குறைந்தபட்சமாக ரூ.22 லட்சம் அதிகரிப்பு எச்1பி விசா சம்பளம் 3 மடங்கு உயருகிறது: அமெரிக்கா

எச்1 பி விசா திட்டத்தின் கீழ் ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் 3 மடங்கு உயர்த்த அமெரிக்கா அதிரடி முடிவு செய்துள்ளது. அமெரிக்காவில் எச்1பி விசா ஊழியர்களுக்கு பல்வேறு சலுகைகள் அளிக்கப்பட்டு வருகிறது. அதிபர் டிரம்ப் வந்த பிறகு எச்1பி விசாவுக்கு அதிக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. குறிப்பாக கடந்த ஆண்டில், செப்டம்பர் 19 அன்று வெளியிடப்பட்ட உத்தரவு மூலம் அமெரிக்காவிற்கு வெளியே உள்ள எச்1பி விசா விண்ணப்பதாரர்களுக்கு ரூ.85 லட்சம் கட்டணம்(தற்போது ரூ.95 லட்சம்) நிர்ணயிக்கப்பட்டது.
மேலும் விசா கட்டண உயர்வுக்கு ஏற்றார்போல் எச்1பி விசா ஊழியர்களுக்கு சம்பள விகிதத்தையும் உயர்த்த அதிபர் டிரம்ப் அதிரடி உத்தரவுகளை பிறப்பித்தார். தற்போது எச்1பி விசா ஊழியர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட வரம்புகளை விட 30 சதவீதம் சம்பளத்தை உயர்த்த அமெரிக்க தொழிலாளர் துறை முன்வந்துள்ளது. இந்த புதிய விதி மூலம் நுழைவு நிலை முதல் அதிக அனுபவம் வாய்ந்த நிலை வரையிலான நான்கு பிரிவுகளுக்கான குறைந்தபட்ச ஊதியத்தை உயர்த்த முயல்கிறது. தற்போதுள்ள ஊதிய நிலைகள் 20 ஆண்டுகளுக்கு முன்பு நிர்ணயிக்கப்பட்டவை என்றும், அவை அமெரிக்கத் தொழிலாளர்களைப் போதுமான அளவு பாதுகாக்கத் தவறிவிட்டன என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த ஊதிய உயர்வு அமெரிக்காவில் உள்ள நகரங்களுக்கு ஏற்றார்போல் மாறுபடும் என்று கூறப்பட்டுள்ளது. மே 26 வரை பொதுமக்களின் கருத்துககளை தெரிவிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. உயர்த்தப்பட்ட ஊதிய விகிதங்களைக் கருத்தில் கொண்டு, சிறிய நிறுவனங்களால் நுழைவு நிலை வேலைகளுக்குப் புதியவர்களை இனி பணியமர்த்த முடியாமல் போகலாம் என்று கருத்து எழுந்துள்ளது.