ஹிஸ்புல்லா அமைப்பை தடுக்காவிட்டால் ஈரான் மீது கடும் தாக்குதல் நடத்தப்படும்

 

அமெரிக்கா-ஈரான் இடையே போர் நிறுத்தத்திற்கான இடைக்கால ஒப்பந்தம் கடந்த 19ம் தேதி கையெழுத்தானது. இதைத் தொடர்ந்து, ஈரானின் அணுசக்தி திட்டம், அதன் மீது விதிக்கப்பட்டுள்ள தடைகள் மற்றும் லெபனானில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல் உள்ளிட்ட முக்கிய விவகாரங்களில் தீர்வு கண்டு, மேற்கு ஆசியாவில் அமைதியை மீட்டெடுக்க 60 நாள் கால அவகாசம் வகுக்கப்பட்டுள்ளது. இதில் அமெரிக்கா-ஈரான் பேச்சுவார்த்தை நடத்தி இறுதி ஒப்பந்தத்தை எட்ட திட்டமிட்டுள்ளன.

இதற்கான தொழில்நுட்ப விவகாரங்கள் தொடர்பான பேச்சுவார்த்தை சுவிட்சர்லாந்தின் லுசெர்ன் ஏரியை ஒட்டிய பர்ஜென்ஸ்டாக் ரிசார்ட்டில் நேற்று தொடங்கியது. இதில், அமெரிக்கா தரப்பில் துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் தலைமையிலான குழுவினரும், ஈரான் தரப்பில் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாப், வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி உள்ளிட்டோர் கொண்ட குழுவினரும் பங்கேற்றனர்.

இந்த நேரடி சந்திப்பில் மத்தியஸ்த நாடுகளாக பாகிஸ்தான் தரப்பில் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், முப்படை தலைமை தளபதி ஆசிப் முனீர் மற்றும் கத்தார் நாட்டின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இந்த பேச்சுவார்த்தை கடந்த வெள்ளிக்கிழமை நடக்க இருந்த நிலையில் லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பினர் மீது இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து நடத்தி வரும் தாக்குதலால் தாமதமானது.

லெபனான் மீதான இஸ்ரேல் தாக்குதல், அமெரிக்கா-ஈரான் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மீறும் செயல் என கண்டனம் தெரிவித்த ஈரான், மீண்டும் ஹார்முஸ் ஜலசந்தியை நேற்று முன்தினம் மூடியது. இந்த சூழலில் சுவிட்சர்லாந்து பேச்சுவார்த்தைக்காக வந்த அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் அளித்த பேட்டியில், ‘ ‘இப்போது நம் முன் உள்ள கேள்வி என்னவென்றால், நாம் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்க முடியுமா? மத்திய கிழக்கில் உறவுகளை நிரந்தரமாக மாற்றியமைக்க முடியுமா அல்லது பழைய முறையிலேயே செயல்படத் தொடங்குவோமா? என்பதுதான். பழைய முறை நமது விருப்பம் அல்ல’’ என்றார்.

பேச்சுவார்த்தைகளுக்கு முன்னதாக, ஈரான் குழுவின் தலைவரான பாகாயி தனது எக்ஸ் பதிவில், ‘‘புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் ஒப்புக் கொள்ளப்பட்ட விஷயங்களை செயல்படுத்துவதற்கு அனைத்து முனைகளிலும் போர் முடிவுக்கு வர வேண்டும். இல்லாவிட்டால் இறுதி ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தை கட்டத்திற்குள் நுழைவது சாத்தியமில்லை’’ என எச்சரித்தார். இது, லெபனான் மீது இஸ்ரேல் தனது ஆக்கிரமிப்பு நடவடிக்கையை நிறுத்த வேண்டுமென்பதில் ஈரான் உறுதியாக இருப்பதை காட்டுகிறது.

இந்த சூழலில் நடந்த ஆரம்பகட்ட பேச்சுவார்த்தை முடிவுகள் குறித்த தகவல்கள் உடனடியாக வெளியாகவில்லை. இதில், லெபனான்-இஸ்ரேல் மோதலே முக்கிய ஆலோசனையாக இருந்திருக்கும் என கூறப்படுகிறது. இதற்கிடையே, பேச்சுவார்த்தைக்கு மத்தியில் அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது ட்ரூத் சமூக ஊடக பதிவில், ‘‘லெபனானில் உள்ள அதிக ஊதியம் பெறும் ஈரானின் பினாமிகள் பிரச்னைகளை உருவாக்குவதை ஈரான் உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். அவர்கள் அவ்வாறு செய்யாவிட்டால், கடந்த வாரம் நாங்கள் ஈரானை தாக்கியது போல, அதை விடக் கடுமையாக மீண்டும் தாக்குவோம்’’ என மிரட்டல் விடுத்தார். பேச்சுவார்த்தைக்கு மத்தியில் டிரம்பின் மிரட்டல் மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

* போருக்கு தயார்: இஸ்ரேல் உத்தரவு

லெபனானில் ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா அமைப்பினருக்கும், இஸ்ரேல் ராணுவத்திற்கும் நடந்து வரும் போர் அமெரிக்கா-ஈரான் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு ஆபத்தமாக மாறி உள்ளது. இந்த நிலையில், லெபனானில் அமலில் உள்ள போர் நிறுத்தம் நிலையற்றதாக இருப்பதாகவும், ஹிஸ்புல்லாவுடனான மோதல் மீண்டும் தொடங்கக் கூடும் என்பதால் அங்குள்ள இஸ்ரேலிய படைகள் உயர்மட்ட தயார் நிலையில் இருக்க வேண்டுமென இஸ்ரேல் ராணுவ தலைமை தளபதி எயல் ஜமீர் நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.