ஜிம் ஓனரை மிரட்டி ரூ.4.5 லட்சம் பறித்த தம்பதி

வேலூர் அருகே 35 வயதான பெண் ஒருவர் சொந்தமாக ஜிம் நடத்தி வருகிறார். கடந்த வருடம் இந்த ஜிம்மில் சத்துவாச்சாரியைச் சேர்ந்த எப்சியா (33) என்ற பெண் வந்து சேர்ந்துள்ளார். தனியார் ஆஸ்பத்திரியில் துப்புரவு வேலை செய்து வந்த எப்சியா, ஜிம் உரிமையாளரிடம் ரொம்பவே நெருக்கமாக பழகியிருக்கிறார். தனது கணவருக்கு சரியான வருமானம் இல்லை என்று கூறி, அடிக்கடி அவரிடம் அழுது புலம்பி உதவியும் கேட்டிருக்கிறார்.

இந்த நிலையில், போன வருடம் ஜூன் மாதம் தனது மகனின் பிறந்தநாள் விழாவுக்கு கண்டிப்பாக வரவேண்டும் என்று ஜிம் உரிமையாளரை எப்சியா வற்புறுத்தி அழைத்துள்ளார். அவரும் அதை நம்பி எப்சியாவின் வீட்டிற்குச் சென்றிருக்கிறார். அங்கே எப்சியாவும், அவருடைய கணவர் மணிவண்ணனும் சேர்ந்து அந்தப் பெண்ணுக்கு குடிக்க குளிர்பானம் கொடுத்துள்ளனர். அதில் மயக்க மருந்து கலந்திருந்ததால், குடித்த சில நிமிடங்களிலேயே அந்தப் பெண் மயங்கி விழுந்துள்ளார்.

அவர் மயங்கியதை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட மணிவண்ணன், அந்தப் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதை எப்சியா தனது செல்போனில் வீடியோவாகவும், புகைப்படங்களாகவும் எடுத்துள்ளார். மயக்கம் தெளிந்து எழுந்த அந்தப் பெண் தனக்கு நடந்த கொடூரத்தை அறிந்து கதறி அழுதுள்ளார். அப்போது அந்த தம்பதி, “இதை வெளியில் சொன்னால் இந்த வீடியோவை இன்டர்நெட்டில் வெளியிட்டு விடுவோம் என்று மிரட்டியுள்ளனர்.

மானம் போய்விடுமே என்ற பயத்தில் அந்தப் பெண் யாரிடமும் சொல்லாமல் அமைதியாக இருந்துள்ளார். ஆனால், இந்த தம்பதியோ அந்த வீடியோவை காட்டி கடந்த 6 மாதமாக அவரை மிரட்டத் தொடங்கினர். அவரிடமிருந்து கொஞ்சம் கொஞ்சமாக 4 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணம், நகைகள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களைப் பறித்துள்ளனர். ஒரு கட்டத்திற்கு மேல் கொடுக்க பணம் இல்லாமல் அந்தப் பெண் திணறிய போதும் மிரட்டல் நின்றபாடில்லை.

இனிமேல் பொறுக்க முடியாது என்று துணிந்த அந்தப் பெண், வேலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் தம்பதியின் இந்த அராஜகம் அத்தனையும் வெளிச்சத்திற்கு வந்தது. உடனடியாக மணிவண்ணன் மற்றும் எப்சியா ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

அவர்களது செல்போன்களை பறிமுதல் செய்துள்ள போலீசார், இதேபோல வேறு யாரையாவது மிரட்டி பணம் பறித்துள்ளார்களா என்ற கோணத்தில் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். இந்த சம்பவம் வேலூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.