பாகிஸ்தான் 55 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கடலில் இறங்கிய நீர்மூழ்கிக் கப்பல்

 

சீனாவில் தயாரிக்கப்பட்ட புதிய ஹங்கோர் வகை நீர்மூழ்கிக் கப்பல் ஜூன் 11 அன்று கராச்சிக்கு வந்தடைந்தது. இதை வங்காள விரிகுடா பகுதியில் பணியில் ஈடுபடுத்த பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளது. இதே பெயரைக் கொண்ட பழைய பிஎன்எஸ் ஹங்கோர், 1971 இந்தியா-பாகிஸ்தான் போரின் போது இந்திய கடற்படையின் ஐஎன்எஸ் குக்ரி போர்க்கப்பலை மூழ்கடித்தது குறிப்பிடத்தக்கது.

சீனாவில் தயாரிக்கப்பட்ட புதிய ஹங்கோர் வகை நீர்மூழ்கிக் கப்பல்
1971-ல்,இந்திய-பாகிஸ்தான் இடையே போர் நடந்தது.டிசம்பர் 6 அன்று, பாகிஸ்தான் நீர்மூழ்கிக் கப்பல் பிஎன்எஸ் ஹங்கோர், குஜராத் கடற்கரையோரம் இயங்கி வருவதை இந்திய கடற்படை கண்டறிந்தது. அதைத் தொடர்ந்து ஐஎன்எஸ் குக்ரி மற்றும் ஐஎன்எஸ் கிர்பான் ஆகிய கப்பல்கள் அனுப்பப்பட்டன. ஆனால் ஹங்கோரின் ரேடார் மற்றும் கண்டறியும் திறன் அதிகமாக இருந்ததால், இந்திய கப்பல்களை முன்கூட்டியே கண்டுபிடித்தது.

பின்னர் ஹங்கோர் ஏவிய டார்பிடோ தாக்குதலில் ஐஎன்எஸ் குக்ரி சில நிமிடங்களிலேயே மூழ்கியது. இந்த தாக்குதலில் கப்பலின் கேப்டன் மகேந்திரநாத் முல்லா உட்பட 194 பேர் உயிரிழந்தனர். சுதந்திரத்திற்குப் பிறகு போர்க்காலத்தில் இந்தியக் கடற்படைக் கப்பல் ஒன்று மூழ்கடிக்கப்பட்டது அதுவே முதல் முறையாகும். மேலும் இது பாகிஸ்தான் கடற்படையின் மிகவும் கொண்டாடப்பட்ட கடற்படைத் தாக்குதல்களில் ஒன்றாகவும் அமைந்தது. இருப்பினும் 1971 போரில் பாகிஸ்தான் பெரும் தோல்வியைச் சந்தித்தது. அந்தப் போரில் பாகிஸ்தான் வங்காள விரிகுடாவில் தனது ஆதிக்கத்தை இழந்தது.

50 ஆண்டுகள் கழித்து மீண்டும் கப்பலை வாங்கிய பாகிஸ்தான்
1971-ஆம் ஆண்டின் படுதோல்விக்குப் பிறகு ஐம்பத்தைந்து ஆண்டுகள் கழித்து,தற்போது சீனாவின் China Shipbuilding and Offshore International Corporation நிறுவனம் தயாரித்துள்ள புதிய ஹங்கோர் வகை நீர்மூழ்கிக் கப்பலை பாகிஸ்தான் கடற்படை பெற்றுள்ளது. 2015-ஆம் ஆண்டு சீனாவுடன் சுமார் 5 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான ஒப்பந்தத்தின் கீழ் 8 ஹங்கோர் வகை நீர்மூழ்கிக் கப்பல்களை வாங்க பாகிஸ்தான் முடிவு செய்தது. அவற்றில் முதல் கப்பல் தற்போது சேவைக்கு வந்துள்ளது.

பாகிஸ்தான் இந்த நீர்மூழ்கிக் கப்பல்களை வங்காள விரிகுடாவில் இயக்க விரும்புவதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று, 1971 போருக்குப் பிறகு இழந்த கடற்படை செல்வாக்கை மீண்டும் நிலைநிறுத்துவதாகும். மேலும், ஷேக் ஹசீனா பதவி நீக்கத்திற்குப் பிறகு வங்கதேசத்துடன் பாகிஸ்தானின் உறவு மேம்பட்டுள்ளதால், அந்தப் பகுதியில் தனது கடற்படை இருப்பை வலுப்படுத்தவும் பாகிஸ்தான் முயற்சித்து வருகிறது.

சீனா -பாகிஸ்தான் பாதுகாப்பு ஒப்பந்தம்
சீனா, ஹங்கோர் திட்டம், நவீன போர்க்கப்பல்கள் மற்றும் க்வாதர் துறைமுக மேம்பாடு உள்ளிட்ட பல வழிகளில் பாகிஸ்தான் கடற்படையை வலுப்படுத்தி வருகிறது. இதனால் இந்தியாவின் கிழக்கு கடற்படை கட்டளை மையம், அந்தமான்-நிக்கோபார் தளங்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களின் பாதுகாப்பு குறித்து புதிய கவலைகள் எழுந்துள்ளன.

பாதுகாப்பு நிபுணர்களின் கருத்துப்படி, பாகிஸ்தான் வங்காள விரிகுடாவில் தனது கடற்படை நடவடிக்கைகளை அதிகரித்தால், இந்தியா கடல்சார் கண்காணிப்பு, பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் கடற்படை திறன்களை மேலும் மேம்படுத்த வேண்டிய அவசியம் ஏற்படலாம் என்று கூறப்படுகிறது.