நீங்கள் முஸ்லிமா கேள்வி எழுப்பி அமெரிக்காவில் 15 முறை சரமாரி கத்திக்குத்து

 

அமெரிக்காவில் மதம் குறித்து கேட்டு இந்தியரை சரமாரியாக 15 முறை கத்தியால் குத்தியவர் கைது செய்யப்பட்டார். அமெரிக்காவின் யூட்டா மாகாணத்தில் வெஸ்ட் வேலி சிட்டியில் உள்ள வேலி பேர் மால் என்ற வணிக வளாகத்திற்குள் இந்தியாவைச் சேர்ந்த சோஹைல் என்பவர் பணியாற்றி வருகிறார். வணிக வளாகத்தில் உள்ள ஒரு நகைக்கடையில் பணிபுரிந்து வந்த சோஹைலிடம் 48 வயதான அமெரிக்கர் பீட்டர் மைக்கேல் லார்சன் என்பவர் சென்று பேசினார்.

அப்போது அவரது பூர்வீகம் மற்றும் மதம் உள்ளிட்ட விவரங்கள் குறித்துக் கேட்டதாக தெரிகிறது. நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்? என்று கேட்டுள்ளார். அதற்கு சோஹைல் ‘நான் இந்தியாவிலிருந்து வருகிறேன், என் பெயர் சோஹைல்’ என்று பதிலளித்துள்ளார். நீங்கள் முஸ்லிமா? என்று லார்சன் கேட்டதற்கு சோஹைல் ‘ஆம்’ என்று சொன்னதும், அவர் சோஹைலைக் கத்தியால் குத்தத் தொடங்கினார்.

சுமார் 15 முறை சரமாரி கத்தியால் குத்தினார். இதை தொடர்ந்து பீட்டர் மைக்கேல் லார்சன் மீது கொலை முயற்சி மற்றும் தடைசெய்யப்பட்ட ஆபத்தான ஆயுதத்தைப் பயன்படுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டு, அவர் சால்ட் லேக் கவுண்டி சிறையில் அடைக்கப்பட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் சோஹைல் சிகிச்சை பெற்று வருகிறார்.