யேமன் நாட்டின் செங்கடல் கடற்பரப்பில் பயணித்துக் கொண்டிருந்த வணிகச் சரக்குக் கப்பல் ஒன்று, அடையாளம் தெரியாத ஆயுதமேந்திய நபர்களினால் திடீரெனத் தாக்குதலுக்கு உள்ளாகியிருப்பதாகப் பிரித்தானிய கடற்படை அமைப்பு இன்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.
பிரித்தானிய கடற்படையின் கீழ் இயங்கும் ‘யுனைடெட் கிங்டம் மெரிடைம் ட்ரேட் ஆபரேஷன்ஸ்’ அமைப்பு இந்தத் தாக்குதல் சம்பவத்தை உறுதிப்படுத்தியுள்ளது
ஈரான் ஆதரவு ஹவுதி கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள யேமனின் பிரதான துறைமுக நகரான ஹொடைடாவுக்கு தென்மேற்கே சுமார் 30 கடல் மைல் (55 கிலோமீட்டர்) தொலைவில் இத்தாக்குதல் நடந்துள்ளது.
தாங்கள் “அடையாளம் தெரியாத ஆயுததாரிகளின் தாக்குதலுக்கு” உள்ளாகியிருப்பதாகக் கூறி அந்தக் குறிப்பிட்ட சரக்குக் கப்பல் அவசர அபாய எச்சரிக்கையை விடுத்ததாக பிரித்தானிய கடற்படை அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
இத்தாக்குதலின் பின்னணியில் உள்ளவர்கள் யார் மற்றும் கப்பலுக்கு ஏற்பட்டுள்ள சேத விபரங்கள் குறித்து சர்வதேச கடல்சார் பாதுகாப்பு அதிகாரிகள் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். தற்போதைய நிலவரப்படி, இந்தத் தாக்குதலுக்கு எந்தவொரு ஆயுதக் குழுவும் உடனடியாகப் பொறுப்பேற்கவில்லை.



