சிறு குழந்தைகளிடையே மூச்சுத் திணறல் அபாயம் அதிகரித்து வருவதால் பெற்றோர் விழிப்புடன் இருக்க வேண்டும் என யுனிசெப் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் யுனிசெப் நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளதாவது,
சிறு குழந்தைகள் சுற்றியுள்ள பொருட்களை வாயில் போடும் பழக்கத்தால், மூச்சுத் திணறல் ஏற்படும் அபாயம் அதிகமாக காணப்படுகிறது.
குறிப்பாக ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளிடம் இந்த பழக்கம் அதிகமாக காணப்படுகிறது. இது உயிருக்கு ஆபத்தான நிலையாகவும் மாறலாம்.
கடினமான உணவுகள், பருப்பு வகைகள், கடின இனிப்புகள், சிறிய பொம்மைகள், விளையாட்டுப் பொருட்கள், நாணயங்கள் போன்றவை மூச்சுத் திணறலுக்கான முக்கிய காரணங்களாக உள்ளன.
மேலும், பெரியவர்களின் படுக்கையில் குழந்தைகளை உறங்க விடுவதும் ஆபத்தானது. (பெரியவர்களின் படுக்கையில் குழந்தைகளை உறங்க விடுவது, தலையணை அல்லது போர்வையால் மூச்சு அடைபடும் அபாயம் அதிகரிக்கிறது.)
உணவுகளை சிறிய துண்டுகளாக வெட்டி வழங்குதல், உணவு உண்ணும் போது குழந்தைகளை கண்காணித்தல், சிறிய பொருட்களை குழந்தைகள் எட்டாத இடத்தில் வைத்தல் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மூலம் மூச்சுத் திணறலை பெருமளவில் தடுப்பது சாத்தியமான செயற்பாடாகும்.
அவசரநிலை ஏற்பட்டால், முதலுதவி முறைகளை அறிந்திருப்பதும், உடனடியாக அவசர சேவைகளை தொடர்பு கொள்வதும் குழந்தையின் உயிரைக் காக்க உதவும்.
ஆனால், சரியான விழிப்புணர்வும் பாதுகாப்பு நடைமுறைகளும் இருந்தால், உயிரிழப்புக்களை பெரும்பாலும் தடுக்க முடியும்.
மூச்சுத்திணறலைத் தடுக்க வேண்டிய வழிமுறைகள்
குழந்தைகளுக்கு உணவுகளை மிகச் சிறிய துண்டுகளாக வெட்டி வழங்குங்கள்.
திராட்சை, செர்ரி, தக்காளி, ரம்புட்டான் போன்றவற்றை சிறுதுண்டுகளாக்கி கொடுக்க வேண்டும்.
சிறுவர் வயதில் கடலை போன்ற தானியங்கள், கடின இனிப்புக்கள் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.
பெரிய குழந்தைகள் மெதுவாக சாப்பிட்டு நன்றாக மென்று விழுங்க ஊக்குவிக்க வேண்டும்.
உணவு உண்ணும் போது எப்போதும் கண்காணிப்பு அவசியம்.
குழந்தைகள் உட்கார்ந்த நிலையில் மட்டுமே உணவு உண்ண வேண்டும். ஓடிக்கொண்டோ, நடக்கும்போதோ, படுத்துக்கொண்டோ உணவை அருந்தக் கூடாது.
பாதுகாப்பான வீட்டுச் சூழலை உருவாக்குங்கள்
சிறிய பொம்மைகளை தவிர்க்கவும் பொம்மைகளின் அளவும் வடிவமும் பாதுகாப்பானதா எனச் சரிபார்க்கவும்.
நாணயங்கள், பொத்தான், பேட்டரிகள், நகைகள் போன்ற சிறிய பொருட்களை குழந்தைகளுக்கு எட்டாத இடத்தில் வைத்திருக்க வேண்டும்.
குழந்தைகளின் உடைகளில் சிறிய பொருட்களை அகற்றுங்கள்.
குழந்தை படுக்கைகளை திரை, திரை கயிறுகள் உள்ள ஜன்னல்களிலிருந்து விலகி அமைக்கவும்.
திரை மற்றும் கயிறுகளை கட்டிவைக்கவும் அல்லது குறைக்கவும்.
பலூன்களுடன் குழந்தைகளை விளையாடவோ, ஊதவோ அனுமதிக்காதீர்கள் பலூன்களை விழுங்கினால் சுவாசப் பாதையை அடைக்கக்கூடும்.
பாதுகாப்பான தூக்க பழக்கங்கள்
கடினமான மெத்தை, தலையணை, போர்வை, பொம்மைகள் இல்லாத சூழலில் குழந்தைகளை உறங்க வைக்க வேண்டும்.
பெரியவர்கள் குழந்தையுடன் ஒரே படுக்கையில் உறங்குவதை தவிர்க்க வேண்டும்.
அவசரநிலைக்கு முன் தயாராக இருங்கள்
எல்லா பாதுகாப்புகளையும் மேற்கொண்டாலும், அவசரநிலைகள் ஏற்படலாம்.
அடிப்படை முதலுதவி பயிற்சி (First Aid Course) ஒன்றில் கலந்து கொள்ளுங்கள்.
குழந்தைகளுக்கு ஏற்படும் மூச்சுத்திணறலில் பயன்படுத்தப்படும் முதலுதவிகள்
பின்புற தட்டல்கள் (Back Blows)
மார்பு அழுத்தங்கள் (Chest Thrusts)
வயிறு அழுத்தங்கள் (Abdominal Thrusts)
என்பவற்றை அறிந்து கொள்ளுதல் உயிரைக் காப்பாற்றும்.
குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதற்கான அறிகுறிகள்
குழந்தைகள் அழ முடியாமல் இருப்பது
சத்தம் வராதது
இரும முடியாத நிலை
மூச்சுவிட முடியாதது
குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்?
பின்புற தட்டல்கள்
குழந்தையை தலை கீழாக, உங்கள் தொடையில் முகம் கீழ்நோக்கி வைத்துக்கொள்ளுங்கள்.
தோள்பட்டை நடுவில் உறுதியான 5 தட்டல்கள் கொடுங்கள்.
மார்பு அழுத்தங்கள்
தடுப்பு நீங்கவில்லை என்றால், குழந்தையை முகம் மேலாக திருப்புங்கள்.
மார்பின் நடுவில், மார்பக காம்பிற்கு கீழே இரண்டு விரல்களால் 5 முறை அழுத்துங்கள்.
தடுப்பு நீங்கவில்லை என்றால், அவசர சேவைகளை அழைத்து, உதவி வரும் வரை இந்த முதலுதவிகளை மீண்டும் மீண்டும் செய்யுங்கள்.
பெரிய குழந்தைகளில் மூச்சுத்திணறல் அறிகுறிகள்
கழுத்து அல்லது மார்பைப் பிடித்துக்கொள்வது
மூச்சுவிட அல்லது இரும முடியாமை
பேச முடியாத நிலை
செய்ய வேண்டிய முதலுதவி
1. தோள்பட்டை இடையில் 5 பின்புற தட்டல்கள்
2. பின்னர் 5 வயிறு அழுத்தங்கள்
3. அவசர சேவைகளை அழைக்கவும்
குழந்தைகளை நெருக்கமாக கண்காணித்து, பாதுகாப்பான வீட்டுச் சூழலை உருவாக்கி, சரியான தூக்க மற்றும் உணவு பழக்கங்களை பின்பற்றுவதன் மூலம், மூச்சுத்திணறல் அபாயத்தை பெருமளவில் குறைக்க முடியும்.




