ஈராக் நாட்டில் உள்ள தனது அனைத்துப் படைகளையும் செப்.30-க்குள் முழுமையாக திரும்பப் பெறுவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. 2003-ம் ஆண்டு சதாம் ஹுசைனை வீழ்த்த அமெரிக்கா தொடங்கிய ராணுவ நடவடிக்கை, 23 ஆண்டுகளுக்குப் பிறகு முழுமையாக முடிவுக்கு வருகிறது. ஈராக்கின் அனைத்து ராணுவ தளங்களையும் அந்நாட்டு அரசிடம் ஒப்படைப்பதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.
ஈரானின் மின் நிலையங்கள் மற்றும் பாலங்களை தகர்ப்போம் என அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளதால் இரு நாடுகளிடையே போர் பதற்றம் உச்சமடைந்துள்ளது. அமெரிக்காவிற்கும் ஈரான் நாட்டிற்கும் இடையே நீடித்து வந்த மோதல் போக்கின் காரணமாக, இரு நாடுகளும் கடந்த ஜூன் 17ம் தேதி மேற்கொண்ட ‘இஸ்லாமாபாத் புரிந்துணர்வு ஒப்பந்த’ போர்நிறுத்த உடன்படிக்கை தற்போது முழுமையாக முறிந்துள்ளது. ஈரான் நாட்டின் அனைத்து துறைமுகங்கள் மற்றும் கடற்கரைப் பகுதிகளை குறிவைத்து அமெரிக்கா கடுமையான கடற்படை முற்றுகையை மீண்டும் அமல்படுத்தியதை அடுத்து இந்த ஒப்பந்தம் கைவிடப்பட்டது.
அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு பதிலடியாக, ஈரான் நாட்டின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை பஹ்ரைனில் உள்ள அமெரிக்காவின் ஐந்தாவது கடற்படை தலைமையகம், குவைத் மற்றும் ஜோர்டானில் உள்ள ராணுவ தளங்களை குறிவைத்து ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் கடுமையான பதிலடி தாக்குதல்களை நடத்தியது. இதன் காரணமாக, சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்த ஹார்முஸ் ஜலசந்தி வழியாக செல்லும் கப்பல்களின் போக்குவரத்து கடந்த 2 மாதங்களில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளதோடு, உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடந்த 4 வாரங்களில் இல்லாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
இந்நிலையில், அமெரிக்க ராணுவத்தின் சென்ட்காம் பிரிவினர் ஈரான் மீது தொடர்ந்து 4 நாட்களாக போர் விமானங்கள் மற்றும் ட்ரோன்கள் மூலம் 7 மணி நேரம் தொடர் வான்வழித் தாக்குதலை நடத்தி அதன் ஏவுகணை தளங்களை அழித்துள்ளனர். இந்த சூழ்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பாக்ஸ் நியூஸ் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், பேச்சுவார்த்தைக்கு ஈரான் வராவிட்டால் அடுத்த வாரம் முதல் அந்நாட்டின் உள்கட்டமைப்புகள் மீது கடுமையான தாக்குதல் நடத்தப்படும் என்று எச்சரித்துள்ளார்.
‘
இதுகுறித்து அதிபர் டிரம்ப் கூறுகையில், ‘நான் போதும் என்று சொல்லும் வரை இந்த தாக்குதல்கள் தொடரும்; அடுத்த வாரம் அவர்களுக்கு நிலைமை மிகவும் மோசமாகும்; அவர்களின் அனைத்து மின் நிலையங்களையும் பாலங்களையும் தகர்ப்போம்’ என்று கூறியுள்ளார். இதற்கிடையே, ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரான் அல்லாத பிற வணிகக் கப்பல்களுக்கு 20 சதவீதம் பாதுகாப்பு கட்டணம் விதிக்கும் சர்ச்சைக்குரிய முடிவை டிரம்ப் திடீரென திரும்பப் பெற்றுள்ளார். ஆனால், அமெரிக்காவுடன் தங்களுக்கு இனி எவ்வித பேச்சுவார்த்தையும் கிடையாது என்றும், ஹார்முஸ் ஜலசந்தி மீது முழு போர்க்கால இறையாண்மையை நிலைநாட்டுவோம் என்றும் ஈரானின் வெளியுறவுத்துறை துணை அமைச்சர் காசிம் கரீபாபாடி திட்டவட்டமாக அறிவித்துள்ளார். எனவே, இரு நாடுகளிடையே போர் பதற்றம் உச்சமடைந்துள்ளது.



