தந்தை, தாய், தங்கையை காதலனுடன் சேர்ந்து கொடூரமாக கொலை

 

பெங்களூரில் பெற்றோர் மற்றும் தங்கையை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு, தலைமறைவாகி புதுச்சேரியில் பதுங்கியிருந்த காதலர்களை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். இந்த கொடூரச் சம்பவத்தின் பின்னணி என்ன?

சுவேதா என்ற இளம்பெண் தன்னுடைய தந்தை, தாய் மற்றும் தங்கை ஆகிய மூன்று பேரை காதலனுடன் சேர்ந்து கொடூரமாகக் கொலை செய்த பகீர் சம்பவம் பெங்களூரில் அறங்கேறியுள்ளது. இதற்கான காரணம் என்ன? குற்றவாளிகளை போலீசார் எப்படி கைது செய்தனர்? என்ன என்பது குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.

பெங்களூருவில் உள்ள சாய் கிரீன் அபார்ட்மென்ட்டில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் ஜூன் 22 ஆம் தேதி கொடூரமாக கொலை செய்யப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டனர். பின்னர் அது பெங்களூரு கேலூர்புரம், ராமமூர்த்தி நகரைச் சேர்ந்தவர் சோமசுந்தர் (55). அவரது மனைவி முத்துலட்சுமி (48) மற்றும் அவர்களது இளைய மகள் சுப்ரியா (20) என அடையாளம் காணப்பட்டுள்ளது. கம்ப்யூட்டர் என்ஜினீயரான ராமமூர்த்திக்கு ஸ்வேதா (25), சுப்ரியா (20) என இரு மகள்கள் உள்ளனர். ஸ்வேதாவும் கம்ப்யூட்டர் என்ஜினீயராக உள்ளார்.

இந்த நிலையில் தான், ஸ்வேதா, ஆந்திராவைச் சேர்ந்த கென்னத் என்பவரைக் காதலித்து வந்தார். இவர்களின் காதலுக்குப் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், ஸ்வேதா வீட்டை விட்டு வெளியேறி கென்னத்துடன் தனியாக வசித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், மூவரும் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டதாகக் கூறப்பட்ட மூவரின் சடலங்களும் பிரேத பரிசோதனைக்காக ஈஸ்ட் பாயிண்ட் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டன. பின்னர், போலீசார் குற்றவாளிகளைத் தேடும் வேட்டையில் ஈடுபட்டனர்.

இப்படியான சூழ்நிலையில், கடந்த ஜூன் 23 ஆம் தேதி புதுச்சேரி பேருந்து நிலையத்திற்கு அருகில் அமர்ந்து பிரியாணி சாப்பிட்டுக் கொண்டிருந்த சோமசுந்தரின் மூத்த மகளான சுவேதாவை, புதுச்சேரி உருளையன்பேட்டை போலீசார் மடக்கிப் பிடித்தனர். தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில், தன்னுடைய அப்பா, அம்மா, தங்கையை காதலனுடன் சேர்ந்து கொலை செய்ததை ஒப்புக் கொண்டுள்ளார். மேலும் தனது நண்பர் கென்னத் கோவா சென்று விட்டதாகவும் தான் புதுச்சேரி தப்பிவந்து அறை எடுக்கச் சென்றபோது போலீசாரிடம் சிக்கிக் கொண்டதாகவும் கூறியுள்ளார்.

இதையடுத்து, பெங்களூரு கே. எஸ். புரம் காவல் நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன் பேரில், சுவேதாவை பெங்களூர் அழைத்து சென்றனர். பின்னர், தலைமறைவாக இருந்த கென்னத்தை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் புதுச்சேரியின் அண்ணா சாலை பகுதியில் கென்னத் பதுங்கி இருந்தது போலீசாருக்கு தெரியவரவே, ஜூன் 24 ஆம் தேதி இரவு கைது செய்யப்பட்டு, பெங்களூர் அழைத்து வரப்பட்டார். பின்னர் இருவரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. மூன்று பேரையும் கொன்றது கென்னத் மற்றும் ஸ்வேதா ஒப்புக்கொண்டுள்ளனர். இதற்கிடையில், கொலைக்கான காரணத்தை பல கோணங்களில் விசாரணை செய்யப்பட்டது. அதில் பல விவரங்கள் வெளிவந்துள்ளன.

கென்னத்துடன் சேர்ந்து வாழ்ந்து வந்த ஸ்வேதா, கிரெடிட் கார்டு மூலம் கிட்டத்தட்ட 30 லட்சம் ரூபாய் கடன் வாங்கியிருந்ததாகவும், அந்த கடனை அடைக்க குடும்பச் சொத்தில் பங்கு கேட்டு பெற்றோரை வற்புறுத்தியதால் ஸ்வேதாவிற்கும், குடும்பத்தினரருக்கும் அடிக்கடி சண்டையிட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த ஸ்வேதா, தனது காதலன் கென்னத்துடன் சேர்ந்து பெற்றோரை தீர்த்துக்கட்டத் திட்டமிட்டு இருக்கிறார். அதன்படி, ஸ்வேதாவின் தந்தை சோமசுந்தரும், தங்கை சுப்ரியாவும் வெளியே சென்றிருந்த நிலையில், ஸ்வேதாவின் தாய் முத்துலட்சுமி மட்டுமே வீட்டில் தனியாக இருந்ததாக கூறப்படுகிறது.

அப்போது, ​​ஸ்வேதாவும் கென்னத்தும் வீட்டுக்கு சென்றுள்ளனர். பின்னர், ஸ்வேதா, கென்னத் மற்றும் முத்துலட்சுமி ஆகியோருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, ​​முத்துலட்சுமி அரிவாளால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. கொலைக்குப் பிறகு குளியலறையில் இரத்தக் கறைகளைக் கழுவியதாகவும் கூறப்படுகிறது. பின்னர் வீட்டுக்கு வந்த சோமசுந்தர் மற்றும் சுப்ரியாவும் வீட்டுக்கு வந்த நிலையில், அதே ஆயுதத்தால் அவர்களையும் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.

பலத்த காயங்கள் இருந்தபோதிலும், சோமசுந்தர் வீட்டிலிருந்து வெளியே ஓடிச் சென்று உதவி கோரியதாகத் தெரிவிக்கப்படுகிறது. பின்னர் அவரும் உயிரிழந்ததாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், ஸ்வேதா மற்றும் கென்னித் ஆகியோரிடம் தீவிர விசாரணையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். சொத்து தகராறில் சொந்த பெற்றோர் மற்றும் சகோதரியை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.