அந்த நகரின் கடற்கரைப் பகுதியில் ஒரு புதுமுகம் தென்படுவதாக மக்கள் ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டிருந்தனர் . அந்த புதுமுகம் ஒரு நாய் வைத்திருந்த பெண்மணி ஆவாள் . திமித்ரி திமித்ரிச் குரோவ் , யால்டா நகருக்கு வந்து ஏறத்தாழ பதினைந்து நாட்கள் ஆகியிருந்தன . அந்நகரின் நடைமுறைகளுக்கு ஏற்ப இப்போது அவன் பழகிப்போயிருந்தான். எனவே, புதிதாக அங்கு வருபவர்கள் மீது ஆர்வம் காட்டுவதை அவனும் தொடங்கியிருந்தான். ‘ஓரு நாள் வெர்னெட் உணவகத்தின் திறந்தவெளிப் பகுதியில் அமைந்திருந்த தனது இருக்கையிலிருந்து பார்த்த போது , கடற்கரைப் பாதையில் நடந்து சென்றுகொண்டிருந்த அந்த இளம் பெண்ணை கண்டான் . அவள் ‘பெரே’ தொப்பி அணிந்திருந்தாள். நடுத்தர உயரமும் பொன்னிறக் கூந்தலும் கொண்ட ஒரு அழகிய இளம் பெண்ணாக இருந்தாள்அவள். அவளுக்குப் பின்னால், ஒரு வெள்ளை நிற ‘பொமரேனியன்’ நாய்க்குட்டி துள்ளிக் குதித்து ஓடிக்கொண்டிருந்தது . பின்னர், நகராட்சிப் பூங்காவிலும், நகரச் சதுக்கத்திலும் — ஒரு நாளின் பல நேரங்களில் அவன் அந்தப் பெண்ணைச் சந்திக்க நேர்ந்தது. அவள் எப்போதும் தனியாகவே காணப்பட்டாள்; அதே தொப்பியை அணிந்திருந்தாள்; அந்தப் பொமரேனியன் நாய் எப்போதும் அவளது பக்கத்திலேயே ஓடி வந்து கொண்டிருந்தது . அவள் யார் என்று யாருக்கும் தெரிந்திருக்கவில்லை . மக்கள் அவளைச் சாதாரணமாக, ” நாயுடன் தோன்றும் பெண்” என்றே குறிப்பிட்டு வந்தனர். “அவளுக்கு இங்கே தன் கணவன் மற்றும் நண்பர்கள் என்று யாரும் துணை இல்லாமல் இருந்தால் , அவளை அறிமுகப்படுத்திக் கொள்வது , அவ்வளவு மோசமான யோசனையாக இருக்காது” என்று குரோவ்வுக்கு தோன்றியது .
அவனுக்கு இன்னும் நாற்பது வயது கூட ஆகவில்லை, ஆனால் பன்னிரண்டு வயதில் ஒரு மகளும் , பள்ளி செல்லும் இரண்டு மகன்களும் உள்ளனர். அவனுக்கு மிகவும் இளம் வயதிலேயே திருமணம் முடிந்து விட்டது. அதாவது கல்லூரியில் இரண்டாம் வருடம் படிக்கும் போதே அவனுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டது . அவனது மனைவி இப்போது அவனை விட கிட்டத்தட்ட இரண்டு மடங்கு வயதானவளாகத் தெரிகிறாள். அவள் நல்ல உயரமான , திடகாத்திரமான அடர்ந்த கருப்பு புருவம் கொண்ட பெண் . நிமிர்ந்த, கண்ணியமான, கம்பீரமான அவளுடைய உருவத்திற்கு ஏற்றார் போலவே, அவள், தன்னைப் பற்றியும் மிகவும் உயர்வான சிந்தனையைக் கொண்டிருந்தாள். அதாவது’ மிகுந்த புத்திசாலி ’ என்று தன்னைத் தானே அழைத்துக் கொள்வாள். . அவள் நல்ல வாசிப்பாளினி தான் . குறிப்பாக வார்த்தைகளை மிகச் சரியான ஒலியோடு உச்சரிக்க வேண்டுமென்பதில் அவளுக்கு அலாதியான பிரியம் உண்டு. அதன் காரணமாகவே அவள் தனது கணவனை மற்றவர்கள் அழைப்பது போல ’டிமிட்ரி’ என்று அழைக்காமல் ’ திமித்திரி ‘ என்றே அழைத்து வந்தாள்.
ஆனால் அவனோ அவளை மேலோட்டமானவளாகவும் , குறுகிய மனப்பான்மை கொண்டவளாகவும், நாகரிகமற்ற தோற்றம் கொண்டவளாகவும் தான் தன் மனதிற்குள் என்றும் கருதி வந்தான். ஆனால் வெளியில் சொல்ல முடியாத அளவுக்கு அவள் மீது அவனுக்கு பயம் உண்டு . இதனால் தான் பெரும்பாலும் சொந்த வீட்டில் இருப்பதையே அவன் விரும்புவதில்லை. உண்மையில் அவன் அவளை ஏமாற்றத் தொடங்கிப் பல காலம் ஆகியிருந்தது . இப்போதெல்லாம் அவன் அவளுக்குத் தொடர்ந்து துரோகம் இழைத்து வருகிறான். இதன் காரணமாகவே அவன் பெண்களைப் பற்றி இழிவாகவும் பேச ஆரம்பித்திருக்கிறான். அவன் முன்னிலையில் பெண்களைப் பற்றிய உரையாடல் வரும் போதெல்லாம் அவன் அவர்களை ” மிகவும் கீழான இனம் ” என்றே குறிப்பிடுவான்.
அவர்கள் மூலம் அவனுக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள் கற்றுத் தந்த பாடங்களினால் , பெண்களை தனக்கு விருப்பமான எந்தப் பெயரிலும் அழைக்கும் உரிமை தனக்கு இருப்பதாக அவன் நினைத்துக் கொண்டான் . ஆனால் உண்மையில் அந்த ” கீழான இனம்” இல்லாவிட்டால், அவனால் ஒரு நாள் கூட உயிர் வாழ முடியாது என்பது தான் உண்மை . ஆண்களோடு இருக்கும்போது அவன் சலிப்பும் சங்கடமும் அடைவான் ; அவர்களிடத்தில் எப்போதும் அவனுக்கு உள்ளார்ந்த வெறுப்பு உண்டு. எப்போதும் அவர்களிடமிருந்து ஒதுங்கியே இருப்பான் . ஆனால் பெண்களின் நடுவே இருக்கும்போது , தன் சொந்த வீட்டில் இருப்பதைப் போலவே இயல்பாக உணர்ந்தான் ; அவர்களிடம் எதைச் சொல்ல வேண்டும், எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதெல்லாம் அவனுக்குத் துல்லியமாகத் தெரிந்திருந்தது . பெண்களின் துணையோடு இருக்கும்போது , சற்றும் சங்கடப்படாமல் அவனால் மௌனமாகக்கூட இருக்க முடியும் . அவனது தோற்றத்திலும் இயல்பிலும் ஒரு விவரிக்க முடியாத வசீகரம் இருக்கிறது என்பதையும் , அது பெண்களை ஈர்ப்பதுடன், அவர்களின் பரிவுணர்வையும் தன்பால் திருப்புகிறது என்பதையும் அவன் நன்கு அறிவான் ; அதே சமயம் , ஏதோ ஒரு கண்ணுக்குத் தெரியாத சக்தியால் அவனும் பெண்களின்பால் ஈர்க்கப்பட்டான்.
திரும்ப திரும்ப ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள் அவனுக்கு வேறு விதமாக பாடங்களை கற்பித்திருக்கிறது. மனிதர்களுடன் ஏற்படும் ஒவ்வொரு புதிய நெருக்கமும் , ஆரம்பத்தில் ஒரு இன்பகரமான மாற்றத்தை அறிமுகப்படுத்தி , வசீகரமான , சாகசமான இன்பத்தை வழங்குவதாக தோன்றினாலும் , போகப் போக தவிர்க்க முடியாமல் (குறிப்பாக மாஸ்கோவில் உள்ள மக்கள் மிகவும் உறுதியற்றவர்களாகவும், மெதுவாகச் செயல்படுபவர்களாகவும் இருக்கிறார்கள்) அதிகமான சிக்கல்களை உருவாக்கும் பிரச்சினையாக வளர்ந்து விடுகிறது. அதுவே தாங்க முடியாத அளவு சலிப்பூட்டும் ஒரு சூழலுக்கு அவனை இட்டுச் செல்கிறது என்பதும் அவனுக்குத் தெரியும் . ஆனால், ஒவ்வொரு முறையும் ஒரு கவர்ச்சியான பெண்ணைச் சந்திக்கும்போது , அந்த பழைய சலிப்பூட்டும் அனுபவங்கள் அனைத்தையும் அவன் மறந்து விடுவான். வாழ்வின் மீதான வேட்கை அவனுக்குள் பொங்கி எழும் . அனைத்தும் திடீரென்று எளிமையாகவும், சுவாரஸ்யமாகவும் அவன் முன்னால் தோன்ற ஆரம்பிக்கும் .
அப்படியாக ஒரு மாலைப் பொழுதில் பூங்காவில் அமைந்திருந்த உணவகத்தில் அவன் இரவு உணவு அருந்திக்கொண்டிருந்தபோது—தலையில் ‘பெரே ‘ தொப்பி அணிந்திருந்த அந்தப் பெண்மணி , மெல்ல நடந்து வந்து, அருகிலிருந்த மேஜையில் அமர்ந்தாள். அவளது முகபாவனை, நடை, உடை, சிகை அலங்காரம்—இவை அனைத்தும் அவள் உயர்குடியைச் சேர்ந்தவள் என்பதையும், திருமணமானவள் என்பதையும், யால்டாவிற்கு முதன்முறையாக வந்திருப்பவள் என்பதையும், தனிமையில் சலிப்புற்றிருப்பவள் என்பதையும் அவனுக்கு உணர்த்தின. யால்டாவிற்கு வரும் சுற்றுலாப் பயணிகளிடையே ஒழுக்க நெறிகள் தளர்ந்துவிட்டதாகக் கூறப்படும் கதைகள் பெரிதும் மிகைப்படுத்தப்பட்டவை; அவற்றை அவன் சற்றும் பொருட்படுத்தவில்லை. ஏனெனில், வாய்ப்பு கிடைத்தால் . அத்தகைய ஒழுக்க மீறல்களில் தாங்களே விரும்பி ஈடுபடுத்திக் கொள்வபவர்களாலேயே அத்தகைய கதைகள் பெரும்பாலும் புனையப்படுகின்றன என்பதை அவன் நன்கு அறிந்திருந்தான். ஆனால், அந்தப் பெண்மணி அவனிடமிருந்து சில சதுர அடிகள் தொலைவே உள்ள மேஜையில் வந்து அமர்ந்தபோது , ‘ எளிதில் கவரக்கூடிய பெண்கள் ‘ பற்றியும், ‘மலைப் பயணங்கள் ‘ பற்றியும் கூறப்படும் அந்தக் கதைகளெல்லாம் , ஏனோ அவனுக்கு மீண்டும் நினைவுக்கு வந்தன. பெயர் கூடத் தெரியாத ஒரு பெண்ணுடன், விரைவானதும் தற்காலிகமானதுமான ஒரு நெருக்கமான உறவை , அதாவது ஒரு காதல் உறவை ஏற்படுத்திக்கொள்ளலாம் என்ற மயக்கும் எண்ணம் திடீரென அவன் மனதை ஆட்கொண்டு விட்டது.
அவன் அந்த ‘போமரேனியன்’ நாயைப் பார்த்து விரல்களைச் சொடுக்கியதும், அது ஓடிவந்து அவன் அருகில் நின்றது; உடனே அவன் தன் ஆள்காட்டி விரலை நீட்டி அதை மிரட்டும் பாவனையில் அசைத்தான். அந்த நாய் உறுமியது. குரோவ் மீண்டும் தன் விரலை அசைத்தான்.
அந்தப் பெண்மணி அவனை ஒருமுறை ஏறிட்டுப் பார்த்தாள்; உடனே தன் பார்வையைத் தாழ்த்திக்கொண்டாள்.
“அது கடிக்காது,” என்று அவள் கூறினாள்; அப்போது அவள் முகம் நாணத்தால் சிவந்தது.
“நான் அதற்கு ஒரு எலும்புத் துண்டை போடலாமா?” என்று அவன் கேட்டான். அவள் சம்மதமென்று தலையசைப்பைத் தெரிவித்ததும், அவன் நட்புணர்வுடன் கூடிய குரலில், “நீங்கள் யால்டாவிற்கு வந்து வெகு நாட்களாகிவிட்டதா?” என்று கேட்டான்.
ஐந்து நாட்கள்.”
“இங்கே ஏற்கெனவே நான்பதினைந்து நாட்களை இழுத்துவிட்டேன்.”
ஒரு சிறு அமைதி நிலவியது.
“காலம் வேகமாகச் செல்கிறது , ஆனாலும் இங்கே மிகவும் சலிப்பாக இருக்கிறது!” என்று அந்தப் பெண் அவனைப் பார்க்காமல் கூறினாள்.
“இங்கே சலிப்பாக இருக்கிறது என்று சொல்வதுதான் இப்போது ஃபேஷன். ஒரு கிராமவாசி பெல்யோவ் அல்லது ஜித்ராவில் போய் வாழ்ந்தால் அவனுக்குச் சலிப்பாக இருக்காது, ஆனால் அவன் இங்கே வரும்போது, ‘அடடா, என்ன ஒரு சலிப்பு! அடடா, என்ன ஒரு தூசி!’ என்று பேசுவதைப் பார்த்தால் , பார்க்கிறவர்கள் .” அடடா இவர் கிரெனடாவிலிருந்து வந்தவர் போல என்று தான் நினைப்பார்கள் ” என்று சொன்னான்
அவள் சிரித்தாள். பின்னர் இருவரும் அந்நியர்களைப் போல மௌனமாகத் தொடர்ந்து சாப்பிட்டனர், ஆனால் இரவு உணவிற்குப் பிறகு அவர்கள் அருகருகே நடந்தனர் ; எங்கு செல்கிறார்கள், என்ன பேசுகிறார்கள் என்பதைப் பற்றிக் கவலைப்படாத , சுதந்திரமாகவும் திருப்தியாகவும் இருக்கும் மனிதர்களின் இலகுவான கேலிப் பேச்சுகள் அவர்களுக்குள் எழுந்தன . அவர்கள் கடலில் இருந்த விசித்திரமான ஒளியைப் பற்றி நடந்துகொண்டே பேசினார்கள் : நீர் மென்மையான, இதமான ஊதா நிறத்தில் இருந்தது , அதன் மீது நிலவிலிருந்து ஒரு பொன்னிறக் கீற்று தெரிந்தது . ஒரு வெப்பமான நாளுக்குப் பிறகு அது எவ்வளவு புழுக்கமாக இருந்தது என்பதைப் பற்றிப் பேசினார்கள். குரோவ் அவளிடம் தான் மாஸ்கோவிலிருந்து வந்ததாகவும், கலைத்துறையில் பட்டம் பெற்றிருந்தாலும் , வங்கியில் வேலை செய்வதாகவும், ஓபரா பாடகராகப் பயிற்சி பெற்று , அதை விட்டுவிட்டதாகவும், மாஸ்கோவில் தனக்கு இரண்டு வீடுகள் சொந்தமாக இருப்பதாகவும் கூறினான். . . . அவள் பீட்டர்ஸ்பர்க்கில் வளர்ந்தவள் என்றும் , ஆனால் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணமானதிலிருந்து S—-ல் வசித்து வருவதாகவும் , யால்டாவில் இன்னும் ஒரு மாதம் தங்கப் போவதாகவும், விடுமுறை தேவைப்படும் அவளுடைய கணவர் வந்து அவளை அழைத்துச் செல்லக்கூடும் என்றும் அவளிடமிருந்து அவன் அறிந்துகொண்டான் . தன் கணவர் பதவி வகிப்பது அரசுத் துறையிலா அல்லது மாகாண சபையிலா , என்பது அவளுக்கு உறுதியாகத் தெரியவில்லை ; தன் அறியாமையை நினைத்து அவள் வேடிக்கையாக உணர்ந்தாள். மேலும், அவளுடைய பெயர் அன்னா செர்ஜியேவ்னா என்பதையும் குரோவ் அறிந்துகொண்டான்.
அதன்பின் , விடுதியில் தனது அறையில் இருந்தவாறே அவன் அவளைப் பற்றிச் சிந்தித்தான் . மறுநாள் அவள் தன்னைச் சந்திக்க வருவது உறுதி என்றும் , அது நிச்சயமாக நடந்தே தீரும் என்றும் அவன் நினைத்தான். படுக்கைக்குச் சென்றபோது, அண்மைக் காலம் வரை அவள் பள்ளியில் பயிலும் ஒரு சிறுமியாக , தன் சொந்த மகளைப் போலவே பாடங்களைப் படித்துக்கொண்டிருந்திருப்பாள் என்பதை அவன் நினைத்துப் பார்த்தான் ; அவளது சிரிப்பிலும், அந்நியர்களிடம் பேசும் விதத்திலும் இப்போதும் வெளிப்படும் அந்தத் தயக்கத்தையும், இயல்பற்ற கூச்சத்தையும் அவன் நினைவுகூர்ந்தான். தன் வாழ்விலேயே முதன்முறையாக, தான் பின்தொடரப்படுகிறோம், உற்றுநோக்கப்படுகிறோம், என்று — அவளால் ஊகிக்காமல் இருக்கவே முடியாத அளவில் – ஒரு ரகசிய உள்நோக்கத்தின் காரணமாகவே — ஆண்கள் தன்னிடம் பேசுகிறார்கள் என்ற சூழலில் அவள் தனித்திருப்பது இதுவே முதல் முறையாக இருக்கக்கூடும். அவளது ஒல்லியான, மென்மையான கழுத்தையும், அவளது அழகிய சாம்பல் நிறக் கண்களையும் அவன் நினைவுகூர்ந்தான்.
“எது எப்படியோ, அவளிடம் ஏதோ ஒரு பரிதாபத்திற்குரிய அம்சம் இருக்கிறது,” என்று அவன் எண்ணிக்கொண்டான்; பின்னர் உறங்கிவிட்டான்.
அவர்கள் ஒருவருக்கொருவர் அறிமுகமாகி ஒரு வாரம் ஆகியிருந்தது. அது ஒரு விடுமுறை நாள். அறைக்குள்ளே புழுக்கமாக இருந்தது; அதே வேளையில், தெருவில் காற்றுச் சுழன்று தூசியைப் பறக்கவிட்டுக் கொண்டிருந்ததுடன் , மக்களின் தொப்பிகளையும் அடித்துச் சென்றது. அது மிகுந்த தாகத்தை உண்டாக்கும் ஒரு நாளாக இருந்தது ; அதனால் குரோவ் அடிக்கடி அந்தப் பூங்கா மண்டபத்திற்குச் சென்று, அன்னா செர்கேவ்னாவை சர்பத் கலந்த நீர் அல்லது ஐஸ் க்ரீம் அருந்துமாறு வற்புறுத்தினான். அந்தச் சூழலில், நேரத்தை எப்படிச் செலவிடுவது என்றே யாருக்கும் தெரியவில்லை.
மாலை வேளையில், காற்றின் வேகம் சற்று தணிந்ததும், அவர்கள் நீர்த்தடுப்புச் சுவர் மீது நடந்து சென்று , நீராவிப் படகு வருவதைப் பார்க்கச் சென்றனர். துறைமுகத்தைச் சுற்றி ஏராளமான மக்கள் நடமாடிக் கொண்டிருந்தனர்; யாரோ ஒருவரை வரவேற்கப் பூங்கொத்துகளுடன் அவர்கள் அங்கே திரண்டிருந்தனர் . நன்கு ஆடையணிந்த அந்த யால்டா நகரக் கூட்டத்தினரிடையே இரண்டு விசித்திரமான அம்சங்கள் மிகத் தெளிவாகத் தெரிந்தன : வயதான பெண்கள் இளம் பெண்களைப் போலவே ஆடையணிந்திருந்தனர்; மேலும், அங்கே ஏராளமான இராணுவத் தளபதிகளும் கூடியிருந்தனர்.
கடலின் சீற்றம் காரணமாக, நீராவிப் படகு தாமதமாகவே வந்தது . சூரியன் மறைந்த பிறகே அது வந்து சேர்ந்தது. நீர்த்தடுப்புச் சுவரை வந்தடைவதற்கு முன், அது கடலில் நீண்ட நேரம் சுழன்று சுழன்று திரும்பிக்கொண்டிருந்தது. ஏதோ அறிமுகமானவர்களைத் தேடுவது போல , அன்னா செர்கேவ்னா தனது கைக்கண்ணாடியின் வழியாக அந்தப் படகையும் பயணிகளையும் உற்று நோக்கினாள் . அவள் குரோவ் பக்கம் திரும்பியபோது , அவளது கண்கள் ஒளிவீசின. அவள் மிக அதிகமாகப் பேசினாள் ; தொடர்பற்ற கேள்விகளைக் கேட்டாள் —ஆனால் அடுத்த கணமே தான் என்ன கேட்டோம் என்பதையும் மறந்துவிட்டாள். அந்த மக்கள் கூட்டத்தின் நெருக்கடியில், அவள் தன் கைக்கண்ணாடியைக் ஒரு முறை கீழே தவறவிட்டாள்.
விழாக்கோலம் பூண்டிருந்த அந்தக் கூட்டம் மெல்லக் கலையத் தொடங்கியது ; இருள் சூழ்ந்திருந்ததால், மக்களின் முகங்களை அடையாளம் காண முடியவில்லை. காற்று முற்றிலும் நின்றுவிட்டிருந்தது; ஆயினும் குரோவும் அன்னா செர்கேவ்னாவும், படகிலிருந்து வேறு யாரோ வருகிறார்கள் என்பது போல, இன்னும் அங்கேயே நின்று கொண்டிருந்தனர். அன்னா செர்கேவ்னா இப்போது மௌனம் சாதித்தாள்; குரோவைப் பார்க்காமலேயே, அவள் தன் கையில் இருந்த பூக்களை முகர்ந்து பார்த்தாள்.
“இன்று மாலை வானிலை சற்று நன்றாக இருக்கிறது,” என்று அவன் கூறினான். “நாம் இப்போது எங்கே செல்லலாம்? நாம் எங்காவது வண்டியில் சவாரி செல்லலாமா? “
அவள் அதற்குப் பதிலெதுவும் கூறவில்லை.
அப்போது அவன் அவளைக் கூர்ந்து நோக்கினான்; சட்டென்று அவளைத் தன் கைகளால் அணைத்து , அவளது இதழ்களில் முத்தமிட்டான். அவளது இதழ்களில் படிந்திருந்த ஈரத்தையும், அந்தப் பூக்களின் நறுமணத்தையும் அவன் உள்ளிழுத்துச் சுவைத்தான். உடனே அவன் பதற்றத்துடன் சுற்றும் முற்றும் நோக்கினான் . தங்களை வேறு யாரேனும் பார்த்துவிட்டார்களோ என்று அவன் கவலையுடன் எண்ணினான்.
“நாம் உன் தங்கும் விடுதிக்குச் செல்லலாம்,” என்று அவன் மெல்லிய குரலில் கூறினான். இருவரும் விரைவாக நடந்து சென்றனர்.
அவளது அறை குறுகலாக இருந்தது அவனுடைய மூச்சைத் திணறடித்தது . அவள் ஜப்பானியக் கடையில் வாங்கிய வாசனைத் திரவியம் ஒரு விதமான வாசனையை வீசியது . குரோவ் அவளைப் பார்த்துக் கொண்டிருக்கும் போதே , “இந்த உலகில் தான் , நாம் எவ்வளவு விதமான மனிதர்களைச் சந்திக்கிறோம்!” என்று நினைத்தான். கடந்த காலத்திலிருந்தே , கவலையற்ற , நல்ல குணம் கொண்ட பெண்களின் நினைவுகளை அவன் எப்போதும் பாதுகாத்து வந்திருக்கிறான் ; அவர்கள் அவன் அவர்களுக்கு அளித்த அந்த இனிமையான பொழுதுகளுக்காக ( அது எவ்வளவு குறுகியதாக இருந்தாலும் சரி ) மகிழ்ச்சியுடன் அவன் மீது அன்பு செலுத்தி, அவனுக்கு நன்றியுள்ளவர்களாக இருந்திருக்கின்றனர்; மேலும், தன் மனைவியைப் போன்ற , எந்தவொரு உண்மையான உணர்வுமின்றி , தேவையற்ற சொற்றொடர்களுடன் , செயற்கையாக, வெறித்தனமாக , அது காதலோ காமமோ அல்ல, மாறாக அதைவிட மேலான ஒன்று என்று உணர்த்தும் பாவனையுடன் , அன்பு செலுத்திய பெண்களின் நினைவுகளையும் அவன் மனதில் கொண்டிருந்தான். அது தவிர , மிகவும் அழகான, உணர்ச்சியற்ற இரண்டு அல்லது மூன்று பெண்களின் நினைவுகளையும் அவன் பெற்றிருக்கிறான் ; அவர்களின் முகங்களில், வாழ்க்கை கொடுக்கக்கூடியதை விட அதிகமாகப் பறித்துக்கொள்ள வேண்டும் என்ற ஒரு பேராசை கூடிய பாவனையை – ஒரு பிடிவாதமான ஆசையை – அவன் கண்டிருக்கிறான். அவர்கள் தங்கள் இளமைப் பருவத்தில் இல்லாத , மனம்போன போக்கில் நடந்துகொள்ளும், சிந்திக்காத , ஆதிக்கம் செலுத்தும், அறிவற்ற பெண்களாக இருந்தனர். குரோவ் அவர்கள் மீது உணர்ச்சியற்றவனாக மாறியபோது , அவர்களின் அழகு அவனுக்குள் வெறுப்பைத் தூண்டியது, மேலும் அவர்களின் மெல்லிய ஆடைகளில் இருந்த சரிகை அவனுக்கு மீன் செதில்களைப் போலத் தோன்றியது.
ஆனால் இந்தச் சூழலில், அனுபவமற்ற இளமையின் தயக்கமும், கூச்சமும், ஒருவித சங்கடமான உணர்வும் இன்னும் நிலவிக்கொண்டிருந்தன ; யாரோ ஒருவர் திடீரென்று கதவைத் தட்டியது போன்றதொரு திகைப்பு உணர்வும் அங்கே இருந்தது. நிகழ்ந்த சம்பவத்தின் மீதான அன்னா செர்கேவ்னாவின் — ( ‘நாயுடன் தோன்றும் அந்தப் பெண்மணியின் ) ‘ — மனப்பான்மை ஏனோ விசித்திரமாகவும், மிகக் கவலையுடனும் இருந்தது; அந்தத் தவறு தன்னால் இழைக்கப்பட்டது போன்றதொரு பாவனையை அது கொண்டிருந்தது — வெளியிலிருந்து பார்க்கும்போது அப்படித்தான் தோன்றியது ; அது விசித்திரமாகவும், சூழலுக்குப் பொருத்தமற்றதாகவும் இருந்தது. அவளது முகம் வாடி, பொலிவிழந்து காணப்பட்டது; முகத்தின் இருபுறமும் அவளது நீண்ட கூந்தல் சோகத்துடன் தொங்கிக்கொண்டிருந்தது . பார்ப்பதற்கு ஏதோ ஒரு பழங்கால ஓவியத்தில் இடம்பெறும் ‘ பாவம் செய்த பெண்’ போன்றதொரு தோரணையில், அவள் மனம் சோர்ந்து ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கியிருந்தாள்.
“இது தவறு பெரிய பாவம் ,” என்று அவள் கூறினாள். ” இனி வரும் காலத்தில் என்னை இகழ்ந்து ஒதுக்கும் முதல் நபராக நீங்கள்தான் இருப்பீர்கள்.” என்று அவள் மிகுந்த கண்ணீரோடு சொன்னாள்.
மேஜையின் மீது ஒரு தர்பூசணிப் பழம் இருந்தது. குரோவ் அதிலிருந்து ஒரு துண்டை வெட்டிக்கொண்டு, அவசரமின்றி அதை உண்ணத் தொடங்கினான். அதைத் தொடர்ந்து, குறைந்தது அரை மணி நேரத்திற்காவது அங்கே ஆழ்ந்த அமைதி நிலவியது.
அன்னா செர்கேவ்னாவின் நிலை நெஞ்சை உருக்குவதாக இருந்தது; வாழ்க்கையின் அனுபவங்கள் அதிகம் வாய்க்கப்பெறாத , ஒரு நல்ல, எளிய பெண்ணுக்கே உரிய தூய்மை அவளிடம் இழையோடியிருந்தது. மேஜையின் மீது தனித்து எரிந்துகொண்டிருந்த மெழுகுவர்த்தி அவளது முகத்தின் மீது மங்கலான ஒளியைப் பாய்ச்சியது ; ஆனால் அவள் முகத்தை ஒளிரச் செய்யவில்லை, அவளுடைய இதயம் கனமாக இருப்பது தெளிவாகத் தெரிந்தது. அவள் மிகுந்த துயரத்தில் ஆழ்ந்திருக்கிறாள் என்று கண்டு கொண்டான்.
“நான் எப்படி உன்னை இகழ்ந்து ஒதுக்க முடியும்?” என்று குரோவ் கேட்டான். ” நீ என்ன பேசுகிறாய் என்றே உனக்குத் தெரியவில்லை.”
“கடவுள் என்னை மன்னிக்கட்டும்,” என்று அவள் கூறினாள் ; அவளது கண்கள் கண்ணீரால் நிரம்பின. “இது மிகவும் பயங்கரமானது.”
“உனக்கு மன்னிப்பு தேவைப்படுவதாக நீ உணர்கிறாய் என்று தோன்றுகிறது.”
” மன்னிப்பா? இல்லை. நான் ஒரு கெட்டவள், இழிவானவள் தவறி வீழ்ந்தவள்; என்னை நானே வெறுக்கிறேன், என்னை நியாயப்படுத்தவும் நான் முயலவில்லை. நான் ஏமாற்றியது என் கணவனை அல்ல, என்னையேதான். அதுவும் இப்போது மட்டுமல்ல; நீண்ட காலமாகவே என்னை நானே ஏமாற்றிக்கொண்டிருக்கிறேன். என் கணவர் ஒரு நல்ல, நேர்மையான மனிதராக இருக்கலாம் ; ஆனால் அவர் ஒரு அடிமைப் பணியாளர் ! அங்கே அவர் என்ன செய்கிறார், அவருடைய வேலை என்ன என்று எனக்குத் தெரியாது; ஆனால் அவர் ஒரு அடிமைப் பணியாளர் என்பது மட்டும் எனக்குத் தெரியும்! அவருக்குத் திருமணம் ஆனபோது எனக்கு வயது இருபது. அனைத்தையும் அறிந்து கொள்ளும் ஆவல் என்னை வாட்டி வதைத்தது ; இதைவிடச் சிறந்த ஒன்று வேண்டும் என்று நான் மனதார விரும்பினேன். ‘ நிச்சயமாக இதைவிட மாறுபட்ட ஒரு வாழ்க்கை இருக்க வேண்டும்,’ என்று எனக்குள் சொல்லிக்கொண்டேன். நான் வாழ விரும்பினேன் ! வாழ வேண்டும், வாழ வேண்டும்! ஸ அனைத்தையும் அறியும் ஆவல் என்னை ஆட்கொண்டது ஸ அது உனக்குப் புரியாது ; ஆனால், கடவுள் மீது ஆணையிட்டுச் சொல்கிறேன், என்னால் என்னைக் கட்டுப்படுத்திக்கொள்ளவே முடியவில்லை; எனக்குள் ஏதோ நிகழ்ந்தது : என்னைத் தடுத்து நிறுத்தவே முடியவில்லை. என் கணவரிடம் எனக்கு உடல்நலம் சரியில்லை என்று சொல்லிவிட்டு , நான் இங்கே வந்துவிட்டேன். ஸ இங்கே வந்த பிறகு, ஏதோ மயக்கமுற்றவள் போலவும் , ஒரு பைத்தியத்தைப் போலவும் நான் அலைந்து திரிந்தேன்; ஸ இப்போது, யார் வேண்டுமானாலும் இழிவாகக் கருதக்கூடிய, ஒரு அநாகரிகமான , இழிவான பெண்ணாக நான் மாறிவிட்டேன்.”
அவள் பேசுவதைக் கேட்டு குரோவ் ஏற்கனவே சலிப்படையத் தொடங்கியிருந்தான். அவளுடைய அந்த அப்பாவியான பேச்சும், சற்றும் எதிர்பாராத, பொருத்தமற்ற மனவருத்தமும் அவனுக்கு எரிச்சலை ஊட்டின ; அவளுடைய கண்களில் கண்ணீர் மட்டும் இல்லாவிட்டால், அவள் ஏதோ கேலி செய்கிறாள் என்றோ, அல்லது நாடகமாடுகிறாள் என்றோ தான் அவன் நினைத்திருப்பான்.
“எனக்குப் புரியவில்லை,” என்று அவன் மென்மையாகக் கூறினான். “உனக்கு என்னதான் வேண்டும்?”
அவள் தன் முகத்தை அவனுடைய மார்பில் புதைத்துக்கொண்டு, அவனை இறுக்கமாக ஒட்டிக்கொண்டாள்.
“என்னை நம்புங்கள், என்னை நம்புங்கள், நான் உங்களைக் கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன்ஸ” என்று அவள் கூறினாள். ” நான் ஒரு தூய்மையான, நேர்மையான வாழ்க்கையை நேசிக்கிறேன் ; பாவம் என்றால் எனக்கு அருவருப்பு. நான் என்ன செய்கிறேன் என்றே எனக்குப் புரியவில்லை. எளிய மக்கள் சொல்வார்களே : ‘தீய சக்தி என்னை மயக்கிவிட்டது’ என்று , இப்போது என்னைப் பற்றியும் நான் அப்படித்தான் சொல்லிக்கொள்ள முடியும்: அந்தத் தீய சக்தி என்னை மயக்கிவிட்டது.”
“சும்மா இரு , சும்மா இரு!ஸ” என்று அவன் முணுமுணுத்தான்.
அவளுடைய நிலைத்த , அச்சம் நிறைந்த கண்களை அவன் உற்றுப் பார்த்தான் ; அவளை முத்தமிட்டான் ; மென்மையாகவும் பாசத்துடனும் அவளிடம் பேசினான். படிப்படியாக அவள் ஆறுதல் அடைந்தாள்; அவளுடைய முகமலர்ச்சியும் திரும்பியது. அவர்கள் இருவரும் சிரிக்கத் தொடங்கினார்கள்.
அதன் பிறகு அவர்கள் வெளியே சென்றபோது, கடற்கரை ஓரத்தில் ஒரு உயிரினமும் இல்லை. சைப்ரஸ் மரங்கள் நிறைந்த அந்த நகரம், ஒருவித மரண வேதனை போன்ற தோற்றத்தைக் கொண்டிருந்தது; ஆனாலும், கரையில் கடல் இன்னமும் ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தது. ஒர் ஒற்றைப் படகு மட்டும் அலைகளில் ஆடிக்கொண்டிருந்தது, அதில் ஒரு விளக்கு தூக்கக் கலக்கத்துடன் மினுமினுத்துக் கொண்டிருந்தது.
அவர்கள் ஒரு வாடகைக் காரைக் கண்டுபிடித்து ஓரியாண்டாவிற்குச் சென்றார்கள்.
“நான் இப்போதுதான் கூடத்தில் உங்கள் குடும்பப்பெயரைக் கண்டுபிடித்தேன் : அது பலகையில் எழுதப்பட்டிருந்தது — வான் டிடெரிட்ஸ்,” என்றால் . “உன் கணவர் ஒரு ஜெர்மானியரா?”என்று கேட்டான் குரோவ்.
“இல்லை; அவருடைய தாத்தா ஒரு ஜெர்மானியர் என்று நான் நம்புகிறேன், ஆனால் அவரோ ஒரு மரபுவழி ரஷ்யர்.”
“அவருடைய தாத்தா அக்கோவிலைச் சேர்ந்தவராக இருந்தார் என்று நினைக்கிறேன்; ஆனால் அவரோ, ‘C’ பிரிவுக் கிறிஸ்தவ சபையைச் சேர்ந்தவர்.”
ஒரியாண்டாவில் வண்டியிலிருந்து இறங்கியதும், அவர்கள் கோவிலுக்கு வெகு தொலைவில் இல்லாத ஒரு பெஞ்சில் அமர்ந்து, ஒரு வார்த்தையும் பேசாமல் கடலை உற்று நோக்கினர். காலைப் பனியின் ஊடே யால்ட்டா நகரம் மங்கலாகத் தெரிந்தது ; மலைச்சிகரங்களின் மீது வெண்மேகங்கள் அசைவற்று நிலைத்திருந்தன . ஓர் இலை கூட அசையவில்லை; வெட்டுக்கிளிகள் கீச்சிட்டன; கடலின் அந்த ஒற்றைப்படையான, ஆழமற்ற இரைச்சல் ஒலி அவர்களை வந்தடைந்தது —அது அமைதியைப் பற்றியும், நம் அனைவருக்காகவும் காத்திருக்கும் அந்த நித்திய உறக்கத்தைப் பற்றியும் பேசுவது போலிருந்தது . யால்ட்டாவோ அல்லது ஒரியாண்டாவோ தோன்றுவதற்கு வெகு காலத்திற்கு முன்பிருந்தே கடல் இவ்வாறு இரைத்துக்கொண்டிருந்தது; இப்போதும் அது இரைத்துக்கொண்டிருக்கிறது ; நாம் இவ்வுலகை விட்டு மறைந்த பிறகும் கூட, அதே அளவு பற்றற்ற தன்மையுடனும், அதே ஆழமற்ற இரைச்சலுடனும் அது தொடர்ந்து இரைந்து கொண்டே இருக்கும். அநேகமாக, இந்தத் தொடர்ச்சியில்தான்— வாழ்வு மற்றும் இறப்பு குறித்த இந்த முழுமையான பற்றற்ற தன்மையில்தான்— நமது இறுதி மீட்பின் ரகசியமும், நமது கோளத்தில் ஓடிக்கொண்டிருக்கும் வாழ்வென்னும் ஓடையின் ரகசியமும், முழுமையை நோக்கிய அதன் இடைவிடாத இயக்கத்தின் ரகசியமும் பொதிந்திருக்கக்கூடும்.
காலை ஒளியில் மிகவும் எழிலாகத் தோன்றிய ஒரு இளம் பெண்ணின் அருகில் அமர்ந்தவாறு — கடல் , மலைகள், மேகங்கள் மற்றும் பரந்து விரிந்த வானம் என — அந்த மாயாஜால அழகு அனைத்தையும் கண்டு அமைதியுற்றவனாகவும், மெய்மறந்து போனவனாகவும் இருந்த குரோவ் , தனக்குத்தானே இவ்வாறு எண்ணிக்கொண்டான் : ” உண்மையில் சிந்தித்துப் பார்த்தால் , இவ்வுலகில் உள்ள அனைத்தும் அழகியவையே —நம்முடைய சொந்த எண்ணங்களும் செயல்களும் தவிர . ஏனெனில், வாழ்வின் உயர்ந்த நோக்கங்களையும் , மனிதர்களாகிய நமது கண்ணியத்தையும் நாம் மறந்துவிடும்போதுதான் , அந்த எண்ணங்களும் செயல்களும் அழகற்றவையாகிவிடுகின்றன. “
ஒருவர் அவர்களை நோக்கி வந்தார் — ஒரு காவலாளியாக இருக்கலாம் —அவர் அவர்களைப் பார்த்துவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார். அந்தச் செயலிலும் கூட ஏதோ ஒரு மர்மமும் அழகும் நிறைந்திருந்தது. தியோடோசியாவிலிருந்து வந்துகொண்டிருந்த நீராவிப் படகு ஒன்று, விடியற்காலை ஒளியில் மிளிர்ந்தவாறு, துறைமுகத்தை நோக்கி வருவதைக் காண முடிந்தது; அதன் விளக்குகள் அணைக்கப்பட்டிருந்தன.
“புல்லின் மீது பனித்துளிகள் படிந்திருக்கின்றன,” என்று கூறி, அண்ணா செர்கேயெவ்னா அந்த மௌனத்தைக் கலைத்தாள்.
“ஆம்.” “வீட்டுக்குப் போக வேண்டிய நேரம் இது.” அவர்கள் ஊருக்குத் திரும்பிச் சென்றனர்.
அதன்பின் அவர்கள் தினமும் பன்னிரண்டு மணிக்குக் கடற்கரை ஓரத்தில் சந்தித்துக்கொண்டனர்; ஒன்றாக மதிய உணவும் இரவு உணவும் உண்டனர் , நடைப்பயிற்சி மேற்கொண்டனர், கடலின் அழகை ரசித்தனர் . தனக்குத் தூக்கம் சரியாக வரவில்லை என்றும் , இதயம் மிக வேகமாகத் துடிப்பதாகவும் அவள் அவனிடம் புகார் கூறிக் கொண்டிருந்தாள் ; ஒரே கேள்விகளையே திரும்பத் திரும்பக் கேட்டாள். ஒரு சமயம் பொறாமையாலும், மறுசமயம் அவன் தன்னைப் போதுமான அளவு மதிக்கவில்லை என்ற அச்சத்தாலும் அவள் மனம் கலங்கினாள். பெரும்பாலும் பூங்காக்களிலோ அல்லது பொதுவெளிகளிலோ , அருகில் வேறு யாரும் இல்லாத தருணங்களில் , அவன் திடீரென அவளைத் தன் பக்கம் இழுத்து, மிகுந்த உணர்ச்சிவேகத்துடன் முத்தமிடுவான். அவள் முழுமையான செயலற்ற நிலைக்குச் சென்று விடுவாள். பகல் வெளிச்சத்திலேயே அவன் முத்தமிடும்போது யாராவது பார்த்துவிடுவார்களோ என்ற அச்சத்துடன் அவன் சுற்றும் முற்றும் பார்ப்பான். , அந்த வெப்பம், கடலின் மணம், மற்றும் அவன் கண்முன்னே எப்போதும் அங்கும் இங்கும் உலவிக்கொண்டிருக்கும் வேலையற்ற, நேர்த்தியாக உடை அணிந்த, செழிப்பான மனிதர்கள் —இவையெல்லாம் அவனை ஒரு புதிய மனிதனாக மாற்றிக் கொண்டிருந்தன ; அவள் எவ்வளவு அழகாக இருக்கிறாள் என்பதையும், எவ்வளவு வசீகரமானவள் என்பதையும் அவன் அன்னா செர்கேவ்னாவிடம் அடிக்கடி சொல்லிக் கொண்டிருப்பான் . அவன் மிகுந்த ஆவலுடனும் உணர்ச்சிவேகத்துடனும் இருந்தான் ; அவளை விட்டு ஒரு அடி கூட விலகிச் செல்ல அவன் விரும்பவில்லை. ஆனால் அவளோ பெரும்பாலும் சிந்தனையிலேயே ஆழ்ந்திருந்தாள்; அவன் தன்னை மதிக்கவில்லை என்றும் , துளியும் நேசிக்கவில்லை என்றும், தன்னை ஒரு சாதாரணப் பெண்ணாக மட்டுமே கருதுகிறான் என்றும் ஒப்புக்கொள்ளுமாறு அவனைத் தொடர்ந்து அவள் வற்புறுத்தினாள். ஏறக்குறைய ஒவ்வொரு மாலையும் சற்றுத் தாமதமாக , அவர்கள் நகருக்கு வெளியே எங்காவது — ஒரியாண்டாவிற்கோ அல்லது நீர்வீழ்ச்சிக்கோ — வண்டியில் பயணம் மேற்கொள்வார்கள்; அந்தப் பயணங்கள் எப்போதும் வெற்றிகரமாக அமைந்தன ; அங்கிருந்த இயற்கைக்காட்சிகள் அவர்களுக்கு எப்போதுமே பிரம்மாண்டமாகவும் அழகாகவும் தோன்றின.
அவளுடைய கணவன் வருவான் என்று அவர்கள் எதிர்பார்த்திருந்தனர்; ஆனால் அவனிடமிருந்து ஒரு கடிதம் மட்டுமே வந்தது. தன் கண்களில் ஏதோ கோளாறு ஏற்பட்டிருப்பதாகவும், அதனால் அவனுடைய மனைவி கூடிய விரைவில் வீட்டிற்குத் திரும்ப வேண்டும் என்றும் அவன் அக்கடிதத்தில் அவளை மிகவும் வேண்டி கேட்டுக்கொண்டிருந்தான். அன்னா செர்கேவ்னா உடனே புறப்படத் துரிதப்படுத்தினாள்.
“நான் இங்கிருந்து கிளம்புவது ஒரு வகையில் நல்லதுதான்,” என்று அவள் குரோவிடம் கூறினாள். ” இது விதியின் செயல் !”
அவள் குதிரை வண்டியில் புறப்பட்டாள் ; அவனும் அவளுடன் சென்றான். அவர்கள் நாள் முழுவதும் வண்டியிலேயே பயணம் செய்தனர். அவள் விரைவு ரயிலின் ஒரு பெட்டிக்குள் ஏறி அமர்ந்தாள் , இரண்டாவது முறை மணி ஒலித்ததும், அவள் இவ்வாறு கூறினாள்:
” நான் உன்னை இன்னொரு முறை பார்த்துக்கொள்கிறேன்ஸ மீண்டும் ஒருமுறை உற்றுப் பார்த்துக் கொள்கிறேன். சரியா.” அவள் கண்ணீர் சிந்தவில்லை; ஆனால் அவள் முகம் நடுங்கிக்கொண்டிருந்தது—அவள் மிகவும் துயரத்தில் ஆழ்ந்திருந்ததால், பார்ப்பதற்கு ஏதோ உடல்நலக்குறைவு ஏற்பட்டது போலத் தோன்றினாள்.
“நான் உன்னை என்றும் நினைவில் வைத்துக்கொள்வேன்ஸ உன்னைப் பற்றியே சிந்தித்துக்கொண்டிருப்பேன் ,” என்று அவள் கூறினாள். “கடவுள் உன்னுடன் இருக்கட்டும் ; மகிழ்ச்சியாக இரு. என் மீது எந்தத் தீங்கையும் நினைவில் கொள்ளாதே. நாம் என்றென்றும் பிரிகிறோம் — இது தவிர்க்க முடியாதது; ஏனெனில், நாம் ஒருபோதும் சந்தித்திருக்கவே கூடாது. சரி, கடவுள் உன்னுடன் இருக்கட்டும்.”
ரயில் வேகமாக நகரத் தொடங்கியது; அதன் விளக்குகள் விரைவில் கண்ணிலிருந்து மறைந்தன. ஒரு நிமிடம் கழித்து, அதன் சத்தமும் அறவே அற்றுப்போனது — அந்த இனிய மயக்கத்தையும், அந்தப் பைத்தியக்காரத்தனத்தையும் கூடிய விரைவில் முடித்துவைக்க அனைத்தும் ஒன்றுசேர்ந்து சதி செய்தது போலிருந்தது. நடைமேடையில் தனித்து விடப்பட்ட நிலையில், இருண்ட தொலைவை உற்றுநோக்கியவாறு, புல்வெட்டுக்கிளிகளின் கீச்சொலியையும், தந்தி கம்பிகளின் ரீங்காரத்தையும் குரோவ் செவிமடுத்தான்; தான் இப்போதுதான் உறக்கத்திலிருந்து விழித்தெழுந்தது போன்றதொரு உணர்வை அவன் பெற்றான். தன் வாழ்வில் மற்றொரு அத்தியாயமோ அல்லது சாகசமோ நிகழ்ந்திருக்கிறது என்றும் , அதுவும் இப்போது முடிவுக்கு வந்துவிட்டது என்றும், அதன் நினைவைத் தவிர வேறெதுவும் எஞ்சவில்லை என்றும் அவன் ஆழ்ந்த சிந்தனையுடன் எண்ணிப் பார்த்தான்ஸ உடனே நெகிழ்ந்துபோனான் ; துயருற்றான்; அத்துடன், லேசான மனவருத்தத்தையும் உணர்ந்தான். இனி ஒருபோதும் சந்திக்கப்போகாத அந்த இளம் பெண், அவனுடன் இருந்தபோது மகிழ்ச்சியாக இருக்கவில்லை. அவன் அவளிடம் உண்மையான கனிவையும் பாசத்தையும் வெளிப்படுத்திய போதிலும், அவனது நடையிலும், குரலிலும், அவன் அளித்த லேசான வருடல்களிலும் ஒரு மெல்லிய நையாண்டியின் சாயல் கலந்திருந்தது — அது , அவளைவிட ஏறக்குறைய இருமடங்கு வயதான, மகிழ்ச்சியான ஒரு ஆணுக்குரிய, சற்று முரட்டுத்தனமான மேட்டிமை உணர்வாக அமைந்திருந்தது . அவள் அவனைத் தொடர்ந்து ‘கனிவானவன்’, ‘சிறப்பானவன்’, ‘உயரிய பண்பாளன்’ என்றெல்லாம் அழைத்துவந்தாள் ; வெளிப்படையாகச் சொன்னால், அவன் உண்மையில் எத்தகையவனோ அதிலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஒருவனாகவே அவளுக்குத் தோன்றியிருக்கிறான் — ஆகையால், அவன் அறியாமலேயே அவன் அவளை ஏமாற்றியிருக்கிறான்ஸ
இங்கு ரயில் நிலையத்தில், இலையுதிர் காலத்திற்குரிய நறுமணம் ஏற்கனவே பரவியிருந்தது; அது ஒரு குளிர்ந்த மாலைப் பொழுதாக அமைந்திருந்தது.
“நான் வடக்கு நோக்கிப் புறப்பட வேண்டிய நேரம் வந்துவிட்டது,” என்று நடைமேடையை விட்டு வெளியேறியவாறே குரோவ் தனக்குள் எண்ணிக்கொண்டான். ” ஆம் இது தான் கிளம்புவதற்கு மிகச் சரியான நேரம் !”
The Lady with the Dog – Wikipedia
III
மாஸ்கோவில் உள்ள வீட்டில் எல்லாம் அதன் குளிர்கால வழக்கப்படி இருந்தன; அடுப்புகள் சூடாக்கப்பட்டிருந்தன, காலையில் குழந்தைகள் காலை உணவு உண்டு பள்ளிக்குத் தயாராகும் போது இன்னும் இருட்டாகவே இருந்தது , செவிலியர் சிறிது நேரத்திற்கு விளக்கை ஏற்றுவர். பனிப்பொழிவு ஏற்கெனவே தொடங்கியிருந்தது. முதல் பனி விழுந்ததும், பனிச்சறுக்கு வண்டி ஓட்டும் முதல் நாளில், வெண்மையான மண்ணையும், வெண்மையான கூரைகளையும் காண்பதும், மென்மையான, சுவையான மூச்சை உள்ளிழுப்பதும் இனிமையாக அனுபவமாக இருக்கும், மேலும் அந்தப் பருவம் ஒருவரின் இளமைக்கால நாட்களை மீண்டும் நினைவுக்கு கொண்டுவருகிறது. உறைபனியால் வெண்மையாகியிருக்கும் பழைய எலுமிச்சை மற்றும் பிர்ச் மரங்கள் ஒரு நல்ல இயல்புடைய அழகான தோற்றத்தைக் கொண்டுள்ளன; அதனாலேயே அவைகள் சைப்ரஸ் மற்றும் பனை மரங்களை விட ஒருவரின் இதயத்திற்கு நெருக்கமானவைகளாகுகின்றன . அவற்றின் அருகில் ஒருவர் கடலையும் மலைகளையும் பற்றி நினைக்க விரும்புவதில்லை.
குரோவ் மாஸ்கோவில் பிறந்தவன் . அவன் ஒரு அருமையான பனிப்பொழிவு நாளில் மாஸ்கோவிற்கு வந்தான் . மேலும் அவன் தனது உரோம அங்கியையும் சூடான கையுறைகளையும் அணிந்துகொண்டு பெட்ரோவ்கா வழியாக நடந்து சென்றான் , சனிக்கிழமை மாலையில் மணியோசையைக் கேட்டபோது, அவனது சமீபத்திய பயணமும் அவன் கண்ட இடங்களும் அவனுக்குள் இருந்த எல்லா ஈர்ப்பையும் இழந்தன. மெல்ல மெல்ல அவன் மாஸ்கோ வாழ்க்கையில் மூழ்கினான்; ஒரு நாளைக்கு மூன்று செய்தித்தாள்களைப் பேராசையுடன் படித்தான்; கொள்கையளவில் மாஸ்கோ செய்தித்தாள்களைப் படிப்பதில்லை என்றும் அறிவித்தான்! உணவகங்கள், கேளிக்கை விடுதிகள், இரவு விருந்துகள், ஆண்டுவிழாக் கொண்டாட்டங்களுக்குச் செல்ல வேண்டும் என்ற ஏக்கம் அவனுக்குள் ஏற்கனவே இருந்தது ; புகழ்பெற்ற வழக்கறிஞர்கள் மற்றும் கலைஞர்களை உபசரிப்பதிலும் , மருத்துவர்கள் சங்கத்தில் ஒரு பேராசிரியருடன் சீட்டு விளையாடுவதிலும் அவன் பெருமைப்பட்டான். அவனால் ஏற்கனவே ஒரு தட்டு நிறைய உப்பு மீனையும் முட்டைக்கோஸையும் சாப்பிட முடிந்தது.
இன்னும் ஒரு மாதத்தில், அன்னா செர்ஜியேவ்னாவின் உருவம் அவனது நினைவில் ஒரு மூடுபனியால் மூடப்பட்டுவிடும் என்றும் , மற்றவர்களைப் போல அவ்வப்போது ஒரு நெகிழ்ச்சியான புன்னகையுடன் அவனது கனவுகளில் வந்து போகும் என்றும் அவன் கற்பனை செய்தான் . ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. ஒரு மாதத்திற்கும் மேலாகக் கடந்துவிட்டது , உண்மையான குளிர்காலமும் வந்துவிட்டது, ஆனாலும் அவன் அன்னா செர்ஜியேவ்னாவிடமிருந்து முந்தைய நாள்தான் பிரிந்து வந்தது போல எல்லாம் நினைவில் தெளிவாக இருந்தது . மேலும் மேலும் அவனது நினைவுகள் மேலும் மேலும் தெளிவாக ஒளிர்ந்தன. மாலை நேர அமைதியில் , தன் படிக்கும் அறையிலிருந்து , பாடங்களைத் தயாரிக்கும் தன் பிள்ளைகளின் குரல்களை அவன் கேட்கும்போதும் , அல்லது உணவகத்தில் ஒரு பாடலையோ ஆர்கன் இசையையோ கேட்கும்போதும் , அல்லது புகைபோக்கியில் புயல் ஊளையிடும்போதும் , திடீரென்று எல்லாம் அவன் நினைவில் மேலெழும் : அணைக்கட்டில் நடந்தவை, மலைகளில் மூடுபனி படர்ந்திருந்த அந்த அதிகாலை, தியோடோசியாவிலிருந்து வந்த நீராவிப் படகு , மற்றும் அந்த முத்தங்கள். அவன் தன் அறையைச் சுற்றி நீண்ட நேரம் அங்கும் இங்கும் நடந்துகொண்டே, அனைத்தையும் நினைவுகூர்ந்து புன்னகைப்பான்; பிறகு அவனது நினைவுகள் கனவுகளாக மாறும், அவனது கற்பனையில் கடந்த காலம் வரவிருப்பவற்றுடன் கலந்துவிடும். அன்னா செர்ஜியேவ்னா கனவுகளில் அவனைச் சந்திக்க வரவில்லை, ஆனால் ஒரு நிழலைப் போல எல்லா இடங்களிலும் அவனைப் பின்தொடர்ந்து அவனைத் தொந்தரவு செய்தாள். அவன் கண்களை மூடும்போது, அவள் தனக்கு முன்னால் வாழ்வது போல அவளைக் கண்டான், அவள் அப்போது இருந்ததை விட அழகாகவும், இளமையாகவும், மென்மையாகவும் அவனுக்குத் தோன்றினாள்; மேலும் யால்டாவில் இருந்ததை விடத் தன்னைச் சிறந்தவனாக அவன் கற்பனை செய்துகொண்டான். மாலை நேரங்களில் அவள் புத்தக அலமாரியிலிருந்தும், நெருப்பிடம் இருந்தும், மூலையிலிருந்தும் அவனை எட்டிப் பார்த்தாள் — அவள் மூச்சுவிடும் சத்தமும், அவள் ஆடையின் வருடும் சலசலப்பும் அவனுக்குக் கேட்டன. தெருவில் அவன் பெண்களைப் பார்த்தான், அவளைப் போன்ற ஒருத்தியை தேடினான்.
தன் நினைவுகளை யாரிடமாவது பகிர்ந்துகொள்ள வேண்டும் என்ற தீவிர ஆசையால் அவன் வாதிக்கப்பட்டான். ஆனால், தன் வீட்டில் தன் காதலைப் பற்றிப் பேசுவது இயலாத காரியமாக இருந்தது , மேலும் அவனுக்கு வெளியே யாரும் இல்லை; அவனால் தன் வாடகைதாரர்களிடமோ அல்லது வங்கியில் உள்ள யாரிடமோ பேச முடியவில்லை. மேலும், பேசுவதற்கு அவனிடம் என்ன இருந்தது? அப்போது அவன் காதலில் இருந்தானா? அன்னா செர்ஜியேவ்னாவுடனான அவனது உறவில் அழகான, கவித்துவமான, அல்லது அறிவு புகட்டும், அல்லது வெறுமனே சுவாரஸ்யமான ஏதாவது இருந்ததா ? மேலும், காதலைப் பற்றியும், பெண்களைப் பற்றியும் தெளிவற்ற முறையில் பேசுவதைத் தவிர அவனுக்கு வேறு வழியில்லை, அதன் அர்த்தம் என்னவென்று யாரும் யூகிக்கவில்லை ; அவனது மனைவி மட்டும் தன் கருப்புப் புருவங்களைச் சுருக்கி விட்டு சொன்னாள்:
“பெண்களைக் கவரும் பாத்திரம் உனக்குச் சற்றும் பொருந்தாது, டிமிட்ரி.”
ஒரு நாள் மாலை , மருத்துவர்கள் சங்கத்தில் சீட்டு விளையாடிக்கொண்டிருந்த ஒரு அதிகாரியுடன் வெளியே வந்தபோது, அவனால் இதை சொல்லாமல் இருக்க முடியவில்லை:
“யால்டாவில் நான் சந்தித்த அந்த வசீகரமான பெண் யார் என்று மட்டும் உங்களுக்குத் தெரிந்திருந்தால்!”
அந்த அதிகாரி தனது பனிச்சறுக்கு வண்டியில் ஏறிச் செல்லத் தயாரானபோது, திடீரெனத் திரும்பிக் கத்தினார் :
“திமித்ரி திமித்ரிச்!”
“என்ன?”
” இன்று மாலை நீங்கள் சொன்னது சரிதான்: அந்த ஸ்டர்ஜன் மீன் சற்று அதிகமே வசீகரமாக இருந்தது! ”
மிகவும் சாதாரணமாகத் தோன்றிய இந்த வார்த்தைகள், ஏனோ குரோவுக்குக் கடும் கோபத்தை ஏற்படுத்தி , இழிவானதாகவும் அசுத்தமானதாகவும் தோன்றின. என்ன காட்டுமிராண்டித்தனமான பழக்கவழக்கங்கள், என்ன மக்கள் இவர்கள் ! என்ன அர்த்தமற்ற இரவுகள் , ஏன் இந்த சுவாரஸ்யமற்ற, இனிய நிகழ்வுகளற்ற பகல்கள்! ஏன் சீட்டு விளையாட்டின் மீது இத்தனை வெறி ? , பெருந்தீனி, குடிவெறி , எப்போதும் ஒரே விஷயத்தைப் பற்றிய இடைவிடாத பேச்சு. பயனற்ற செயல்களும், எப்போதும் ஒரே விஷயத்தைப் பற்றிய உரையாடல்களும், ஒருவரின் நேரத்தின் பெரும்பகுதியையும், சக்தியின் பெரும்பகுதியையும் உறிஞ்சிக்கொள்கின்றன. இறுதியில், தாழ்ந்துபோன, சுருக்கப்பட்ட, மதிப்பற்ற, அற்பமான ஒரு வாழ்க்கைதான் மிஞ்சுகிறது. அதிலிருந்து தப்பிக்கவோ அல்லது விலகிச் செல்லவோ வழியில்லை – ஒரு மனநல மருத்துவமனையிலோ அல்லது சிறையிலோ இருப்பது போல தான் இருக்கிறது இங்கே வாழ்க்கை .
குரோவ் இரவு முழுவதும் தூங்கவில்லை, கோபத்தால் நிறைந்திருந்தான். அடுத்த நாள் முழுவதும் அவனுக்குத் தலைவலி இருந்தது. அடுத்த இரவும் அவன் சரியாகத் தூங்கவில்லை; படுக்கையில் அமர்ந்து யோசித்துக்கொண்டிருந்தான், தன் அறையில் முன்னும் பின்னுமாக நடந்துகொண்டிருந்தான். அவனுக்குத் தன் பிள்ளைகள் மீதும், வங்கி மீதும் வெறுப்பு ஏற்பட்டது. அவனுக்கு எங்கும் செல்லவோ எதைப் பற்றியும் பேசவோ விருப்பமில்லை.
டிசம்பர் மாத விடுமுறையில், அவன் ஒரு பயணத்திற்குத் தயாரானான். ஒரு இளம் நண்பனின் நலனுக்காக பீட்டர்ஸ்பர்க்கிற்குச் செல்வதாகத் தன் மனைவியிடம் கூறிவிட்டு, அவன் எஸ் நகரத்தை – நோக்கிப் புறப்பட்டான். எதற்காக? அவனுக்கே அது சரியாகத் தெரியவில்லை. அவன் அன்னா செர்ஜியேவ்னாவைப் பார்க்கவும், அவளுடன் பேசவும், முடிந்தால் போதும் . ஒரு சந்திப்பிற்கு ஏற்பாடு செய்யவும் விரும்பினான்.
அவன் காலையில் எஸ் நகரத்தை அடைந்து, விடுதியில் சிறந்த அறையை எடுத்தான். அந்த விடுதியின் தரை சாம்பல் நிற ராணுவத் துணியால் மூடப்பட்டிருந்தது. மேசையின் மீது ஒரு மைக்கூடு இருந்தது; அது தூசியால் சாம்பல் நிறமாகி, குதிரையின் மீது அமர்ந்திருக்கும் ஒரு உருவத்தால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அந்த உருவம் தன் கையில் தொப்பியுடனும், உடைந்த தலையுடனும் காணப்பட்டது. விடுதியின் காவலாளி அவனுக்குத் தேவையான தகவல்களைக் கொடுத்தான்; வான் டிடெரிட்ஸ் பழைய கோன்ட்சார்னி தெருவில் தனக்கென ஒரு வீட்டில் வசித்து வந்தான் – அது விடுதியிலிருந்து வெகு தொலைவில் இல்லை: அவன் பணக்காரன், ஆடம்பரமாக வாழ்ந்தான், மேலும் அவனுக்குச் சொந்தமாகக் குதிரைகளும் இருந்தன; ஊரில் உள்ள அனைவருக்கும் அவனைத் தெரியும். காவலாளி “டிரிடிரிட்ஸ்” என்ற பெயரை உச்சரித்தான்.
குரோவ் அவசரப்படாமல் பழைய கோன்ட்சார்னி தெருவுக்குச் சென்று அந்த வீட்டைக் கண்டுபிடித்தான். அந்த வீட்டிற்கு நேர் எதிரே, ஆணிகளால் அலங்கரிக்கப்பட்ட ஒரு நீண்ட சாம்பல் நிற வேலி நீண்டு கிடந்தது.
“அத்தகைய ஒரு வேலியைக் கண்டால், எவரொருவரும் பயந்து ஓடிவிடுவார்கள்,” என்று நினைத்துக்கொண்டான் குரோவ்; அவன் வேலியிலிருந்து வீட்டின் ஜன்னல்களையும், மீண்டும் வேலியையும் மாறி மாறிப் பார்த்தான்.
அன்று விடுமுறை நாள் என்பதால், அவளுடைய கணவன் அநேகமாக வீட்டில்தான் இருப்பான் என்று அவன் ஊகித்துக்கொண்டான். எப்படியாயினும், நேரடியாக வீட்டிற்கே சென்று அவளைச் சங்கடப்படுத்துவது நாகரிகமாக இருக்காது. மேலும், தான் அனுப்பும் குறிப்பு ஏதேனும் அவளுடைய கணவனின் கையில் சிக்கிக்கொண்டால், அது ஒரு பெரும் விபரீதத்தையே விளைவித்துவிடக்கூடும். எனவே, அவளை எப்போதாவது பார்க்க முடியுமா என்ற நம்பிக்கையில், அங்கேயே காத்திருப்பதுதான் மிகச் சிறந்த வழி என்று அவன் தீர்மானித்தான். அதன்படியே அவன் அந்தத் தெருவில் முன்னும் பின்னும் நடந்தான்; அந்த வேலிக்கு அருகிலேயே வட்டமிட்டபடி, அவளைச் சந்திப்பதற்கான வாய்ப்பை எதிர்பார்த்துக் காத்திருந்தான். ஒரு பிச்சைக்காரன் வாயிலுக்குள் நுழைந்தான்; ஆனால் நாய்கள் அவனைத் துரத்தித் தாக்கின. அதன்பின், ஒரு மணி நேரம் கழித்து , ஒரு பியானோவிலிருந்து எழும் மெல்லிய, மங்கலான இசை ஒலிகள் அவன் காதுகளில் வந்து விழுந்தன. அது அன்னா செர்கேவ்னா வாசித்துக் கொண்டிருக்கும் ஒலியாகத்தான் இருக்க வேண்டும். திடீரென்று முன்புறக் கதவு திறந்தது; அதிலிருந்து ஒரு மூதாட்டி வெளியே வந்தாள்; அவளைத் தொடர்ந்து, அவனுக்கு நன்கு அறிமுகமான ஒரு வெள்ளை நிற ‘போமரேனியன்’ நாய் வந்தது. குரோவ் அந்த நாயை அழைப்பதற்காகக் குரல் கொடுக்க முயன்றான்; ஆனால் அவன் இதயம் படபடவென அடித்துக்கொண்டது; அந்தப் பதற்றத்தில், அந்த நாயின் பெயரை அவனால் நினைவுகூரவே முடியவில்லை.
அவன் தொடர்ந்து நடந்தான்; அந்தச் சாம்பல் நிற வேலியின் மீது அவனுக்கு இருந்த வெறுப்பு இப்போது மேலும் மேலும் அதிகரித்தது. அன்னா செர்கேவ்னா தன்னை மறந்துவிட்டாள் என்றும் — ஒருவேளை, வேறொருவரிடம் தன் கவனத்தைத் திருப்பி, ஆறுதல் தேடிக்கொண்டிருக்கலாம் என்றும்— அவன் தனக்குள்ளேயே கோபத்துடன் சொல்லிக்கொண்டான். காலை முதல் இரவு வரை, இந்தச் சாபத்திற்குரிய வேலியையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருக்க வேண்டிய நிர்பந்தத்தில் இருக்கும் ஒரு இளம் பெண்ணைப் பொறுத்தவரை, இதைவிட இயல்பான விஷயம் வேறு என்ன இருக்க முடியும்? அவன் தன் தங்கும் விடுதிக்குத் திரும்பினான்; தன் அறையில் இருந்த சோபாவில் அமர்ந்து , என்ன செய்வதென்று தெரியாமல் சிறிது நேரம் யோசித்தான். பின்னர் இரவு உணவை ஆர்டர் செய்து சாப்பிட்டான்; உணவு முடிந்ததும், நீண்ட நேரம் உறங்கினான்.
“எத்துணை முட்டாள்தனமான , அமைதியற்ற ஒரு செயல் இது!” என்று, உறக்கத்திலிருந்து விழித்தெழுந்து, இருள் சூழ்ந்த ஜன்னல் கண்ணாடிகளை வெறித்துப் பார்த்தவாறே அவன் தனக்குள்ளேயே எண்ணிக்கொண்டான். அதற்குள் மாலை நேரம் ஆகிவிட்டிருந்தது. “சரி, நான் நன்றாகத் தூங்கி முடித்துவிட்டேன். இனி இந்த இரவில் நான் என்னதான் செய்வது?”
அவன் படுக்கையில் எழுந்து அமர்ந்தான்; மருத்துவமனைப் போர்வையை நினைவுபடுத்தும் வகையில் அமைந்திருந்த , மலிவான சாம்பல் நிறப் போர்வையால் அவன் தன்னை மூடிக்கொண்டிருந்தான். தன் மனதிலிருந்த சலிப்பு மற்றும் விரக்தியின் காரணமாக, அவன் தன்னைத்தானே ஏளனம் செய்துகொள்ளத் தொடங்கினான்.
“எத்துணை முட்டாள்தனமான, அமைதியற்ற ஒரு விவகாரம் இது!” என்று நினைத்துக்கொண்டே, அவன் உறக்கம் கலைந்து இருண்ட ஜன்னல் கண்ணாடிகளை நோக்கினான். அதற்குள் மாலைப் பொழுது ஆகிவிட்டிருந்தது. “சரி, நான் நன்றாகத் தூங்கி முடித்துவிட்டேன். இனி இந்த இரவில் நான் என்ன செய்யப்போகிறேன்?”
“நீயும், உன்னுடைய ‘ நாய் வைத்திருக்கும் பெண்’ணும்ஸ உனக்கெல்லாம் ஏன் ஒரு சாகசம் ? உன் பிரயத்தனங்களுக்கெல்லாம் என்ன பலன் கிடைத்திருக்கிறது என்று பார்.”
அன்று காலையில் ரயில் நிலையத்திற்கு வந்தபோது, உள்ளூர் நாடக அரங்கில் ‘தி கெய்ஷா’ என்ற நாடகத்தின் முதல் அரங்கேற்றம் நடைபெறவிருப்பதை , பிரம்மாண்டமான எழுத்துக்களில் அறிவிக்கும் ஒரு சுவரொட்டியை அவன் கவனித்திருந்தான். அதை நினைவுகூர்ந்த அவன் , படுக்கையிலிருந்து எழுந்து நாடக அரங்கை நோக்கிச் சென்றான்.
“அவள் இது போன்ற முதல் நாள் அரங்கேற்றங்களுக்குச் செல்லக்கூடும் என்பதற்கு அதிக வாய்ப்பிருக்கிறது,” என்று அவன் தனக்குத்தானே சொல்லிக்கொண்டான். நாடக அரங்கம் பார்வையாளர்களால் நிரம்பி வழிந்தது. அது ஒரு வழக்கமான மாகாண நகரத்து நாடக அரங்கம் போலவே காட்சியளித்தது ; அங்கே சரவிளக்குகளின் மீது ஒருவிதப் புகைப்படலம் படிந்திருந்தது . மேலும் மேல் மாடப் பகுதியில் அமர்ந்திருந்த கூட்டம் சத்தமிட்டவாறு அமைதியற்று அசைந்துகொண்டிருந்தது. அரங்கின் முன்பகுதி இருக்கைகளின் முதல் வரிசையில், உள்ளூர் நாகரிகப் பிரியர்கள் சிலர், கைகளை முதுகிற்குப் பின்னால் கோர்த்தவாறு, திரை விலகுவதற்காகக் காத்திருந்தனர். அங்கே, ஆளுநருக்கென ஒதுக்கப்பட்ட தனிப்பெட்டியின் முன்புற இருக்கையில், ஆளுநரின் மகள் கழுத்தில் ஒரு இறகுப் பட்டையை அணிந்தவாறு அமர்ந்திருந்தாள்; ஆளுநரும் திரைகளுக்குப் பின்னால் அடக்கமாக மறைந்திருந்ததால், அவருடைய கைகள் மட்டுமே வெளியே தெரிந்தன. திரை அசைந்தது; இசைக்குழுவினர் தங்கள் வாத்தியங்களைச் சுருதி கூட்டுவதற்கு நீண்ட நேரம் எடுத்துக்கொண்டனர். பார்வையாளர்கள் வரிசையாக உள்ளே நுழைந்து தங்கள் இருக்கைகளில் அமர்ந்துகொண்டிருக்கையில், குரோவின் கண்கள் அவர்களை ஆவலுடன் துழாவின.
அங்கே அன்னா செர்கேவ்னாவும் உள்ளே வந்தாள். அவள் அரங்கின் முன்பகுதி இருக்கைகளின் மூன்றாவது வரிசையில் அமர்ந்தாள். குரோவின் பார்வை அவள் மீது பட்ட கணத்தில், அவனது இதயம் ஒரு கணம் நின்றுவிட்டது ; இந்த முழு உலகிலும் அவனுக்கு இதைவிட நெருக்கமானவரோ , பிரியமானவரோ, அல்லது அவனது மகிழ்ச்சிக்கு இவளை விட முக்கியமானவரோ வேறு யாருமில்லை என்பதை அவன் அந்த ஒரு கணத்தில் உணர்ந்துகொண்டான்.
அந்த மாகாண நகரக் கூட்டத்திற்குள் கரைந்துபோய் , எவ்விதச் சிறப்பம்சமும் இன்றி, கையில் ஒரு சாதாரணக் கைக்கண்ணாடியை ஏந்தியவாறு அமர்ந்திருந்த அந்தச் சிறிய பெண்மணிதான் , இப்போது அவனது முழு வாழ்க்கையையும் ஆக்கிரமித்திருந்தாள் ; அவளே அவனது துயரமாகவும் , அவனது மகிழ்ச்சியாகவும், அவன் விரும்பிய அனைத்தாகவும் திகழ்கிறாள். பலவீனமான, அமெச்சூர் வயலின் கலைஞர்களைக் கொண்ட அந்தச் சோகமான இசைக்குழுவிலிருந்து வந்த ஒலிகளால் தாலாட்டப்பட்டவனாய் , அவள் எவ்வளவு அழகாக இருக்கிறாள் என்று அவன் நினைத்தான்ஸ , கனவும் கண்டான்.
அன்னா செர்கேவ்னாவுடன், உயரமான, குனிந்த தோள்களைக் கொண்ட, சிறிய பக்கவாட்டு மீசையுடைய ஒரு இளைஞன் வந்திருந்தான்; அவன் ஒவ்வொரு அடியெடுத்து வைக்கும்போதும் தலையசைத்துக்கொண்டே வந்து, அவளுக்குப் பக்கத்தில் அமர்ந்தான் —அவன் இடைவிடாமல் யாரோ ஒருவருக்கு வணக்கம் செலுத்துவது போலவே தோன்றியது . இவன்தான் அவளுடைய கணவனாக இருக்க வேண்டும் ; யால்டாவில் இருந்தபோது, ஒரு கசப்பான மனநிலையில் அவள் இவனை ஒரு ” பணியாள்” என்று அழைத்திருந்தாளே, அவன்தான் இவன். உண்மையில், அவனுடைய ஒல்லியான உருவத்திலும், பக்கவாட்டு மீசையிலும், தலையின் உச்சியில் இருந்த சிறிய வழுக்கையிலும் ஒரு வேலைக்காரனுக்குரிய அடிமைத்தனத்தின் சாயல் தென்பட்டது . அவன் இனிமையாகப் புன்னகைத்தான்; அவனுடைய சட்டைப் பொத்தானில் மின்னிக்கொண்டிருந்த ஏதோ ஒரு அறிவியல் சங்கத்தின் சின்னம் , ஒரு வேலைக்காரனின் அடையாள எண்ணையோ அல்லது சீருடையையோ போலவே காட்சியளித்தது.
முதல் இடைவேளையின்போது கணவன் புகைபிடிக்க வெளியே சென்றான்; அப்போது அவள் தன் இருக்கையில் தனியாக அமர்ந்திருந்தாள். அரங்கத்தின் முன்பகுதியில் அமர்ந்திருந்த குரோவ், அவளை நோக்கிச் சென்று, ஒரு செயற்கையான புன்னகையுடன், நடுங்கும் குரலில், “வணக்கம்,” என்று கூறினான்.
அவள் நிமிர்ந்து அவனைப் பார்த்ததும் முகம் வெளிறிப்போனாள் ; பிறகு, தன் கண்களையே நம்பமுடியாதவளாய், பதற்றத்துடன் மீண்டும் அவனைப் பார்த்தாள். ஒரு கையில் தன் விசிறியையும் தொலைநோக்கிக் கண்ணாடியையும் இருக்கப் பிடித்துக்கொண்டு, மயக்கம் வருவது போன்ற உணர்வை அடக்கப் போராடுபவளாய் அவள் காணப்பட்டாள். அவர்கள் இருவருமே ஒரு வார்த்தைகூடப் பேசிக்கொள்ளவில்லை. அவள் அங்கேயே அமர்ந்திருக்க , அவன் அவளுக்குப் பக்கத்தில், திகைத்துப்போனவனாய் நின்றுகொண்டிருந்தான்.
அவளுடைய அதீதமான பதட்டத்தால், உட்காரத் துணியவில்லை. வயலின்களும் புல்லாங்குழல்களும் இசைக்கப்பட்டபடி இருந்தன, வளிமண்டலத்தில் ஒரு பதட்டமான உணர்வு ஏற்பட்டது, எல்லா பெட்டிகளிலிருந்தும் அவர்கள் இருவரும் கவனிக்கப்படுவது போல இருந்ததது – கடைசியில் அவள் எழுந்து வெளியேறும் வழிகளில் ஒன்றை நோக்கி வேகமாக நகர்ந்தாள். அவன் அவளைப் பின்தொடர்ந்தான், அவர்கள் படிக்கட்டுகளில் இலக்கின்றி அலைந்தார்கள் ; எங்கே பார்த்தாலும் மனித உருவங்கள். சட்ட அதிகாரிகள், உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் அரசு ஊழியர்களின் சீருடையில் அரசாங்க பணியாளர்கள் , அனைவரும் பேட்ஜ் அணிந்திருந்தனர் ; பெண்களின் தோல் தொப்பிகள் அவர்கள் அணிந்திருந்த கோட்டுகளில் தொங்கிக் கொண்டிருந்தன. அந்த அரங்கம் முழுவதும் வெக்கை அலை போல பரவியது , அதனுடன் சிகரெட் வாசனையும் சேர்ந்து வந்தது – இதயம் வேகமாக துடித்துக் கொண்டிருக்க குரோவ் , “இந்த மக்கள் அனைவரும் எங்கே போகிறார்கள் ? , இந்த இசைக்குழு எதற்காக?” என்று யோசித்தான்: “அடுத்த நிமிடம், அன்னா செர்ஜியேவ்னாவை அன்று மாலை ரயில் நிலையத்தில் பார்த்த பிறகு , எல்லாம் முடிந்துவிட்டது, அவர்கள் மீண்டும் ஒருபோதும் சந்திக்க மாட்டார்கள் என்று அவன் தனக்குத்தானே சொல்லிக்கொண்டது திடீரென்று நினைவுக்கு வந்தது. முடிவு இப்போது எவ்வளவோ தொலைவில் இருப்பதாகத் தோன்றியது!
அவள் ஒரு இருண்ட குறுகிய படிக்கட்டில் நின்றாள், அதன் மேல் ” மேல் வட்டத்திற்கு” என்று எழுதப்பட்ட ஒரு அறிவிப்பு இருந்தது.
“நீ என்னை எப்படி பயமுறுத்தி விட்டாய் !” அவள் பெருமூச்சு விட்டாள், இன்னும் வெளிர் நிறமாகவும், பாதி திகைத்துப் போனவளாகவும் இருந்தாள். “ஓ, நீ என்னை எப்படி பயமுறுத்தி விட்டாய் தெரியுமா ? ! நான் கிட்டத்தட்ட இறந்துவிட்டேன் ! நீ ஏன் வந்தாய்? ” ஓ, ஏன் வந்தாய் ?”
“ஆனால், அன்னா ,” என்று அவன் மெதுவாகவும், அவசரமாகவும் கூறினான். “ஆனால், அன்னா. புரிந்துகொள்ள முயற்சி செய்ஸ முயற்சி செய். ”
அவள் அவனை அச்சமும் , கெஞ்சலும் அன்பும் கலந்த ஒரு பார்வையால் நோக்கினாள் ; பின்னர், அவனது முகத்தோற்றத்தைத் தன் நினைவில் ஆழப் பதித்துக்கொள்வது போல, அவனை உற்று நோக்கிக்கொண்டிருந்தாள்.
“நான் மிகுந்த துயரத்தில் ஆழ்ந்திருந்தேன்,” அவனது வார்த்தைகளைச் சற்றும் பொருட்படுத்தாமல் அவள் தொடர்ந்து பேசினாள். “இந்தக் காலம் முழுவதும் உன்னைத் தவிர வேறு எதைப் பற்றியும் என்னால் சிந்திக்கவே முடியவில்லை; உன் நினைவுகளாலேயே நான் உயிர் வாழ்ந்தேன். உன்னை மறக்க நான் எவ்வளவோ முயன்றேன்— ஆனால் ஏன்,, நீ ஏன் இங்கு வந்தாய்?”
அவர்களுக்கு மேலே இருந்த தளத்தில், இரண்டு பள்ளிச் சிறுவர்கள் புகைபிடித்தவாறு கீழே நோக்கிக்கொண்டிருந்தனர்; ஆனால் குரோவ் அதைப் பற்றிக் கவலைப்படவில்லை. அவன் அன்னா செர்கேவ்னாவைத் தன் பக்கம் இழுத்து, அவளது முகம், இதழ்கள் மற்றும் கைகளில் முத்தமிடத் தொடங்கினான்.
“என்ன செய்கிறாய் ? ஓ, நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய்?” என்று அவள் திகிலுடன் கூறி, பின்வாங்கினாள். “நாம் இருவருமே பைத்தியமாகிவிட்டோம். இன்றிரவே, இந்த நிமிடமே நீ இங்கிருந்து சென்றுவிடுஸ புனிதமான அனைத்தின் மீதும் ஆணையிட்டு உன்னைக் கெஞ்சுகிறேன். யாரோ இங்கு வருகிறார்கள்.”
யாரோ ஒருவர் படிக்கட்டுகளில் மேலே ஏறி வந்துகொண்டிருந்தார்.
“நீ இங்கிருந்து சென்றுவிட வேண்டும்,” அன்னா செர்கேவ்னா மெல்லிய குரலில் தொடர்ந்து கூறினாள். “நான் சொல்வது உனக்குக் கேட்கிறதா, திமித்ரி திமித்ரிச்? நான் மாஸ்கோவிலிருக்கும் உன்னிடம் வருவேன். நான் ஒருபோதும் மகிழ்ச்சியாக இருந்ததில்லை; இப்போதும் நான் மகிழ்ச்சியற்று இருக்கிறேன் ; இனி ஒருபோதும் நான் மகிழ்ச்சியடையப் போவதில்லை— ஒருபோதும் ஆம் ஒரு போதும் ! என்னை இன்னும் அதிகமாகத் துன்புறுத்தாதே ! நான் மாஸ்கோவிற்கு உன்னிடம் வருவேன், நான் சத்தியம் செய்கிறேன்! இப்போது நாம் பிரிந்தாக வேண்டும்! என் அன்பே, என் கனிவானவனே, என் பிரியத்திற்குரியவனே— நாம் பிரிந்தாக வேண்டும்.”
அவள் அவனது கையைப் பற்றி கொண்டு இதை சொல்லி விட்டு , படிக்கட்டுகளில் அவசரமாகக் கீழே இறங்கிச் சென்றாள்; செல்லும் வழியெல்லாம் அவள் தொடர்ந்து அவனைத் திரும்பித் திரும்பிப் பார்த்துக்கொண்டே இருந்தாள். அவளது கண்கள், அவள் உண்மையில் மிகுந்த துயரத்தில் ஆழ்ந்திருக்கிறாள் என்பதைத் தெளிவாகப் பறைசாற்றின. குரோவ் தான் நின்ற இடத்திலேயே சிறிது நேரம் நின்று, சுற்றுப்புற ஒலிகளைக் கூர்ந்து கவனித்தான் ; அனைத்தும் அமைதியானதும், அவன் தன் மேலங்கியைத் தேடி எடுத்துக்கொண்டு, அந்த நாடக அரங்கத்தை விட்டு வெளியேறினான்.
அண்ணா செர்ஜியேவ்னா அவனைப் பார்க்க மாஸ்கோ செல்லத் தொடங்கினாள். ஒவ்வொரு இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கும் ஒரு முறை அவள் S. நகரத்தை விட்டு வெளியேறி, பெண் நோய்கள் குறித்த ஒரு நிபுணரை அணுகப் போவதாகத் தன் கணவரிடம் கூறினாள், அவளுடைய கணவன் அவளை நம்பினான் அதே நேரம் அவளை நம்பவுமில்லை. மாஸ்கோவிற்கு வந்தால் , அவள் எப்போதும் “ஸ்லாவியன்ஸ்கி பஜாரில்” தங்கியிருந்தாள், அவள் வந்தவுடன் சிவப்பு தொப்பி அணிந்த ஒரு மனிதன் மூலம் குரோவுக்கு செய்தி அனுப்புவாள். உடனே குரோவ் அவளிடம் செல்வான் , மாஸ்கோவில் யாருக்கும் அது பற்றி எதுவும் தெரியாது.
ஒரு குளிர்கால காலையில் அவன் வழக்கம் போல் அவளைப் பார்க்கச் சென்றான் (தூதுவன் முந்தைய மாலையிலேயே அவனிடம் வந்திருந்தான், ஆனால் வீட்டில் அவனைக் காணவில்லை). அவனுடன் அவனது பள்ளி செல்லும் மகளும் உடன் சென்று கொண்டிருந்தாள். மகளை பள்ளியில் விட்டு விட்டு அண்ணா செர்ஜியேவ்னாவை பார்க்கச் செல்லலாம் என்று அவன் நினைத்திருந்தான்.
“உறைநிலைக்கு மேல் மூன்று டிகிரி வெப்பம் இருக்கிறது, ஆனாலும் பனி பொழிகிறது,” என்று குரோவ் தன் மகளிடம் கூறினான். “பூமியின் மேற்பரப்பில் மட்டுமே பனி உருகுகிறது; வளிமண்டலத்தில் சற்று உயரமான இடத்தில் முற்றிலும் மாறுபட்ட வெப்பநிலை நிலவுகிறது.”
“அப்படியென்றால், குளிர்காலத்தில் இடிமழைகள் ஏன் வருவதில்லை, அப்பா? ” என்று மகள் கேட்டாள்
அதையும் அவன் விளக்கினான். அவன் பேசிக்கொண்டிருந்தபோதே, தான் அன்னாவைச் சந்திக்கச் செல்லவிருப்பதை நினைத்துக்கொண்டிருந்தான் ; அந்த விஷயம் ஒரு உயிருக்கும் தெரியாது , அநேகமாக என்றைக்குமே யாருக்கும் தெரியப்போவதும் இல்லை. அவனுக்கு இரண்டு விதமான வாழ்க்கைகள் இருந்தன: ஒன்று, வெளிப்படையானது — அறிந்துகொள்ள விரும்பிய அனைவருக்கும் தெரிந்ததும் , காணக்கூடியதுமான வாழ்க்கை ; அது அவரது நண்பர்கள் மற்றும் அறிமுகமானவர்களின் வாழ்க்கையைப் போலவே, சார்பு உண்மைகளும் சார்பு பொய்களும் நிறைந்ததாக இருந்தது . மற்றொன்று, ரகசியமாகத் தன் போக்கில் ஓடிக்கொண்டிருந்த ரகசிய வாழ்க்கை . ஏதோ ஒரு விசித்திரமான, ஒருவேளை தற்செயலான சூழ்நிலைகளின் சேர்க்கையினால், அவனுக்கு மிக முக்கியமானதாகவும், சுவாரஸ்யமானதாகவும், மதிப்புமிக்கதாகவும் இருந்த வாழ்க்கை அது —அவன் எவற்றில் உண்மையாக இருந்தானோ , எதில் தன்னைத்தானே ஏமாற்றிக்கொள்ளவில்லையோ, எது அவனது வாழ்க்கையின் மையக்கருவாக அமைந்திருந்ததோ அந்த வாழ்க்கை — அந்த வாழ்க்கை மற்ற மனிதர்களிடமிருந்து மறைக்கப்பட்டிருந்தது.
அவனிடம் இருந்த பொய்கள் அனைத்தும் ( சாதாரண வாழ்க்கை ) —உண்மையை மறைப்பதற்காக அவனால் உண்டாக்கப்பட்டது. உதாரணமாக, வங்கியில் அவன் செய்யும் வேலை, மன்றத்தில் அவன் நடத்தும் விவாதங்கள், அவனது “கீழ்நிலை இனம்” பற்றிய பேச்சுக்கள், திருமண நாள் கொண்டாட்டங்களில் மனைவியுடன் அவன் கலந்துகொள்வது போன்ற அனைத்தும்—வெளிப்படையாகவே இருந்தன. அவன் மற்றவர்களைத் தன்னைப் போன்றே மதிப்பிட்டான்; கண்களால் காண்பவற்றை அவன் நம்பவில்லை. மாறாக, ஒவ்வொரு மனிதனுக்கும் அவனது உண்மையான, மிகவும் சுவாரஸ்யமான வாழ்க்கை ஒன்று, ரகசியத்தின் மறைவிலும் இரவின் மறைவிலும் இயங்கிக்கொண்டிருக்கிறது என்று அவன் எப்போதும் நம்பினான். தனிப்பட்ட வாழ்க்கை அனைத்தும் ரகசியத்தையே அடிப்படையாகக் கொண்டிருந்தது; ஒருவேளை அந்த காரணத்தினாலேயே, நாகரிகமடைந்த மனிதன் தனது தனிப்பட்ட அந்தரங்கம் மதிக்கப்பட வேண்டும் என்பதில் மிகுந்த பதற்றத்துடனும் அக்கறையுடனும் இருந்திருக்கலாம்.
தன் மகளைப் பள்ளியில் விட்டுவிட்டு, குரோவ் ‘ஸ்லாவியன்ஸ்கி பஜார்’ நோக்கிச் சென்றான் . கீழே தன் உரோமக் கோட்டைக் கழற்றி வைத்துவிட்டு, மாடிக்குச் சென்று, மெதுவாகக் கதவைத் தட்டினான். அவனுக்கு மிகவும் பிடித்தமான சாம்பல் நிற ஆடையை அணிந்திருந்த அன்னா செர்கேவ்னா, பயணக் களைப்பாலும், அவனை எதிர்பார்த்துக் காத்திருந்த பதற்றத்தாலும் சோர்ந்துபோய், முந்தைய மாலை முதலே அவனுக்காகக் காத்திருந்தாள். அவள் முகம் வெளிறிப்போயிருந்தது; அவள் அவனைப் பார்த்தாள், ஆனால் புன்னகைக்கவில்லை. அவன் உள்ளே நுழைந்த மறுகணமே, அவள் அவன் மார்பில் சாய்ந்துவிட்டாள். சந்தித்து ஏதோ இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டதைப் போல அவர்கள் நீண்ட நேரமாகமுத்தமிட்டுக்கொண்டிருந்தனர் .
“சரி, அங்கே உன் வாழ்க்கை எப்படிப் போய்க்கொண்டிருக்கிறது?” என்று அவன் கேட்டான். ” வேறு என்ன விசேஷங்கள்?”
“பொறு; நான் சொல்கிறேன்ஸ என்னால் பேச முடியவில்லை.”
அவளால் பேச இயலவில்லை; அவள் அழுதுகொண்டிருந்தாள். அவள் அவனை விட்டு விலகித் திரும்பி, தன் கைக்குட்டையைத் தன் கண்களில் ஒற்றிக்கொண்டாள்.
“அவள் தன் அழுகையை முழுமையாக அழுது தீர்க்கட்டும். நான் அமர்ந்து காத்திருக்கிறேன்,” என்று அவன் எண்ணிக்கொண்டான்; பின்னர், ஒரு கைப்பிடி நாற்காலியில் அமர்ந்தான். பின்னர் அவன் தேநீர் கொண்டுவருமாறு மணியடித்தான்; சிறிது நேரம் கழித்து, அவன் தேநீரைப் பருகிக்கொண்டிருந்த வேளையிலும், அவள் இன்னும். அழுது கொண்டேயிருந்தாள் ..அவள் ஜன்னலை நோக்கித் தன் முகத்தைத் திருப்பியவாறு அங்கேயே நின்றுகொண்டிருந்தாள். உணர்ச்சிப் பெருக்காலும், தங்கள் வாழ்க்கையின் துயரம் குறித்த கசப்பான உணர்வாலும் அவள் அழுதுகொண்டிருந்தாள். அவர்கள் ஒருவரை ஒருவர் ரகசியமாகவே சந்திக்க முடிந்தது; மக்கள் கண்களிலிருந்து மறைந்து, திருடர்களைப் போலவே அவர்கள் பதுங்கி வாழ வேண்டியிருந்தது. அவர்களின் வாழ்க்கை ஒரு சிதைந்த வாழ்க்கையாகத்தானே இருக்கிறது?
“அழாதே,” என்று அவன் சொன்னான்.
அவர்களின் இந்தக் காதல் விரைவில் முடிவுக்கு வராது என்பதும், அது எப்போது முடிவடையும் என்று யாராலும் அறுதியிட்டுக் கூற இயலாது என்பதும் அவனுக்கு மிகத் தெளிவாகப் புரிந்திருந்தது. அன்னா செர்கேயெவ்னா அவனை இன்னும் அதிக அன்புடன் நேசித்தாள், அவனை அவளும் அவ்வளவு பூஜித்தாள்.. எனவே, ஒரு நாள் இந்தக் காதல் முடிவுக்கு வந்தே தீரும் என்று அவளிடம் கூறுவதில் எந்தப் பயனும் இருந்திருக்காது. சொல்லப்போனால், அவள் அதை நம்பவே மாட்டாள்.
அவன் அவளருகே நகர்ந்து சென்று, அவளது தோள்களைப் பற்றிக்கொண்டான். இதமான வார்த்தைகளால் அவளைத் தட்டிக்கொடுத்து ஆறுதல்படுத்தலாம் என்று அவன் எண்ணியிருந்தான்; ஆனால் திடீரென்று கண்ணாடியில் தெரிந்த தன் பிம்பத்தை கண்டு திடுக்கிட்டு விட்டான்.
அவனது தலைமுடி அப்போதே நரைக்கத் தொடங்கியிருந்தது. கடந்த சில ஆண்டுகளில் , தான் இவ்வளவு அதிகமாக முதுமையடைந்துவிட்டது அவனுக்கு விசித்திரமாகத் தோன்றியது. தன் கைகள் பதிந்திருந்த அவளது தோள்கள் இதமாகச் சூடேறியிருந்தன; அவை லேசாக நடுங்கிக்கொண்டிருந்தன. இன்னும் இவ்வளவு இதமாகவும், எழில்மிகுந்ததாகவும் திகழும் இந்த வாழ்க்கையை நினைத்து அவனுக்குப் பரிதாபமாக இருந்தது – ஏனெனில், தன் வாழ்க்கையைப் போலவே இதுவும் விரைவில் வாடி வதங்கிப்போகக்கூடும் அல்லவா? அவள் ஏன் அவனை இவ்வளவு ஆழமாக நேசித்தாள்? பெண்கள் எப்போதும் அவனை, அவன் உண்மையில் இருப்பதைவிட முற்றிலும் மாறுபட்ட ஒருவனாகவே கற்பனை செய்துகொண்டிருந்தார்கள். அவர்கள் நேசித்தது அவனை அல்ல ; தங்கள் கற்பனையில் அவர்கள் சிருஷ்டித்துக்கொண்ட ஒரு மனிதனைத்தான் —தங்கள் வாழ்நாள் முழுவதும் அவர்கள் ஆவலுடன் தேடிக்கொண்டிருந்த ஒரு மனிதனைத்தான் அவர்கள் நேசித்தது. அதன் பிறகு, தங்கள் தவறை அவர்கள் உணர்ந்துகொண்டபோதும், அவர்கள் அவனை அதே போலவே தொடர்ந்து நேசித்து வந்தனர். அவர்களில் ஒருவர்கூட அவனோடு இருந்தபோது மகிழ்ச்சியாக இருந்ததில்லை. காலம் உருண்டோடியது; அவன் ஒரு பெண்ணுக்குப் பின் இன்னொரு பெண்ணைச் சந்தித்தான், ஒவ்வொருவருடனும் நெருக்கமானான், ஒவ்வொருவரையும் பிரிந்தான்—ஆனால் ஒருபோதும் யாரையும் நேசித்ததில்லை. அவர்களுக்கு இடையே எத்தனையோ விஷயங்கள் இருந்தன, ஆனால் அன்பு மட்டும் இருந்ததே இல்லை.
இப்போதுதான் —அவன் தலை நரைத்துப்போன இந்தத் தருணத்தில்தான் —தன் வாழ்நாளில் முதன்முறையாக, முழுமையாகவும் ஆழமாகவும் ஒரு பெண்ணின் மீது காதலில் விழுந்திருக்கிறான்.
அவனும் அன்னா செர்கேவ்னாவும், ஒருவருக்கொருவர் மிகவும் நெருக்கமானவர்களாகவும், கணவன்-மனைவியாகவும், உயிர்த்தோழர்களாகவும் ஒருவரை ஒருவர் நேசித்தனர். விதி தங்களை ஒருவருக்கொருவர் என்றே படைத்திருப்பதாக அவர்கள் உணர்ந்தனர்; அப்படியிருக்கையில், அவளுக்கு ஏன் ஒரு கணவனும் , அவனுக்கு ஏன் ஒரு மனைவியும் இருக்க வேண்டும் என்பதை அவர்களால் புரிந்துகொள்ளவே முடியவில்லை. அவர்கள், பிடிபட்டுத் தனித்தனி கூண்டுகளில் அடைக்கப்பட்ட, இடம்பெயரும் பறவை இனத்தைச் சேர்ந்த ஓர் ஆண் பறவை மற்றும் பெண் பறவை போல இருந்தனர். கடந்த காலத்திலும் நிகழ்காலத்திலும் தாங்கள் எதற்கெல்லாம் வெட்கப்படுகிறோமோ, அந்தத் தவறுகள் அனைத்தையும் அவர்கள் ஒருவருக்கொருவர் மன்னித்துக்கொண்டனர்; மேலும், தங்கள் இடையிலான இந்தக் காதல் அவர்கள் இருவரையும் உருமாற்றிவிட்டதாக அவர்கள் உணர்ந்தனர்.
முன்பெல்லாம், மனச்சோர்வு ஆட்கொள்ளும் தருணங்களில், தன் மனதில் தோன்றும் ஏதோவொரு முதல் வாதத்தைக் கொண்டே அவன் தன்னைத் தேற்றிக்கொள்வது வழக்கம். ஆனால் இப்போது வாதங்கள் அவனுக்குப் பொருளற்றவையாகிவிட்டன; அவன் ஆழ்ந்த இரக்கத்தை உணர்ந்தான், நேர்மையாகவும் மென்மையாகவும் நடந்துகொள்ள விரும்பினான்.
ஆனால் இப்போதோ, வாதங்கள் என்பவை அவனுக்குப் பொருளற்றவையாகிவிட்டன; அவனது உள்ளத்தில் ஆழ்ந்த இரக்கம் குடிகொண்டது; அவன் மிகுந்த நேர்மையுடனும், மென்மையுடனும் நடந்துகொள்ள விரும்பினான்.
“அழுவதை நிறுத்து, என் அன்பே,” என்று அவன் கூறினான். “நீ அழுது முடித்துவிட்டாய்; இனி அழாதே. இப்போது நாம் இருவரும் நிதானமாகப் பேசலாம்; அடுத்து நாம் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றிச் சிந்திக்க முயற்சிப்போம்.”
அதன் பிறகு, அவர்கள் தங்கள் சூழ்நிலையைப் பற்றி நீண்ட நேரம் விவாதித்தார்கள். மறைந்து வாழ்வது , ஏமாற்றுவது , வெவ்வேறு நகரங்களில் வசிப்பது , நீண்ட காலத்திற்கு ஒருவரை ஒருவர் சந்திக்காமலே இருப்பது ஆகிய கட்டாயங்களிலிருந்து எப்படி விடுபடுவது என்பதைப் பற்றி அவர்கள் தீவிரமாகச் சிந்தித்தார்கள். தாங்கிக்கொள்ளவே முடியாத இந்த விலங்குகளைத் தங்கள் கழுத்திலிருந்து எப்படி அறுத்து எறிவது?
“எப்படி? அது எப்படிச் சாத்தியம்?” என்று தன் தலையைப் பற்றிக்கொண்டே அவன் திரும்பத் திரும்பக் கேட்டான். “எப்படி? “
ஒரு முடிவை எட்டுவதற்குத் தாங்கள் மிக மிக அருகில் இருப்பதாகவும், அந்த முடிவை எட்டிய கணமே ஒரு புதிய, அழகான வாழ்க்கை தங்களுக்குத் தொடங்கவிருப்பதாகவும் அவர்களுக்குத் தோன்றியது. ஆனால், அந்தப் பயணத்தின் முடிவு இன்னும் வெகு தொலைவில் இருப்பதை அவர்கள் இருவரும் உணர்ந்தார்கள்; மேலும், அந்தப் பயணத்தின் மிகக் கடினமான, மிகவும் சிக்கலான பகுதி இப்போதுதான் தொடங்கியிருக்கிறது என்பதையும் அவர்கள் உணர்ந்தார்கள்.
குறிப்பு
ஆண்டன் செகாவ் (1860–1904) தெற்கு ரஷ்யாவின் கடற்கரை நகரமான தாகன்ரோகில், ஒரு மளிகைக் கடைக்காரரின் மகனாகவும், ஒரு பண்ணையடிமையின் பேரனாகவும் பிறந்த ஆண்டன் செக்கோவ் (1860-1904), மாஸ்கோ பல்கலைக்கழகத்தில் மருத்துவம் பயின்றுகொண்டிருந்தபோதே, தன்னைத் தானே ஆதரித்துக்கொள்ளும் பொருட்டு நகைச்சுவைக் கதைகளை எழுதத் தொடங்கினார். 1884-ஆம் ஆண்டில் அவர் தனது மருத்துவப் பட்டத்தைப் பெற்றார்; அதே ஆண்டில், ‘மெல்போமினாவின் கதைகள்’ (Tales of Melpomene) எனும் தனது முதல் சிறுகதைத் தொகுப்பையும் வெளியிட்டார். ‘வண்ணமயமான கதைகள்’ (Motley Tales – 1886), ‘அந்தி வேளையில்’ (At Twilight – 1887), மற்றும் ‘கற்கள்’ (Stones – 1888) ஆகியவை அவரது ஆரம்பகாலத் தொகுப்புகளில் சிலவாகும். ஒரு தலைசிறந்த சிறுகதை எழுத்தாளராகத் திகழ்ந்ததுடன் மட்டுமல்லாமல், ரஷ்யாவின் மிகவும் போற்றப்படும் நாடக ஆசிரியராகவும் செக்கோவ் கருதப்படுகிறார். 1898-ஆம் ஆண்டில், மாஸ்கோ கலை அரங்கம் (Moscow Art Theatre) அவரது நாடகமான ‘கடற்பறவை’ (The Seagull)-ஐ அரங்கேற்றியது; அதைத் தொடர்ந்து 1899-இல் ‘மாமா வான்யா’ (Uncle Vanya), 1901-இல் ‘மூன்று சகோதரிகள்’ (The Three Sisters), மற்றும் 1904-இல் ‘செர்ரித் தோட்டம்’ (The Cherry Orchard) ஆகிய நாடகங்களும் அரங்கேற்றப்பட்டன. மனிதர்களுக்கிடையேயான தகவல் தொடர்பு இயலாமையை வருத்தத்துடனும் நுட்பத்துடனும் சித்தரிப்பதில் பெயர் பெற்றவராகவும், மனிதாபிமானச் செயல்பாடுகளில் ஈடுபட்டவராகவும் திகழ்ந்த செக்கோவ், தனது 44-வது வயதில் காசநோய் காரணமாக காலமானார்; இந்நோய்த்தொற்று அவருக்கு அவரது மாணவர் பருவத்திலேயே ஏற்பட்டிருந்தது.



