தோழி கவுரியை மணந்தார் ஆமிர்கான்: பிரபலங்கள் வாழ்த்து

 

தனது நீண்ட நாள் தோழி கவுரியை திருமணம் செய்து கொண்ட பாலிவுட் நடிகர் ஆமிர்கானுக்கு பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

மும்பையில் தனது நீண்ட நாள் தோழியான கவுரியை திருமணம் செய்து கொண்டார் ஆமிர்கான். இந்த திருமணத்தில் ஆமிர்கான் – கவுரி இருவரின் நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் மட்டுமே கலந்து கொண்டனர். இந்த திருமணத்துக்கு பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

சில நாட்களுக்கு முன்பு தனது திருமணம் ஜூலை 5-ம் தேதி நடைபெற இருப்பதை பத்திரிகையாளர்கள் முன்பு ஆமிர்கான் உறுதிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

ஆமிர்கானுக்கு வயது 60 ஆகிறது. அவர் ரீனா மற்றும் கிரண் ராவ் ஆகியோரை திருமணம் செய்து கொண்டு, விவகாரத்து செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. இப்போது 3-வதாக கவுரியை திருமணம் செய்து கொண்டுள்ளார். கவுரிக்கும் இது இரண்டாவது திருமணமாகும். அவருக்கு முதல் திருமணத்தின் மூலம் ஒரு மகன் இருப்பது நினைவுக் கூரத்தக்கது.

முதல் இரண்டு மனைவிகளை ஆமிர்கான் விவகாரத்து செய்துவிட்டாலும், அவர்களுடனும் நட்பு பாராட்டி வருகிறார். சமீபத்தில் முன்னாள் மனைவிகள் இருவர் மற்றும் கவுரியுடன் ஆமிர்கான் ஒன்றாக காரில் பயணித்த வீடியோ மற்றும் புகைப்படம் இணையத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது.

‘தன்னை விட பாதி வயது இளம் நாயகிகளுடன் ஜோடியாக நடிப்பது மட்டும் நியாயமா?’ –

இந்தி நடிகையான இஷா கோபிகர், தமிழில் காதல் கவிதை, என் சுவாசக் காற்றே, நெஞ்சினிலே, ஜோடி, அயலான் உள்பட சில படங்களில் நடித்துள்ளார். அவர் திரையுலகில் நிலவும் வயது அடிப்படையிலான பாகுபாடு குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.

இது பற்றி தனது இன்ஸ்டா பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது: ஆண்களுக்கு வயதானால் அதை அனுபவம் என்கிறார்கள். பெண்களுக்கு வயதானால் அதைப் பிரச்சினை என்கிறார்கள். இது விசித்திரமாக இல்லையா ? முன்னணி நடிகர்கள், தங்களை விடப் பாதி வயதுடைய இளம் பெண்களுடன் ஜோடி சேர்ந்து ரொமான்ஸ் காட்சிகளில் நடிக்கிறார்கள்.

அது மிகவும் சாதாரணமாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது. ஆனால், வயதான பிறகும் ஒரு பெண் ஸ்டைலாகவோ, தன் கருத்துகளை வெளிப்படையாகப் பேசினாலோ அல்லது தனது தனித்துவத்தைக் கொண்டாடினாலோ, ‘உன் வயதுக்கு ஏற்றபடி நடந்துகொள்’ என்று அறிவுரை கூறுகிறார்கள். காலம் செல்லச் செல்ல ஒரு பெண், இன்னும் ஆழமானவளாக, வலிமையான தன்னம்பிக்கை கொண்டவளாக மாறுகிறாள் என்பதே உண்மை.

வயதான தோற்றமும் உடல் சுருக்கங்களும் ஒரு பெண்ணின் வாழ்க்கைப் போராட்டங்களையும், அனுபவங்களையும் பிரதிபலிக்கிறது. வயதாவது இயற்கையான ஒன்று. உங்கள் தாய், மனைவி, சகோதரி, மகள், ஏன் உங்களுக்கும் கூட ஒருநாள் வயதாகும். அதனால், வயதாவதை அவமானமாகவோ, பலவீனமாகவோ பார்க்காதீர்கள்.

எல்லா வயதிலும் பெண்களை மதியுங்கள். ஒரு பெண்ணின் வயதைப் பார்க்காமல், அவளது வாழ்நாள் பயணத்தையும் மன வலிமையையும் மதியுங்கள். கண்ணியத்துக்குக் காலாவதி தேதி எதுவும் இல்லை, தன்னம்பிக்கைக்கு வயது வரம்பு கிடையாது.

அழகை வயதின் அடிப்படையில் வரையறுத்துக் கொண்டே உலகம் வெகு நாட்களைக் கழித்துவிட்டது. உண்மையான அழகு என்பது ஒருபோதும் வயதைச் சார்ந்ததாக இருந்ததில்லை. இவ்வாறு இஷா கோபிகர் கூறியுள்ளார்.