உலக பெருங்கடலில் மிதந்துக் கொண்டே இருக்கும் ஒரு சிறிய நகரத்தை உருவாக்கும் முன்னெடுப்பை அமெரிக்க வல்லுநர்கள் முன்னெடுத்துள்ளனர். இது ‘ஃப்ரீடம் ஷிப்’ என்ற பெயரில் மிகப்பெரிய நிரந்தர வசிப்பிட நகரம் போன்ற கப்பலாக இருக்கக்கூடும் எனவும் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
உலகெங்கிலும் நாளுக்கு நாள் மக்கள் தொகையும், போக்குவரத்து நெரிசலும் அதிகரித்து வரக்கூடிய சூழலில் அதனை சுற்றி வாழக்கூடிய மக்கள் தங்கள் வழக்கத்திற்கு மாறாக ஒரு அமைதியான இடத்தில் வாழ விரும்புகின்றனர்.
அதனை நிவர்த்தி செய்யும் விதமாக தான் அமெரிக்க கட்டிடக்கலை வல்லுநர்கள் அதற்கான புதிய முயற்சியை எடுத்து வருகின்றனர்.
அதுதான் கடலில் மிதக்கக் கூடிய சிறிய நகரம். நகரம் போன்ற வடிவமைப்பை கொண்ட இந்த கப்பல் எதிர்கால வளர்ச்சித் திட்டங்களில் ஒன்றாகவும் கருதப்படுகிறது.
இந்த கப்பல் திட்டமானது சுமார் 16 பில்லியன் அமெரிக்க டாலர் செலவில் உருவாக்கப்பட உள்ளதாகவும், இது மனித வாழ்வின் எதிர்காலத்தை முற்றிலும் மாற்றக்கூடிய ஒரு தொலைநோக்கு திட்டமாகவும் கருதப்படுகிறது.
குடியிருப்பு நகரம் போல் வடிவமைக்கப்பட்ட கப்பல்:
இந்த ‘ஃப்ரீடம் ஷிப்’ சாதாரண உல்லாசக் கப்பல் போல் அல்லாமல், ஒரு நிரந்தர குடியிருப்பு நகரமாக செயல்படுவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.
மக்கள் இதில் வாழவும், வேலை செய்யவும், கல்வி கற்கவும், தொழில் நடத்தவும், ஓய்வு வாழ்க்கையை அனுபவிக்கவும் முடியும். உலகம் முழுவதும் தொடர்ந்து பயணித்துக்கொண்டே இருக்கும் இந்த மிதக்கும் நகரம், ஒரு நாட்டின் எல்லைக்குள் மட்டும் சுற்றாமல் சர்வதேச கடல் பரப்புகளில் இயங்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.
இதன் மூலம் குடியிருப்பாளர்கள் உலகின் பல்வேறு பகுதிகளை அனுபவித்துக்கொண்டே ஒரே இடத்தில் வசிக்கும் தனித்துவமான வாழ்க்கை முறையைப் பெற முடியும்.
இந்தக் கப்பல் சுமார் 1.6 கிலோமீட்டர் நீளமும், 230 மீட்டருக்கும் அதிகமான அகலமும் கொண்டதாக இருக்கும் என கூறப்படுகிறது.
இந்த கப்பல் தற்போது உலகில் இயங்கும் மிகப்பெரிய உல்லாசக் கப்பல்களை விட பல மடங்கு பெரியதா இருக்கும். பல டஜன் தளங்களைக் கொண்ட இந்த மாபெரும் கப்பலில் குடியிருப்பு வளாகங்கள், வணிக வளாகங்கள், அலுவலகங்கள், பொழுதுபோக்கு மையங்கள் மற்றும் பொதுச் சேவை வசதிகள் அமைக்கப்பட உள்ளன.
சுருக்கமாக சொன்னால் ஒரு சிறிய நகரம் போன்று செயல்பட்டு, அந்த நகரத்திற்கு என்னென்ன வசதிகள் தேவைப்படுமோ அத்தனை வசதிகளும் இதில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் என்பதே உண்மை. சுமார் 50,000 நிரந்தர குடியிருப்பாளர்கள், 20,000 பணியாளர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் என மொத்தம் 80,000 பேர் வரை ஒரே நேரத்தில் தங்கக்கூடிய திறன் கொண்டதாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: பட்ஜெட் விலையில் லே-லடாக் சுற்றுலா: விமான டிக்கெட் முதல் தங்குமிடம் வரை
சிறிய நகரம்:
ஒரு நவீன நகரத்தில் கிடைக்கும் அனைத்து வசதிகளும் இந்த கப்பலில் இடம்பெற திட்டமிடப்பட்டுள்ளன. குழந்தைகளுக்கான பள்ளிகள், கல்லூரி அளவிலான கல்வி வசதிகள், நூலகங்கள், ஆராய்ச்சி மையங்கள், மருத்துவமனைகள், அவசர சிகிச்சைப் பிரிவுகள், வங்கிகள், அஞ்சல் நிலையங்கள், வணிக வளாகங்கள், உணவகங்கள் மற்றும் அலுவலக வளாகங்கள் இதில் இடம்பெறும்.
மேலும், பூங்காக்கள், நடைபாதைகள், உடற்பயிற்சி மையங்கள், நீச்சல் குளங்கள், திரையரங்குகள், அருங்காட்சியகங்கள் மற்றும் கலாச்சார மையங்களும் அமைக்கப்பட உள்ளன. இதன் மூலம் குடியிருப்பாளர்கள் நிலத்தில் வாழ்வதைப் போன்ற முழுமையான வாழ்க்கை அனுபவத்தைப் பெற முடியும்.
இந்த மிதக்கும் நகரத்தின் முக்கிய சிறப்புகளில் ஒன்றாக 15,000 இருக்கைகள் கொண்ட விளையாட்டு மற்றும் நிகழ்ச்சி அரங்கம் அமையும். இதில் சர்வதேச விளையாட்டுப் போட்டிகள், இசை நிகழ்ச்சிகள், பொதுக்கூட்டங்கள் மற்றும் பல்வேறு கலாச்சார நிகழ்வுகள் நடத்தப்படும் வகையிலும் அமையப்பெற உள்ளது.
போக்குவரத்து வசதி மேம்பாடு:
இந்தத் திட்டத்தின் மிகப்பெரிய சவால்களில் ஒன்று போக்குவரத்து வசதியாகும். அதன் அளவு காரணமாக பெரும்பாலான துறைமுகங்களில் நேரடியாக நங்கூரமிட முடியாது. எதிர்காலத்தில் மக்கள் பயணப்படகுகள், வேகப்படகுகள், ஹெலிகாப்டர்கள் மற்றும் சிறிய விமானங்கள் மூலம் மக்கள் கடல் பகுதியில் இருந்து வேறு நாடுகளுக்கும் சென்று வரும்படியும் திட்டமிடப்பட்டுள்ளது.
மேம்பாட்டு வசதிகள்:
சுற்றுச்சூழல் நிலைத்தன்மைக்கும் திட்டத்தில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. மழைநீர் சேகரிப்பு, கடல்நீரை குடிநீராக மாற்றும் உப்பு நீக்க மையங்கள், கழிவுநீர் மறுசுழற்சி அமைப்புகள், மேம்பட்ட குப்பை மேலாண்மை தொழில்நுட்பங்கள் மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தி வசதிகள் இதில் இடம்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சூரிய ஆற்றல் மற்றும் காற்றாலை தொழில்நுட்பங்களுடன் இணைந்து அணுசக்தி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்வது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
சட்டவிதிமுறைகள்:
இந்தத் திட்டம் பல்வேறு சட்ட மற்றும் நிர்வாக கேள்விகளையும் எழுப்புகிறது. சர்வதேச கடல் பகுதியில் இயங்கும் ஒரு நகரம் எந்த நாட்டின் சட்டங்களுக்கு உட்பட்டிருக்கும்? வரிவிதிப்பு எவ்வாறு அமல்படுத்தப்படும்? குற்றச்செயல்கள், குடியுரிமை, பாதுகாப்பு மற்றும் அவசரகால மீட்பு நடவடிக்கைகள் யாரால் நிர்வகிக்கப்படும்? போன்ற கேள்விகளுக்கு இன்னும் தெளிவான பதில்கள் இல்லாமலும் உள்ளன.
இயற்கை சுற்றுச்சூழல் பாதிப்புகள்:
கடலில் ஏற்படும் சுற்றுச்சூழல் மாற்றம், பாதுகாப்பு அபாயங்கள் மற்றும் இயற்கை பேரிடர்களை சமாளிக்கும் திறன் போன்ற அம்சங்களும் தீவிரமாக ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. கடலின் பல்வேறு காலநிலை மாற்றங்கள் இந்த திட்டத்தை எவ்வாறு வெற்றியடையச் செய்யும் என்பதில் கேள்விக் குறியாகவே உள்ளது. குறிப்பாக கட்டமைப்பு வலிமை, பராமரிப்பு செலவுகள், ஆயுட்காலம் போன்றவைகள் இதற்கும் முக்கிய பெரும் சவாலாக பார்க்கப்படுகிறது.
நாளுக்கு நாள் பெருகி வரும் மக்கள் தொகை காரணமாக நகர நெரிசல், நிலப்பரப்பு பற்றாக்குறை மற்றும் காலநிலை மாற்றம் போன்ற எதிர்கால சவால்களுக்கு மாற்றுத் தீர்வாக கடலில் மிதக்கும் குடியிருப்புகள் உருவாவது அடுத்த கட்ட பரிணாம வளர்ச்சியை பிரதிபலிக்கும் ஒரு துணிச்சலான கனவுத் திட்டமாக பார்க்கப்படுகிறது




