துபாய் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு குட் நியூஸ்… 48 மணி நேரத்தில் விசா

வழங்க UAE அறிவிப்பு – முழு விவரம் இதோ

30 மற்றும் 60 நாள் சுற்றுலா விசாக்கள் 48 மணி நேரத்திற்குள் வழங்கப்படும் என துபாய் அறிவித்துள்ளது.விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே விசாக்கள் வழங்கப்படும். இது குறித்து விரிவாக பார்க்கலாம்.

துபாயை சுற்றிப் பார்க்க விரும்பும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. விசா பெறும் நடைமுறைகளை மேலும் எளிமையாக்கும் வகையில், தேவையான ஆவணங்களுடன் விண்ணப்பித்தால் 48 வேலை நேரத்திற்குள் (Working Hours) சிங்கிள் என்ட்ரி சுற்றுலா விசா வழங்கப்படும் என துபாய் அடையாளம் மற்றும் வெளிநாட்டவர் விவகாரங்களுக்கான பொது இயக்குநரகம் (GDRFA) அறிவித்துள்ளது.

எளிய நடைமுறைகள்
சுற்றுலா பயணிகளின் பயண அனுபவத்தை மேம்படுத்தும் நோக்கில் இந்த புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 30 நாட்கள் மற்றும் 60 நாட்கள் கால அவகாசம் கொண்ட சிங்கிள் என்ட்ரி சுற்றுலா விசாக்கள் இந்த விரைவு சேவையின் கீழ் வழங்கப்படும். அங்கீகரிக்கப்பட்ட சுற்றுலா முகவர்கள் மூலமாக விண்ணப்பங்களை எளிதாக சமர்ப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

தேவையான ஆவணங்கள்
விசா பெறுவதற்கு மிகக் குறைந்த ஆவணங்களே போதுமானதாகும்.
விண்ணப்பதாரரின் சமீபத்திய புகைப்படம்
செல்லுபடியாகும் பாஸ்போர்ட் நகல்
சில நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு தேசிய அடையாள அட்டை (National ID) ஆகியவை மட்டும் சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்ட பிறகு குறுகிய காலத்திலேயே விசா வழங்கப்படும் என கூறப்படுகிறது. சில சந்தர்ப்பங்களில் 2 முதல் 3 மணி நேரத்திற்குள் கூட சுற்றுலா பயணிகளுக்கு விசா கிடைத்துள்ளதாக அங்கீகரிக்கப்பட்ட பயண முகவர்கள் தெரிவித்துள்ளனர்.

டிஜிட்டல் சேவைகளை விரிவுபடுத்தி, விண்ணப்பிக்கும் தருணத்திலிருந்து துபாயை அடையும் வரை பயணிகளுக்கு சிரமமில்லாத அனுபவத்தை வழங்குவதே இந்த நடவடிக்கையின் நோக்கம் என GDRFA தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதள பதிவில் தெரிவித்துள்ளது. இந்த புதிய மாற்றம் துபாயின் வேகமாக வளர்ந்து வரும் சுற்றுலா மற்றும் பயணத் துறைக்கு பெரும் ஊக்கமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.