கானாவில் பெருவெள்ளம் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது.

..
மேற்கு ஆப்ரிக்க நாடான கானா-வில் வரலாறு காணாத கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதன் காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் காட்டாறு போல சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. கானா நாட்டின் தலைநகரான அக்ராவிலும் (Accra) அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் கொட்டிய கனமழை காரணமாக ஏற்பட்ட கடுமையான வெள்ளப்பெருக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. சாலைகள் நீரில் மூழ்கி, போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ளதன் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டு உள்ளது.

கனமழை காரணமாக பெருக்கெடுத்த வெள்ளம் காரணமாக பல குடியிருப்புப் பகுதிகளும், கடைகளும் நீரில் மூழ்கின. கடும் வெள்ளத்தினால் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்த நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்ததால், அங்கு வசித்தவர்கள் வேறு இடத்திற்கு வெளியேறவும், தங்கள் உடைமைகளை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்ற வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டது.

இதனிடையே கனமழையின் போது அக்ராவில் மீண்டும் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட மோசமான வடிகால் அமைப்புகள், கழிவு அகற்றுதலில் இருக்கும் பிரச்சனைகள் மற்றும் விரைவான நகரமயமாக்கல் உள்ளிட்ட பல காரணங்கள் முக்கிய பங்கு வகிப்பதாக அப்பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டி உள்ளனர். இதனிடையே கானாவின் தேசிய பேரிடர் மேலாண்மை அமைப்பு (NADMO) வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.