காசாவின் பல்வேறு பகுதிகளில் இஸ்ரேல் நேற்று திங்கட்கிழமை (29) நடத்திய ட்ரோன் தாக்குதல்களில் 8 பேர் உயிரிழந்ததோடு, சுமார் 20 பேர் படுகாயமடைந்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்தத் தாக்குதலில் 2 குழந்தைகள் உட்பட 8 பேர் உயிரிழந்ததாக காசா சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
காசாவின் கான் யூனிஸ், மத்திய காசா, தெற்கு காசா ஆகிய பகுதிகளில் ஹமாஸ் ஆயுதக்குழுவினரை குறிவைத்தே தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
2023ஆம் ஆண்டில் ஹமாஸ் ஆயுதக்குழு இஸ்ரேலுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியதில் 1200 பேர் உயிரிழந்ததோடு, 251 பேர் பணயக் கைதிகளாக கடத்திச் செல்லப்பட்டனர்.
அதனையடுத்து, ஹமாஸை குறிவைத்து இஸ்ரேல் காசாவில் பதில் தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில் காசாவில் 73 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
இதையடுத்து, இரு தரப்புக்கும் இடையே போர் நடவடிக்கைகள் தீவிரமடைந்தன.
அதன் பின்னர், இரு தரப்புக்கும் இடையே அமைதி ஒப்பந்தம் அமுல்படுத்தப்பட்டது. இருப்பினும், காசாவில் செயற்பட்டு வரும் ஹமாஸ் குழுவினரை குறிவைத்து இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. அதன் தொடர்ச்சியாகவே நேற்றும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியிருந்தது.



