ஈரான் மீது அமெரிக்கா திடீர் தாக்குதல்-தரைமட்டமான விமான நிலையம், பாலங்கள்!

 

அமெரிக்கா இஸ்ரேல் கூட்டுத்தாக்குதலால் ஈரான் கடுமையாக பாதிப்பை சந்தித்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் நடந்த தாக்குதலில் ஈரானின் உச்சத் தலைவர் மற்றும் அரசு துறை அதிகாரிகள் உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து சர்வதேச நாடுகள் கொடுத்த அழுத்தத்தின் காரணமாக போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஈரான் நடவடிக்கையில் ஈடுப்பட்டது. ஆனால், அலி கமேனியில் மரணத்திற்கு பழிவாங்கப்படும் என்று ஈரான் தெரிவித்தது. இதனால் மீண்டும் போர் பதற்றம் அதிகரித்தது.

அமெரிக்கா -ஈரான் தாக்குதல்
இதனைத் தொடர்ந்து வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்கா ராணுவத் தளவாடங்களை குறிவைத்து ஈரான் கடந்த சில நாட்களுக்கு முன் வான்வழித்தாக்குதல் நடத்தியது. இதனையடுத்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் போர் நிறுத்த ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக அறிவித்தார். இந்த சூழலில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே கடந்த சில நாட்களாகப் போர் பதற்றம் உச்சத்தை எட்டியுள்ளது.

இந்த நிலையில், ஈரானின் தெற்குப் பகுதியில் உள்ள ஒரு முக்கிய விமான நிலையம் மற்றும் இரண்டு பாலங்கள் மீது அமெரிக்கப் படைகள் நேற்று நள்ளிரவு வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளன. இத்தகவலை ஈரானிய அரசு ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

ஹோமுஸ் நீரிணை அருகே குண்டுமழை
உலக அளவில் கச்சா எண்ணெய் போக்குவரத்திற்கு முக்கியப் பாதையாக விளங்கும் ‘ஹோமுஸ் நீரிணை’ அருகே அமைந்துள்ள ஈரானின் தெற்குப் பகுதிகளையே குறிவைத்து அமெரிக்கா இத்தாக்குதலை நடத்தியுள்ளது.

ஈரானின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள ‘இரன்ஷாஹர்’ விமான நிலையத்தை நோக்கி அமெரிக்கா ஏவுகணைகளை வீசித் தாக்கியுள்ளது. அப்போது அந்தப் பகுதியில் அடுத்தடுத்து மூன்று முறை பயங்கர வெடிச்சத்தம் கேட்டுள்ளது. இதில் குறைந்தது ஒரு ஏவுகணையாவது விமான நிலையத்தின் மீது நேரடியாக விழுந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளதாக ஈரானிய அரசுத் தொலைக்காட்சியான IRIB தெரிவித்துள்ளது.

போக்குவரத்துப் பாலங்கள் தரைமட்டம்
விமான நிலையம் மட்டுமின்றி, பண்டார் கமீர் மாவட்டத்தில் உள்ள கோஹுரெஸ்தான் கிராமம் மற்றும் ஷோர் ஆற்றின் அருகே அமைந்துள்ள இரண்டு முக்கியப் பாலங்கள் மீதும் அமெரிக்க போர் விமானங்கள் குண்டுகளை வீசித் தாக்கியுள்ளன. இதனால் அந்தப் பகுதியில் முழுமையான போக்குவரத்துத் துண்டிக்கப்பட்டுள்ளது.

தாக்குதலுக்கான காரணம் என்ன?
சர்வதேச கடல் பகுதியில் செல்லும் வணிகக் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்துவதைத் தடுக்கும் வகையிலும், கப்பல் போக்குவரத்தின் பாதுகாப்பை உறுதிசெய்யவும் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்க ராணுவத்தின் மத்திய கட்டளைப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஏற்கனவே, ஈரானின் மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் பாலங்களை அமெரிக்கா குறிவைத்தால், அதற்கு மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்க தளங்கள் மீது கடுமையான தாக்குதல் நடத்தி தகுந்த பதிலடி கொடுப்போம் என்று ஈரான் எச்சரித்திருந்தது. இந்த நிலையில், அமெரிக்கா நடத்தியுள்ள இந்த தற்போதைய தாக்குதல் இரு நாடுகளுக்கு இடையேயான போர்ச் சூழலை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.

உலக நாடுகள் அதிர்ச்சி
மத்திய கிழக்கு ஆசியாவில் ஏற்கனவே இஸ்ரேல்-பாலஸ்தீனம் போன்ற பல்வேறு பிரச்சினைகளால் பதற்றம் நிலவி வரும் சூழலில், இப்போது நேரடியாக அமெரிக்காவும் ஈரானும் வான்வழித் தாக்குதலில் மோதிக் கொண்டிருப்பது உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கச்சா எண்ணெய் விலை உயர்வு அச்சம்:
ஹோமுஸ் நீரிணைப் பகுதியில் போர்ச் சூழல் உருவாவதால், உலக நாடுகளுக்கான கச்சா எண்ணெய் விநியோகம் தடைபட்டு, பெட்ரோல், டீசல் விலைகள் சர்வதேச அளவில் கடுமையாக உயரக்கூடும் எனப் பொருளாதார வல்லுநர்கள் அஞ்சுகின்றனர்.