மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா புதுப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் மாரிமுத்து மகன் பார்த்திபன் (19). தலித் இளைஞரான இவர் கொத்தனார் வேலை செய்து வந்துள்ளார். அருகிலுள்ள சாத்தங்குடி கிராமத்தில் வசித்து வரும் லட்சுமிகாந்தன் மகள் 16 வயது திவ்யதர்ஷினி. இவர் 12-ம் வகுப்பு படித்து முடித்து கல்லூரியில் சேர உள்ளார். இவர்கள் இருவரும் சமீப காலமாக காதலித்து வந்துள்ளனர்.
இவர்கள் இருவரும் காதலிக்கும் செய்தி பெண் வீட்டாருக்கு தெரியவந்த நிலையில் இரு குடும்பத்தாருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. பிரச்சனை பெரிதான நிலையில் பெண் வீட்டார் மீது பார்த்திபன் குடும்பத்தினர் பொறையார் காவல் நிலையத்தில் நேற்று பி.சி.ஆர். வழக்கு பதிவு செய்ய புகார் கொடுத்துள்ளனர். இதனையடுத்து இரவு சுமார் மூன்று மணி அளவில் இருவரும் சாத்தங்குடி பகுதியில் உள்ள குமரவேல் என்பவருக்கு சொந்தமான இடத்தில் ஒரு கீற்று கொட்டகையில் தனித்தனியாக தூக்கிட்ட நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவத்தை அந்த பகுதிக்கு சென்றவர்கள் பார்த்துவிட்டு அக்கம் பக்கத்தில் கூறியுள்ளனர். அங்கிருந்த சிலர் பொறையார் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்த நிலையில் 30க்கும் மேற்பட்ட போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர். உயிரிழந்த இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் சட்ட ஒழுங்கு பிரச்சனை நேரிடாமல் இருப்பதற்காக ஏடிஎஸ்பி சுரேஷ், டிஎஸ்பி சரவணன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு நேரில் வந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். அந்த பகுதியில் இரு வீட்டாரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டநிலையில், போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அதன் பின்னர் உயிரிழந்த இருவரின் உடலையும் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமணைக்கு எடுத்துச் சென்றுள்ளனர். மேலும், பெண் வீட்டார் ஆணவக் கொலை செய்து விட்டதாக பார்த்திபனின் குடும்பத்தினர் காவல்துறையினரிடம் குற்றம் சாட்டியுள்ளனர். இந்நிலையில் காதலர்கள் காதலுக்கு வீட்டில் எதிர்ப்பு தெரிவித்ததால் தற்கொலை செய்து கொண்டார்களா? அல்லது சாதிய பாகுபாடால் ஆணவ கொலை செய்யப்பட்டார்களா? என்ற கோணத்தில் போலீசார் தற்போது விசாரணையை துரிதப்படுத்தி உள்ளனர். இதனிடையே உயிரிழந்த சிறுமியின் உறவினர்கள் வாகனங்கள் மற்றும் வீட்டை எதிர்தரப்பினர் உடைத்து சேதப்படுத்தி சென்று உள்ளனர்.



