அமெரிக்காவில் ராணுவ விமான விபத்தில் 8 வீரர்கள் பலி

 

தெற்கு கலிபோர்னியாவில் பி-52 ரக குண்டு வீச்சு விமானம் விபத்துக்குள்ளாகி தீப்பிடித்து எரிந்ததில் அதில் இருந்த விமானி உட்பட 8 பேர் உயிரிழந்தனர். அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ்க்கு வடக்கே உள்ள எட்வர்ட்ஸ் விமானப்படை தளத்தில் நேற்று காலை 11.20மணியளவில் வழக்கமான சோதனைப் பயணத்திற்காக விமானப்படைக்கு சொந்தமான பி-52 ரக குண்டு வீச்சு விமானம் ஒன்று புறப்பட்டது. புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விமானம் விபத்துக்குள்ளாகி தீப்பிடித்து முழுவதுமாக எரிந்து நாசமானது. விமானத்தின் சிதைந்த பாகங்கள் மட்டுமே எஞ்சியிருந்தன.

விமானப்படை தளத்தில் உள்ள ஓடுபாதைக்கு அருகில் கருகிய பாலைவனப் பகுதியில் இருந்து கரும்புகை வெளியேறியது. அந்த பகுதியில் அவசரகால வாகனங்களும் விரைந்தன. விமானத்தில் இருந்தவர்களில் அரசு ஒப்பந்ததாரர்கள் மற்றும் சீருடை அணிந்த ராணுவத்தினரும் அடங்குவர். விபத்து தொடர்பான காட்சிகளை ஆய்வு செய்ததில் விமானத்தில் பயணித்த யாரும் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை என்று சந்தேகிக்கப்படுகின்றது. விபத்துக்கான உண்மையான காரணம் உடனடியாக தெரியவில்லை. விபத்துக்குள்ளான விமானம் ரேடார் நவீனமயமாக்கல் திட்டத்திற்கு ஆதரவளிக்கும் பணியில் ஈடுபட்டு இருந்துள்ளது.