொன்றதாக அவரது மனைவி தாமினி மற்றும் அவரது கள்ளக்காதலன் துஷார் என்ற நிக்கி ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிட வைக்கும் தகவல் வெளியானது. இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது: ”தாமினிக்குக்கும், பள்ளியில் டிரைவராக பணியாற்றி வரும் துஷார் என்ற நிக்கிக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இவர்கள் 2 பேரும் கள்ளத்தொடர்பை தொடர விரும்பினர்.

அதோடு இருவரும் சேர்ந்து வசதியாக வாழ நினைத்தனர். இதற்காக இருவரும் சேர்ந்து திட்டமிட்டனர். டிரைவர் துஷாரிடம் பெரிய அளவில் பணம் இல்லை. இதனால் அவர் தனது மனைவியை விவாகரத்து செய்ய முடிவு செய்தார். அதேவேளையில் தாமினியின் கணவர் அதுல் பன்வார் இன்சூரன்ஸ் போட்டுள்ளார். இதனால் அவரை கொன்றால் அந்த பணத்தை வாங்கி இருவரும் ஒன்றாக சேர்ந்து வாழலாம் என்று திட்டமிட்டனர்.

இதற்கு தாமினியும் ஒப்புக்கொண்டார். கணவர் அதுல் பன்வாரை கொன்று அவரது ரூ.20 லட்சம் இன்சூரன்ஸ் பணத்தை கைப்பற்ற முடிவு செய்தார். முதலாவதாக தாமினி – துஷார் கள்ளக்காதல் ஜோடி அதுல் பன்வாரை விபத்து ஏற்படுத்தி கொல்ல முயன்றனர். ஆனால் அது நடக்கவில்லை. இதனால் வேறு திட்டம் தீட்டினர். அதன்டி சம்பவத்தன்று தாமினி தனது கணவர் அதுல் பன்வாருக்கு பாலில் தூக்கமாத்திரை கலந்து கொடுத்தார்.

அதனை குடித்தவுடன் அதுல் பன்வார் நன்றாக தூங்கினார். இதையடுத்து தாமினியும், துஷாரும் சேர்ந்து விஷப்பாம்பு ஒன்றை எடுத்து வந்து கட்டிலில் விட்டனர். அது அதுல் பன்வாரை கடித்தது. அதன்பிறகு துஷார் வெளியேறிய நிலையில், தாமினி தனது கணவரை ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதித்தார். அங்கு அவர் இறந்ததாக தெரிவித்தனர். முதலில் அதுல் பன்வார் பாம்பு கடித்து தான் இறந்ததாக அனைவரும் நினைத்தனர். ஆனால் சந்தேகம் தெரிவிக்கப்பட்டதால் விசாரணை மேற்கொண்டோம்.

விசாரணையில் தாமினியின் செல்போனை ஆய்வு செய்தபோது துஷாரிடம் அடிக்கடி பேசியது தெரியவந்தது. இதனால் அவர்களை பிடித்து விசாரித்தபோது கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர்” என்றனர். ரூ.20 லட்சம் இன்சூரன்ஸ் பணம் மற்றும் கள்ளக்காதலனுடன் வாழ வேண்டும் என்பதற்காக கணவர் அதுல் பன்வாரை திட்டமிட்டு பாம்பை கடிக்கவிட்டு கொன்று மனைவியே நாடகமாடிய சம்பவம் உத்தர பிரதேசத்தை அதிர வைத்துள்ளது.