கட்டிலில் தன்னுடன் நித்திரை செய்த மகளை, கள்ளக்காதலனுடன் இணைந்து பலாத்காரமாக வாயை மூடி துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில், சிறுமியின் தாய் மற்றும் அவரது கள்ளக்காதலன் ஆகிய இருவரையும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அம்பாறை மாவட்டம், கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நற்பிட்டிமுனைப் பகுதியில் கடந்த 2026.03.24 அன்று இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தின் பின்னர் சுமார் 3 மாத காலமாக தலைமறைவாகியிருந்த சந்தேக நபரான கள்ளக்காதலன் மற்றும் சிறுமியின் தாய் ஆகியோர் கைது செய்யப்பட்டு, கல்முனை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது:
50 வயதுடைய சந்தேக நபர், சமூக வலைத்தளங்களான ‘IMO’ மற்றும் ‘WhatsApp’ ஊடாக திருமணமான பெண் ஒருவருடன் தொடர்பை ஏற்படுத்தியுள்ளார்.
தம்புள்ளை – கலேவலைப் பகுதியைச் சேர்ந்த இப்பெண்ணிற்கு 18 வயதில் ஒரு மகனும், 14 வயதில் ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையிலேயே, அப்பெண் சமூக வலைத்தளம் ஊடாக ஏற்பட்ட பழக்கத்தினால், தனது 14 வயது மகளைத் தன்னுடன் அழைத்துக்கொண்டு கல்முனை – நற்பிட்டிமுனைப் பகுதிக்கு வந்துள்ளார்.
அங்கு தனது 50 வயதுடைய கள்ளக்காதலனை அவர் சந்தித்துள்ளார். அதனைத் தொடர்ந்து, தாயும் மகளும் தங்குவதற்காக கிராம உத்தியோகத்தரின் உதவி ஊடாக வாடகைக்கு வீடு ஒன்று பெறப்பட்டு, அவர்கள் அங்கு தங்கியிருந்துள்ளனர்.
குறித்த வாடகை வீட்டில் உள்ள ஒரு கட்டிலிலேயே இவர்கள் மூவரும் உறங்கியுள்ளனர். சம்பவத்தன்று நள்ளிரவில் தாயுடன் உடலுறவில் ஈடுபட்ட கள்ளக்காதலன், சில மணித்தியாலங்களின் பின்னர் அருகில் உறங்கிக்கொண்டிருந்த 14 வயது சிறுமியையும் துஷ்பிரயோகம் செய்ய முயன்றுள்ளார்.
இதன்போது அச்சிறுமி பயந்து கூச்சலிட்ட வேளையில், தாய் உடனடியாகச் செயற்பட்டு சிறுமியின் வாயைப் பலவந்தமாக மூடி, கள்ளக்காதலனின் துஷ்பிரயோகத்திற்கு ஒத்தாசை புரிந்துள்ளதாகப் பொலிஸ் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கமைய விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், தலைமறைவாகியிருந்த 50 வயதான பிரதான சந்தேக நபரை வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆலங்குளம் பகுதியில் வைத்து கடந்த 03.06.2026 அன்று கைது செய்தனர். அத்துடன், அதற்கு உடந்தையாக இருந்த தாயும் கைது செய்யப்பட்டார்.
கல்முனைப் பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே. இப்னு அசாரின் வழிகாட்டலில், கல்முனை பொலிஸ் நிலையத் தலைமைப் பொறுப்பதிகாரியின் மேற்பார்வையில், கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவின் பொறுப்பதிகாரி திருமதி எஸ்.பி.என்.எம். சுவர்ணகாந்தி, உப பொலிஸ் பரிசோதகர் குமாரசிங்க மற்றும் பொலிஸ் சாஜன் ஏ. ஆதம்பாவா உள்ளிட்ட சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவு உத்தியோகத்தர்கள் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், இச்சம்பவத்தினால் பாதிக்கப்பட்ட சிறுமி, தற்போது வெளி மாவட்டம் ஒன்றில் உள்ள பாதுகாப்பான சிறுவர் நன்னடத்தை நிலையம் ஒன்றில் மருத்துவப் பரிசோதனைகளுக்காக தங்கவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.




