–
ஜனநாயகன் பட தயாரிப்பாளரான கே. வெங்கட் நாராயணா தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அமைச்சருக்கு நிகரான இந்த பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அதிமுக ஐடி விங் இந்த நியமனத்திற்கு கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் ஜனநாயகன் பட தயாரிப்பாளருக்கு அரசு பொறுப்பு வழங்கப்பட்டு இருப்பது சர்ச்சைகளை கிளப்பியுள்ளது. அதாவது தயாரிப்பாளர் கே. வெங்கட் நாராயணா (K. Venkat Narayana) தமிழ்நாடு அரசின் டெல்லியின் புதிய சிறப்புப் பிரதிநிதியாக (Special Representative) அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்டு இருக்கிறார். இது தற்போது சர்ச்சைகளை உண்டாக்கியுள்ள நிலையில், அதிமுக ஐடி விங் இந்த நியமனத்தை விமர்சித்து பதிவு ஒன்றினை பகிர்ந்துள்ளது.
தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி பொறுப்பு என்பது அமைச்சருக்கு இணையான பதவியாகும். இப்படியான நிலையில் இந்த பொறுப்புக்கு தயாரிப்பாளர் கே. வெங்கட் நாராயணா நியமனம் செய்யப்பட்டுள்ளார். ரியல் எஸ்டேட் அதிபரும், கே. வி. என் புரொடக்சன்ஸ்’ (KVN Productions) என்ற திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்துடைய நிறுவனருமான இவர் எச் வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ஜனநாயகன் படத்தினை தயாரித்துள்ளார்.
இப்படம் சென்சார் பிரச்சனை காரணமாக இன்னமும் ரிலீஸ் ஆகாமல் இருக்கிறது. இதனிடையில் முன்னதாக ஜோசப் விஜய் ஆட்சியமைக்க கவர்னரிடம் உரிமை கோர சென்ற சமயத்தில் கே. வெங்கட் நாராயணாவும் உடன் சென்றிருந்தார். இதுவே சர்ச்சைகளை கிளப்பி இருந்த நிலையில், விமர்சனங்களை குவித்தது. இப்படியான நிலையில் தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி என்ற பதவி இவருக்கு வழங்கப்பட்டு இருக்கிறது.
இப்பதவி என்பது மாநிலத்தின் நலன்களை பேணவும், ஒன்றிய அரசுடன் சுமூகமான உறவை மேம்படுத்தவும் உருவாக்கப்பட்ட முக்கிய பொறுப்பாகும். இந்நிலையில் தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி பதவியில் தயாரிப்பாளர் கே. வெங்கட் நாராயணா நியமனம் செய்யப்பட்டு இருப்பதை விமர்சித்து அதிமுக ஐடி விங் சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு ஒன்றினை பகிர்ந்துள்ளது.
அதில் கூறப்பட்டு இருப்பதாவது, கர்நாடக காங்கிரஸ் அரசின் Proxy Government-ஆக தமிழகத்தில் உள்ள பொய்க்கால் குதிரை அரசு? செயல்படுகிறதா என்ற கேள்வியை முன்வைத்துள்ளது. மேலும் தமிழ்நாட்டை சாராத கர்நாடக மாநிலத்தை சார்ந்த திரைப்பட தயாரிப்பாளரை தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக நியமித்த்து ஏன்? உங்களுடைய வெளிவராத படத்துடைய தயாரிப்பாளர் என்ற தகுதி இருந்தால் போதுமா? என்றும் அதிமுக ஐடி விங் விமர்சித்துள்ளது.
அதோடு மேகதாது அணை பிரச்சனை தமிழ்நாடு, கர்நாடகத்திற்கும் இடையில் நிலவி வருகிறது. இந்த வேளையில் தமிழகத்தில் உள்ள பொய்க்கால் குதிரை அரசுடைய போக்கு ஒட்டுமொத்தமாக தமிழகத்திற்கு எதிராகவே இருப்பது ஏன்? தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டும் உச்சநீதிமன்ற தீர்ப்பினை மழுங்கடிக்கும் வகையில் புதிய ஆணையம் என்ற பெயரில் ஒரு இடைச்செருகளல் தீர்மானத்தை நிறைவேற்றியது இந்த ஆச்சரியக்குறி அரசு.
தற்போது கர்நாடகத்தை சார்ந்த, பெங்களூரில் அலுவலகம் வைத்து படங்கள் தயாரிக்கும் ஒருவரை தமிழ்நாடு அரசின் சிறப்பு பிரதிநிதியாக அனுப்புவது தமிழ்நாட்டின் உரிமைகளை எப்படி காக்கும் என்பதை மக்களுக்கு இன்றைய முதல்வர் விளக்க வேண்டும். இவ்வாறு அதிமுக ஐடி விங் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் வெங்கட நாராயணா நியமனத்திற்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனும் கண்டனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.



