இன்றைய சூழலில் எம்மில் பலரும் இணையதள மற்றும் சமூக ஊடக பாவனை அதிகரித்து விட்டதால்.. அதிலும் குறிப்பாக வைத்தியம் தொடர்பான பல காணொளிகளை கண்டு சுய மருத்துவம் செய்து கொள்வது அதிகரித்து வருகிறது. அதே தருணத்தில் தங்களுக்கு ஏற்பட்ட அறிகுறிகளை கடினமான நோய் பாதிப்புடன் ஒப்பிட்டு அச்சமடைகிறார்கள். குறிப்பாக தலைவலி வந்துவிட்டால் தங்களுக்கு ஏதேனும் பாரிய பாதிப்பு ஏற்பட்டிருக்குமோ..!? என்ற அச்சம் உளவியல் ரீதியாக ஏற்படுகிறது. இதற்காக உடனடியான தற்காலிக நிவாரண சிகிச்சையை மேற்கொள்கிறார்கள். இந்நிலையில் தலைவலி ஏற்பட்டால்.. அச்சமடையலாமா? வேண்டாமா? அல்லது எத்தகைய அறிகுறிகளுடன் தலைவலி ஏற்பட்டால் அச்சமடைய வேண்டும்? என்பது குறித்து வைத்தியர்கள் பின்வருமாறு விளக்கம் அளிக்கிறார்கள்.
சளியின் காரணமாக ஏற்படும் தலைவலி அதாவது சைனஸ் ஹெட் ஏக் , பதட்டமடைவதால் ஏற்படும் தலைவலி, ஒற்றைத் தலைவலி, கிளஸ்டர் ஹெட் ஏக் என 90 முதல் 95 சதவீத தலைவலி
அச்சப்பட தேவையற்ற சாதாரண தலைவலி தான். இதற்கு வைத்தியர்களிடம் முறையான மற்றும் முழுமையான சிகிச்சையை பெற்றால் நிவாரணம் கிடைக்கும். சிலருக்கு இத்தகைய பாதிப்பு அடிக்கடியோ விட்டு விட்டோ வரக்கூடும் இதற்கும் சிகிச்சை மேற்கொண்டு நிவாரணம் பெறலாம்.
அதே தருணத்தில் காலையில் படுக்கையில் இருந்து எழுந்தவுடன் தலைவலி கடுமையாக ஏற்பட்டாலோ. இயல்பான அளவைவிட கூடுதலாக வாந்தியும், குமட்டலும் ஏற்பட்டாலோ. சாதாரண தருணங்களில் தண்டர்கிளாப் ஹெட் ஏக் என மருத்துவ மொழியில் குறிப்பிடப்படும் இடி போன்ற திடீரென்று கடுமையாகவும், வீரியமாகவும் தலைவலி ஏற்பட்டாலோ. அச்சமடைய வேண்டும்.
ஏனெனில் இவை மூளை தொடர்பான பாதிப்பின் அபாயகரமான அறிகுறியாக இருக்கலாம். உடனடியாக அருகில் இருக்கும் வைத்தியசாலைக்குச் சென்று வைத்தியர்களை சந்தித்து சிகிச்சை பெற வேண்டும். ஏனெனில் இத்தகைய அறிகுறிகள் மூளையில் ஏற்படும் ரத்த கசிவு பாதிப்பாக இருக்கக்கூடும். மேலும் இத்தகைய தீவிரமான தலைவலி தோன்றும் போது பார்வையில் தடுமாற்றமும் ஏற்படும் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.




