வீட்டிற்குள் பேய்களால் பாதுகாக்கப்படும் புதையல் ; இறுதியில் மந்திரவாதி

வீட்டிற்குள் பேயால் பாதுகாக்கப்பட்ட புதையல் இருப்பதாகவும்,பேய் மற்றும் தோஷங்களை நீக்கி புதையலை எடுத்த தருவதாகக் கூறி ஒரு பெண்ணிடமிருந்து 42 லட்சம் ரூபாயும் ஒரு பவுண் தங்கத்தையும் மோசடி செய்த ஐந்து பேரை சிலாபம் பிரிவின் விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவு கைது செய்துள்ளது.

கோட்டவெஹர, திகன்வெவ பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணொருவர் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட நீண்ட விசாரணையின் பின்னர் இந்த சந்தேகநபர்கள் குழு கைது செய்யப்பட்டுள்ளது.

முறைப்பாட்டாளரிடமிருந்து மோசடி செய்யப்பட்ட பணத்தில் 14 லட்சம் ரூபாயும் உருக்கப்பட்ட ஒரு பவுண் தங்கமும் சந்தேகநபர்களிடமிருந்து மீட்கப்பட்டுள்ளது.

அத்துடன், இந்த மோசடிச் செயலுக்கு அவர்கள் பயன்படுத்திய ஒரு மோட்டார் கார், ஒரு போலி இரத்தினக்கல் மற்றும் புதையலிலிருந்து எடுக்கப்பட்டதாகக் கூறி அவளுக்கு வழங்கப்பட்ட இரண்டு போலி புத்தர் சிலைகளும் பொலிஸ் பொறுப்பில் எடுக்கப்பட்டுள்ளன.

பொலிஸ் விசாரணைகளின் படி, பிரதான சந்தேகநபர் சம்பந்தப்பட்ட பெண்ணின் வீட்டிற்குச் சென்று ஸ்கேனர் கருவி மூலம் வீட்டுத் தோட்டத்தை பரிசோதித்துள்ளார்.

அப்போது அந்த வீட்டில் பேய் தோஷம் இருப்பதாகவும், வீட்டில் உள்ள பேயால் பாதுகாக்கப்படும் பெண்ணுக்கு உரிமையான ஒரு பெறுமதியான புதையல் இருப்பதாகவும் கூறி தோஷத்தை நீக்கி புதையலை எடுப்பதற்காக செலவாக 42 லட்சம் ரூபாயும் ஒரு பவுண் தங்கத்தையும் பெண்ணிடமிருந்து பெற்றுள்ளார்.

பின்னர் ஒரு மந்திரவாதியையும் மேலும் மூன்று பேரையும் அந்த வீட்டிற்கு அழைத்து வந்து ஒரு விசேட சாந்தி பூஜை நடத்தியுள்ளார்.

இந்த நடவடிக்கைகளின் போது, புதையலிலிருந்து எடுக்கப்பட்டதாகக் கூறி இரண்டு உலோக புத்த சிலைகளையும் சில இரத்தினக்கற்களையும் பெண்ணுக்கு வழங்கியுள்ளனர்.

அதன் பின்னர், இந்த சிலைகளையும் இரத்தினக்கற்களையும் தேவாலயத்திற்கு எடுத்துச் சென்று விசேட பூஜை நடத்தப்பட வேண்டும் என்று பிரதான சந்தேகநபர் தெரிவித்துள்ளார்.

அதன்படி குறித்த பெண் அங்கு சென்றாலும், சந்தேகநபர்கள் அங்கு வராததனால் சந்தேகத்தின் பேரில் அவள் தனக்குக் கிடைத்த பொருட்களைப் பரிசோதித்துள்ளார்.

அப்போது அந்த புத்த சிலைகள் எந்த மதிப்பும் இல்லாத சாதாரண உலோகத்தால் செய்யப்பட்டவை என்றும், இரத்தினக்கற்கள் போலியானவை என்றும் தெரியவந்ததையடுத்து அந்தப் பெண் பொலிஸாருக்கு முறைபாடளித்ததை தொடர்ந்து சந்தேகநபர்களைக் கைது செய்தனர்.