ஐரோப்பிய நாடுகளான பிரான்ஸ், ஸ்பெயின் மற்றும் இத்தாலியில் வரலாறு காணாத வகையில் வெப்ப அலை தீவிரமடைந்துள்ள நிலையில், வெப்ப அலை காரணமாக பிரான்ஸில் மட்டும் 40 பேர் உயிரிழந்துள்ளனர்.
உலகம் முழுவதும் வெப்ப அலையின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்தியாவிலும் அதன் தாக்கம் எதிரொலிக்கிறது. இந்த நிலையில், ஐரோப்பிய நாடான பிரான்ஸில் அண்மையில் வீசி வரும் மிகக் கடுமையான வெப்ப அலை காரணமாக நாட்டின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கியுள்ளது.
ஆப்பிரிக்காவின் சஹாரா பாலைவனப் பகுதியில் இருந்து வீசும் வெப்பக் காற்று ஐரோப்பா நோக்கி நகர்வதே. இந்தத் தீவிர வெப்ப அலைக்குக் காரணம் என்று வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பிரான்ஸ் வரலாற்றில் 1947-ஆம் ஆண்டிற்குப் பிறகு மிக அதிக வெப்பநிலை பதிவாகியுள்ளது. பிரான்ஸ் நாட்டின் பல பகுதிகளில் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸைக் கடந்து, சில இடங்களில் 44.3 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகியுள்ளது. குறிப்பாக, பிரான்ஸின் போர்டோ நகரில் வெப்பநிலை 49.1 டிகிரி செல்சியஸாக பதிவாகியுள்ளது.
இதன்காரணமாக குழந்தைகள், முதியவர்கள் உள்ளிட்டோர் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வெப்பத்தைத் தணிக்க பொதுமக்கள், ஏரிகள், ஆறுகள், கால்வாய்கள் உள்ளிட்ட நீர்நிலைகளுக்குப் படையெடுத்து வருகின்றனர்.
இந்தச் சூழலில் பிரான்ஸில் குளிக்கத் தடை விதிக்கப்பட்ட நீர்நிலைகளில் பொதுமக்கள் குளித்தபோது, நீரோட்டத்தின் வேகம் மற்றும் வெப்ப மாறுபாடுகள் காரணமாக 40 பேர் நீரில் மூழ்கி பலியாகியுள்ளனர் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
வெப்ப அலையின் தீவிரம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், பிரான்ஸ் அரசு, அவசர அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டிப் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
அதன்படி, பிரான்சின் 54 மாகாணங்களுக்கும், இத்தாலியின் ரோம், மிலன் உள்ளிட்ட 12 முக்கிய நகரங்களுக்கும் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், வெப்பத்தின் தாக்கம் காரணமாக சுமார் 1,350 பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.
அதேபோல், உலகப் புகழ்பெற்ற ஈபிள் கோபுரம் மற்றும் லூவ்ரே அருங்காட்சியகம் போன்ற சுற்றுலாத் தலங்களும் தங்களின் வேலை நேரத்தைக் குறைத்துக்கொண்டு முன்கூட்டியே மூடப்பட்டுள்ளன.




