தங்களது அடுத்தகட்ட அரசியல் நகர்வுகளுக்காக தயாராகி வரும் கூட்டு எதிர்க்கட்சியின் முக்கிய பிரதிநிதிகள் குழுவொன்று புதன்கிழமை அரசியல் களத்தின் மூத்த தலைவரான ரணிலைச் சந்தித்தது. அவர்கள் வெறும் சினேகபூர்வ சந்திப்புக்காக மட்டும் அங்கு வரவில்லை.
அரசாங்கத்தின் தற்போதைய தன்னிச்சையான போக்கினால் நாட்டில் உருவாகி வரும் தீவிர அரசியல் மற்றும் சமூக நெருக்கடிகளுக்குத் தீர்வுகாணும் உறுதியான நோக்கத்துடனேயே ரணிலை நாடி வந்திருந்தனர்.
இந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு வருகை தந்தபோது, ரணில் ஏற்கனவே அரசியல் வியூகங்களில் நீண்ட அனுபவமிக்க சிலருடன் கூட்டு எதிர்க்கட்சியின் எதிர்கால அரசியல் நகர்வுகள் குறித்து தீவிர ஆலோசனையில் ஈடுபட்டிருந்தார். இவர்களின் வருகையைத் தொடர்ந்து, அந்த விவாதம் மேலும் உணர்வுபூர்வமான அரசியல் திசையை நோக்கி நகர்ந்தது.Politics
இந்த சந்திப்பின் முதன்மையான விடயமாக, தற்போதைய அரசாங்கத்தின் கீழ் பௌத்த மதத்திற்கும் அதன் கலாசாரத்திற்கும் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படும் அச்சுறுத்தல்களாகும். ஒரு நடைமுறைவாத பௌத்த தலைவர் என்ற ரீதியில், ரணிலுடன் இதுகுறித்து ஆழமாகப் கலந்துரையாடுவதே அந்த பாராளுமன்ற உறுப்பினர்களின் முக்கிய நோக்கமாக இருந்தது.
‘அரசாங்கம் வெசாக் பண்டிகையை உத்தியோகபூர்வமாக பிரகடனப்படுத்திய போதிலும், வழக்கமாக கொழும்பு வீதிகளில் காணப்படும் வெசாக் தோரணங்கள், தானசாலைகள் (தன்சல்) மற்றும் விளக்கொளிகள் போன்ற கலைநயங்களை இந்த முறை பார்க்க முடியவில்லை. கொழும்பு வீதிகள் முற்றாகவே வெறிச்சோடிப் போயிருந்தன,’ எனத் தான் நேரில் கண்ட யதார்த்தத்தை சுட்டிக்காட்டி வஜிர அபேவர்தன தனது உரையாடலைத் தொடங்கினார்.
இதற்கு மிகுந்த கவலையுடன் பதிலளித்த ரணில், சிங்களப் புத்தாண்டுக்கும் வெசாக் பண்டிகைக்கும் நேர்ந்த கதியை சுட்டிக்காட்டியதுடன், அடுத்து வரவிருக்கும் பொசொன் பண்டிகைக்கும் இதே போன்றதொரு துரதிர்ஷ்டவசமான நிலமைதான் ஏற்படுமோ என்று தனது ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தினார்.
இங்கு கருத்துத் தெரிவித்த சுபீஷ்வர பண்டார, அரசாங்கத்தின் பௌத்த விரோதக் கொள்கைகளுக்கு எதிராக அடிமட்டத்திலிருந்து ஒரு பௌத்த சக்தி தானாகவே கட்டியெழுப்பப்பட்டு வருவதாகச் சுட்டிக்காட்டினார்.
நாட்டின் பௌத்த மறுமலர்ச்சிக்காக பாரிய பங்களிப்பைச் செய்த மஹிந்த, மைத்திரி மற்றும் ரணில் போன்ற பலமிக்க தலைவர்களை அரசியல் ரீதியாகப் பழிவாங்குவதற்கும், அவர்களை வேட்டையாடுவதற்கும் அரசாங்கம் தயாராக இருப்பதாக இங்கு கலந்துரையாடப்பட்டது.
நிர்வாகம், நீதித்துறை மற்றும் பாதுகாப்புப் பிரிவுகளில் உயர் பதவிகளை வகிக்கும் பௌத்த மதப்பற்றுடைய நிபுணர்களை படிப்படியாக அந்தப் பதவிகளில் இருந்து நீக்குவதற்கான இரகசிய உத்தியொன்று திரைமறைவில் அரங்கேறி வருவதாக மான்னப்பெரும குற்றம் சாட்டினார்.
பௌத்தர்கள் அல்லாதவர்களை இந்தப் பதவிகளில் அமர்த்துவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் போதிலும், நாட்டின் ஏனைய மதத்தவர்கள் இவ்வாறான அவசியமற்ற மோதல்களை விரும்பாததால், அவர்கள் அரசாங்கத்தின் இந்த பிரித்தாளும் சூழ்ச்சிக்கு ஆதரவளிக்க மாட்டார்கள் என்று தலதா அத்துகோரல தனது நம்பிக்கையை வெளியிட்டார்.
‘தர்மாதிகரண’ (பௌத்த நீதிமன்றம்) சர்ச்சை
அண்மைக் காலமாக அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ‘தர்மாதிகரண’ (பௌத்த ஒழுக்காற்று நீதிமன்றம்) ஒன்றை அமைப்பது குறித்தும் இதன் போது கலந்துரையாடப்பட்டது. அவ்வாறான மத நீதிமன்றத்தை அமைப்பதற்கு அரசாங்கத்திற்கு எந்தவொரு சட்டபூர்வமான அல்லது தார்மீக ரீதியான அதிகாரமும் இல்லை என்பதை ஐக்கிய தேசியக் கட்சி ஏற்கனவே உத்தியோகபூர்வ அறிக்கை மூலம் தெளிவுபடுத்தியுள்ளது.
மேலும், பல்லேகம தேரர் தொடர்பான விவகாரமும் தற்போது பல்வேறு சர்ச்சைக்குரிய நிலைகளை எட்டியுள்ளதாக இச்சந்திப்பில் குறிப்பிடப்பட்டது.
அரசாங்கத்தின் தரப்பு வாதமாக மகாநாயக்க தேரர்களின் வேண்டுகோளுக்கு இணங்கவே பௌத்த ஒழுக்காற்று நீதிமன்றம் அமைப்பது குறித்து ஆலோசிக்கப்படுவதாக உள்ளது. ஆனால் சங்க சபையின் முக்கிய தேரர்கள், அவ்வாறானதொரு விடயமோ அல்லது பிக்குகளின் ஒழுக்கப் பிரச்சினைகள் குறித்தோ எந்தவொரு விவாதமும் நடைபெறவில்லை என்கின்றனர்.
பல்லேகம தேரர் எந்தவொரு முறையான குற்றப்பத்திரிகையும் இன்றி அவரது பதவிகளில் இருந்து திடீரென நீக்கப்பட்ட விவகாரம், கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பெரும் அதிருப்பதியை வெளியிட்;டனர்.
ரணில் விக்கிரமசிங்கவுடனான சந்திப்பின் போது இந்த விவகாரம் ஆழமாக ஆராயப்பட்டது. அப்போது கருத்து வெளியிட்ட ரணில், பிரித்தானியர் ஆட்சிக்காலத்தில் கூட இலங்கையின் பாரம்பரிய பௌத்த மதம் பற்றிய தெளிவான புரிதலுடனேயே சட்டங்கள் உருவாக்கப்பட்டன என்று சுட்டிக்காட்டியதுடன், தற்போதைய பௌத்த விழுமியங்களைப் பற்றிய அடிப்படை அறிவேதுமின்றி இவ்வாறான தன்னிச்சையான நகர்வுகளில் ஈடுபடுவதாகத் தனது நெற்றியைச் சுருக்கியவாறு கவலை வெளியிட்டார். South Asians & Diaspora
தர்மத்தின் மீது எவ்விதப் பிரச்சினையும் இல்லாத ஒரு சூழலில், அரசாங்கம் எதற்காக தர்மாதிகரண எனப்படும பௌத்த ஒழுக்காற்று நீதிமன்றம் ஒன்றை உருவாக்க முனைகிறது என்ற சட்டரீதியான தர்க்கத்தை ரணில் இங்கு முன்வைத்தார்.
இலங்கையின் அரசியலமைப்பின் படி சங்காதிக்கரண எனப்படும் மகா சங்கத்திற்கான ஒழுக்காற்று நீதிமன்றம் ஒன்றை அமைக்க மட்டுமே சட்டத்தில் இடமுண்டு என்றும், அரசாங்கம் கொண்டுவரத் துடிக்கும் பௌத்த ஒழுக்காற்று நீதிமன்றத்தை உச்ச நீதிமன்றம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது என்றும் அவர் விளக்கினார்.
இந்த விவகாரம் நீதிமன்றத்திற்குச் சென்றால் அது அரசியலமைப்பிற்கு முரணானது என தீர்ப்பளிக்கப்படுவது நிச்சயம் எனக் குறிப்பிட்ட ரணில், முன்னதாக விஜயதாச ராஜபக்ஷ கூட பௌத்த ஒழுக்காற்று நீதிமன்றத்திற்கான சட்ட வரைபையே தயாரித்திருந்தார் என்பதை நினைவூட்டினார்.
ஆன்மீக மற்றும் மத நடவடிக்கைகளைத் தங்களது முழுக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதே அரசாங்கத்தின் மறைமுக நோக்கம் என மான்னப்பெரும எழுப்பிய கேள்விக்கு ரணில் பதிலளித்தார். அப்போது குறுக்கிட்ட தொலவத்த, தேரர்களைக் கொலை செய்த குற்றவாளிகளுக்கு எதிராக முறையான நடவடிக்கை எடுக்காத அரசாங்கம், மகா சங்கத்தைக் கட்டுப்படுத்த இவ்வளவு ஆர்வம் காட்டுவது ஏன் என்று கேள்வி எழுப்பினார்.
சஜித்தின் மௌனமும் உறுப்பினர்களின் அதிருப்தியும்
பௌத்த மதக் கட்டமைப்பிற்கு இத்தனை பெரிய சவால்கள் ஏற்படும் போதும், பிரதான எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தில் வாய்மூடி மௌனமாக இருப்பது அங்கிருந்த பாராளுமன்ற உறுப்பினர்களிடையே ஆச்சரியத்தையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.
ரணிலுடன் தொடர்ந்து பேசி வரும் ஐக்கிய மக்கள் சக்தியின் சில பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட, சஜித்தின் இந்த மௌனப் போக்கு குறித்து தங்களது கடுமையான அதிருப்தியை இரகசியமாகப் பகிர்ந்து கொண்டுள்ளனர். இந்த பௌத்த ஒழுக்காற்று நீதிமன்றத்தை திரைமறைவிலிருந்து தயாரித்த அதிகாரிகள் யார் என்பதை கண்டறிய வேண்டும் என வலியுறுத்திய ரணில், தர்மத்தை அதிகார வர்க்கத்தால் எவ்வாறு கட்டுப்படுத்த முடியும் என கேள்வி எழுப்பினார்.
மாகாண சபை தேர்தல் வியூகமும் புதிய கூட்டணிகளும்
இதற்கிடையில், வரவிருக்கும் மாகாண சபை தேர்தலை இலக்காகக் கொண்டு பல முக்கிய மற்றும் பிரபல ஆளுமைகள் ரணிலைச் சந்தித்து ஆதரவு திரட்டி வருகின்றனர். பௌத்த வாக்கு வங்கியைக் கவரக்கூடிய பிரபல வர்த்தகக் கல்வி ஆசிரியர் ஒருவரும், மக்கள் மத்தியில் செல்வாக்குமிக்க முன்னாள் இராணுவத் தளபதி ஒருவரும் ஏற்கனவே ரணிலைச் சந்தித்து முக்கிய பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளனர்.
தற்போதைய அரசியல் சூழலில் கூட்டு எதிர்க்கட்சியுடன் இணைவதைத் தவிர சஜித்திற்கு வேறு வழியில்லை என்றும், நாமல் ராஜபக்ஷ கூட கூட்டு எதிர்க்கட்சியுடன் இணைந்து அரசியல் பயணத்தை முன்னெடுக்கவே அதிக விருப்பத்துடன் இருக்கிறார் என்றும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.Politics
அரசாங்கத்தின் ‘ரணில் பாணி’ அரசியல் வியூகம்
மாகாண சபை தேர்தல்கள் இந்த ஆண்டு நடத்தப்படும் என்று அரசாங்கத்தின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் கிரிஷாந்த அபேசிங்க வெளியிட்ட அறிவிப்பைத் தொடர்ந்து, கடந்த சில வாரங்களாக மக்கள் மத்தியிலும் அரசியல் கட்சிகள் மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்பும் உத்வேகமும் ஏற்பட்டிருந்தது.
குறிப்பாக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்திக்குள் ஒரு பாரிய அரசியல் எழுச்சி ஏற்பட்டது. எந்தளவிற்கு என்றால், மாகாண சபை தேர்தலில் போட்டியிட்டு முதலமைச்சர் வேட்பாளராகக் களம் இறங்குவதற்காக, பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 11 பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்களது எம்பி பதவிகளை இராஜினாமா செய்யத் தயாராக இருப்பதாக சஜித் பிரேமதாசவிடம் உத்தியோகபூர்வமாக அறிவித்தனர். கடந்த வெள்ளிக்கிழமை அளவில் இந்த எண்ணிக்கை 16 ஆக உயர்ந்தபோது எதிர்க்கட்சித் தலைவரே வியப்பில் ஆழ்ந்தார்.
தங்களது எம்பி பதவிகளைக்கூட துறந்துவிட்டு மாகாண சபைக்குப் போட்டியிட இவர்கள் துணிந்ததற்குக் காரணம், கிராம மட்டத்திலுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் ஆதரவாளர்கள் மிக வேகமாகத் தேர்தல் பணிகளை ஆரம்பித்துவிட்டமையாகும். இம்முறை அரசாங்கத்தை தோற்கடித்து, மாகாண சபைகளில் உறுதியான வெற்றியைப் பெறலாம் என்ற நம்பிக்கை எழுந்துள்ளது.
பெலவத்தையை உலுக்கிய உளவுத் தகவல்
கிராம மட்டத்திலிருந்து எழும் இந்த எதிர்க்கட்சி அலையானது, பெலவத்தையிலுள்ள மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வாவின் காதுகளுக்கு எட்டாமல் இல்லை. ஜேவிபியின் அடிமட்ட உளவுப் பிரிவினர் தலைமை அலுவலகத்திற்குத் தொடர்ந்து அனுப்பிய அறிக்கைகளில், ‘இந்தக் கணத்தில் தேர்தல் நடத்தப்பட்டால், அது கிராம மட்டங்களில் ஜேவிபிக்கு மிக மோசமான பின்னடைவை ஏற்படுத்தும்’ என்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
தகவலறிந்த டில்வின் சில்வா ஒரு கணமும் தாமதிக்கவில்லை. இந்தத் தகவல் அவரை எந்தளவிற்கு பதற்றமடையச் செய்தது என்றால், யாழ்ப்பாணத்தில் ஜேவிபி காரியாலயத்தை திறந்து வைக்கும் நிகழ்வின் போது, செய்தியாளர் சந்திப்பில் வெளிப்படையாகவே, ‘இந்த ஆண்டு மாகாண சபை தேர்தல் நடத்தப்பட மாட்டாது’ என்று அறிவித்தார்.
தித்வா சூறாவளி காரணமாக ஏற்பட்ட அழிவுகளுக்குத் தேர்தல் நிதிகள் திருப்பப்பட்டுவிட்டதாகக் சாக்குப்போக்குக் கூறிய டில்வின், அடுத்த ஆண்டிலாவது தேர்தல் நடக்குமா என்பது சந்தேகமே என்று குண்டைத் தூக்கிப் போட்டார்.
இந்த அதிரடி அறிவிப்புக்கு அப்பாற்பட்டு, மற்றொரு ஆபத்தான கருத்தையும் டில்வின் வெளியிட்டார். அதாவது, மாகாண சபை தேர்தலை நடத்துமாறு இந்தியாவிடமிருந்து எந்தவொரு அழுத்தமும் இலங்கைக்கு இல்லை என்பதாகும். இதனை அவர் திட்டமிட்டுச் சொன்னாரா அல்லது யோசிக்காமல் சொன்னாரா என்பது தெளிவாகத் தெரியவில்லை என்றாலும், இந்த அறிக்கை தற்போது அரசாங்கத்திற்குள்ளும், சர்வதேச மட்டத்திலும் கடுமையான விமர்சனங்களை கிளப்பியுள்ளது.
ஆளும் கூட்டணிக்குள் வெடித்துள்ள உட்கட்சி மோதல்கள்
ஜேவிபியின் பெலவத்தை தலைமை அலுவலகத்திற்கும் தேசிய மக்கள் சக்திக்கு இடையிலும், அதேபோல் ஜேவிபி தலைமைக்கும் ஜனாதிபதி செயலகத்திற்கும் இடையிலும் திரைமறைவில் கடுமையான அதிகாரப்போட்டி நிலவி வருவதை ஏற்கனவே பலமுறை சுட்டிக்காட்டியிருந்தோம்.
மாகாண சபை தேர்தல் தற்போது நடத்தப்பட மாட்டாது என்று ஜேவிபியின் பொதுச்செயலாளர் டில்வின் சில்வா யாழ்ப்பாணத்தில் வெளியிட்ட அறிவிப்பானது, இந்த முரண்பாடுகளை மீண்டும் பகிரங்கமாக வீதிக்குக் கொண்டுவந்துள்ளது.
டில்வின் சில்வாவின் தன்னிச்சையான இந்த அறிவிப்புக்கு எதிராக அரசாங்கத்திற்குள்ளிருந்தே முதலாவது எதிர்ப்பு கிளம்பியுள்ளது. டில்வினுக்கு எதிராக அரசாங்கத்தின் மிக முக்கிய அமைச்சரான விவசாய அமைச்சர் கே.டி. லால்காந்த கடுமையான கருத்தை முன்வைத்திருந்தார். .
லால்காந்தவிற்கும் டில்வினுக்கும் இடையில் நீண்டகாலமாகவே குரோதம் நிலவி வருவது இரகசியமல்ல. சில வாரங்களுக்கு முன்னர் பெலவத்தை அலுவலகத்திற்குள் இடம்பெற்றதாக சமூக ஊடகங்களில் கசிந்த பெரும் மோதலின் பின்னணியிலும் இவர்கள் இருவருமே இருந்தனர். டில்வினின் தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியாகி 24 மணித்தியாலங்கள் நிறைவடைவதற்குள், அமைச்சர் லால்காந்த தனது உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் ஒரு பதிவை இட்டிருந்தார்.
‘உங்களுக்கும், அவருக்கும், இவருக்கும், மற்றவருக்கும் வேண்டியவாறெல்லாம் அரசாங்கத்தை நடத்த முடியாது. அரசாங்கத்தை நடத்துவதற்கும் தீர்மானங்களை மேற்கொள்வதற்கும் முறையானதொரு நிறுவனக் கட்டமைப்பு உள்ளது,’ என லால்காந்த அந்த பதிவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்தக் காரசாரமான பதிவின் மூலம் லால்காந்த நேரடியாகவே டில்வின் சில்வாவைத் தான் தாக்கினார் என்பதை அரசியல் அவதானிகள் எளிதில் புரிந்துகொண்டனர்.
இதனைவிடவும் பாரியதொரு பதிலடி அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அரங்கேறியது.
டில்வின் சில்வாவின் பெயரைக் குறிப்பிட்டு ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியபோது, அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ புன்னகைத்தவாறே, மிகவும் நம்பிக்கையான தொனியில் பதிலளித்தார்.
தேர்தலை ஒத்திவைக்கும் எண்ணம் அரசாங்கத்திற்கு இல்லை என்றும், மாகாண சபை தேர்தலை உரிய முறையில் நடத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்றும் அவர் டில்வினின் கூற்றை முற்றாக நிராகரித்தார்.
அமைச்சர் நலிந்தவின் இந்த அறிவிப்பு வெளியாகி சில மணித்தியாலங்களுக்குள், எவரும் எதிர்பாராத மற்றொரு திருப்பம் ஏற்பட்டது. பெஃப்ரல் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மாகாண சபை தேர்தல் குறித்த சிவில் சமூக மாநாட்டில் கலந்துகொண்ட தேசிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் நிஹால் அபேசிங்க, ஜேவிபி செயலாளர் டில்வினின் கருத்தை பகிரங்கமாகவே மறுத்துப் பேசினார்.
இரண்டு வாரங்களுக்கு முன்னர்கூட தான் டில்வினைச் சந்தித்துப் பேசியதாகவும், மாகாண சபை தேர்தலை நடத்தாமல் விடுவதற்கு அரசாங்கம் எந்தவொரு கொள்கை ரீதியான தீர்மானத்தையும் எடுக்கவில்லை என்றும் நிஹால் அபேசிங்க அங்கு தெளிவுபடுத்தினார்.
மேலும், தேர்தலை நடத்துவதற்குத் தேவையான நிதிகள் திறைசேரியிடம் உள்ளதாகக் குறிப்பிட்ட அவர், தேர்தல் முறையை ஆராய்வதற்காக அமைச்சர் விஜித ஹேரத் தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் அறிக்கை கிடைத்தவுடன் தேர்தல் நடத்தப்படும் என்றும் உறுதியளித்தார்.




