ஐரோப்பிய ஆயுதங்களால் இந்தியா தாக்கப்படுகிறது” – பின்லாந்தில் ஜெய்சங்கர் பேச்சு

 

“ஐரோப்பிய நாடுகள் விற்பனை செய்யும் ஆயுதங்களை கொண்டு இந்தியா தாக்கப்படுகிறது” என பின்லாந்து நாட்டில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பேசியுள்ளார்.

பின்லாந்து நாட்டுக்கு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பயணித்துள்ளார். அங்கு பின்லாந்து வெளியுறவுத்துறை அமைச்சர் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் வெளியுறவத்துறை இணை அமைச்சர் உடன் சர்வதேச சூழல் குறித்த விவாத நிகழ்வில் பங்கேற்றார். அதில் அவர் கூறியதாவது:

“நான் இங்கு இரண்டு முக்கிய விஷயங்களை முன்வைக்க விரும்புகிறேன். இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவது என்பது அதன் கையிருப்பு மற்றும் விலையின் அடிப்படையில் தான். அந்த வகையில் ரஷ்யாவில் இருந்து எண்ணெய் வாங்கினோம்.

வழக்கமாக ஐரோப்பிய நாடுகள் தான் ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும். அவர்கள் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து எண்ணெய் வாங்கினர். அதனால் அப்போது இந்தியா ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்கியது. சூழலை பொறுத்துதான் இந்தியா இந்த விவகாரத்தில் செயல்படுகிறது.

அதேபோல் எந்தவொரு ஐரோப்பிய நாடும் இந்திய ஆயுதங்களால் தாக்கப்படுவதில்லை. ஆனால், ஐரோப்பிய நாடுகள் விற்பனை செய்யும் ஆயுதங்களை கொண்டு இந்தியா தாக்கப்படுகிறது. அது இப்போது என்று இல்லை. பல ஆண்டுகளாக இது நடக்கிறது. ஐரோப்பாவுக்கு ஆபத்து ஏற்படுத்தும் செயலில் இந்தியர்கள் ஈடுபடுவதில்லை” என அவர் தெரிவித்தார்.