விபத்தா அல்லது கொலையா நடிகர் சரண்ராஜ் இறப்புக்கு காரணம் ? நீதிமன்ற உத்தரவு விவரம்

 

தமிழ் சினிமாவில் அசுரன், வட சென்னை, விடுதலை, தமிழ் செல்வம் உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகர் சரண்ராஜ் கடந்த 2023-ஆம் ஆண்டு உயிரிழந்தார். சாலை விபத்தில் அவர் உயிரிழந்ததாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு, அதுகுறித்த வழக்கு சென்னை ஜார்ஜ்டவுண் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

‘தனது மகனின் இறப்பு விபத்து அல்ல திட்டமிட்ட கொலை’ என்று குற்றம்சாட்டும் சரண்ராஜின் தாய் மாரியம்மாள் மூன்றாண்டுகளாக நீதிமன்றத்தில் போராடி வருகிறார்.

‘இந்த வழக்கை தவறான பாதையில் கொண்டு சென்ற விசாரணை அதிகாரி மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று நீதிமன்றம் கடந்த ஆகஸ்ட் 27-ஆம் தேதி உத்தரவிட்டுள்ளது. வழக்கை நேர்மையான அதிகாரி மூலம் விசாரித்து அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

‘தனி ஒரு ஆளாக போராடி வரும் மாரியம்மாளுக்கு நீதி கிடைக்க வேண்டும்’ என்று அவர் தரப்பு வழக்கறிஞர் கவிதா கூறுகிறார்.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் வாதாடும் வழக்கறிஞரிடம் பேசுகையில், வழக்கு இன்னும் முடிவுக்கு வரவில்லை என்றும், வழக்கு நிலுவையில் இருப்பதால் இந்த சமயத்தில் அதுகுறித்து மேலும் விவரங்களை பேச இயலாது என்றும் கூறினார்.

சரண்ராஜுக்கு என்ன நடந்தது?

கடந்த 2023-ஆம் ஆண்டு ஜூன் ஏழாம் தேதி இரவு 11 மணியளவில் சென்னை விருகம்பாக்கம் ஆற்காடு சாலையில் பொறியாளரும் சினிமா நடிகருமான சரண்ராஜ் ஓட்டிச்சென்ற இருசக்கர வாகனத்தின் மீது பின்னால் வந்த கார் மோதியது.

‘இதனால் தலையில் காயமடைந்த சரண்ராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்’ என்று காவல்துறை பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனை மறுக்கும் சரண்ராஜின் தாயார் மாரியம்மாள், “தனது மகனின் மரணம் வெறும் விபத்து அல்ல, அவருடன் பழகியவர்களே திட்டமிட்டு நடத்திய படுகொலை” என்று கூறி ஜார்ஜ்டவுண் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

சென்னை ஜார்ஜ்டவுனில் உள்ள மாநகர உரிமையியல் நீதிமன்றத்தில் கடந்த மூன்றாண்டுகளாக நடைபெற்ற இந்த வழக்கில் கடந்த ஆகஸ்ட் 27-ஆம் தேதி கூடுதல் மாவட்ட நீதிபதி (பொறுப்பு) சஞ்சய் பாபா உத்தரவு பிறப்பித்தார். இந்த வழக்கில் முக்கிய ஆதாரமாக கருதப்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த நீதிபதி, ” சிசிவிசி காட்சியில் இருப்பதும், முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிட்டிருப்பது வெவ்வேறாக உள்ளது. விபத்து நடந்ததாக கூறப்பட்டதற்கு மாறாக இருக்கிறது” என்றார்.

மேலும் அவர் கூறுகையில், “விபத்து நடந்த இடத்தில் பதிவான சிசிடிவி காட்சியில் ஒளி பிரதிபலிக்கும் ஸ்டிக்கர் கொண்ட சீருடை அணிந்த நபர்கள் சம்பவத்திற்கு முன்பே அந்த இடத்தில் நின்று போக்குவரத்தை ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்தது தெரிகிறது. அங்கு ஒரு தடுப்பும் (barricade) இருந்துள்ளது ஆனால், அந்த நபர்களை காவல்துறை சம்பவத்தின் நேரடி சாட்சிகளாக விசாரிக்கவில்லை” என்று தெரிவித்தார்.

அதேநேரத்தில் ‘இருசக்கர வாகனத்தின் மீது மோதிய கார் சற்று பின்னோக்கி நகர்ந்து மீண்டும் மோதியது’ என்ற மனுதாரர் தரப்பு வாதத்தை முழுமையாக ஏற்காத நீதிபதி, “இரண்டாவது இயக்கத்தைப் பார்த்து உறுதியான முடிவுக்கு வர முடியாது என்றும், சிசிடிவி காட்சிகளை தடயவியல் ஆய்வுக்கு அனுப்பினால் சம்பவத்தின் தன்மை குறித்து மேலும் தெளிவு கிடைக்கும்” என்றும் கூறினார்

அதனை தொடர்ந்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், “விசாரணையைத் திட்டமிட்டு தவறான பாதையில் கொண்டு சென்று முக்கிய ஆதாரங்களை மறைத்து, குற்றம்சாட்டப்பட்டவர்களைப் பாதுகாக்கும் நோக்கில் தவறான அறிக்கையை விசாரணை அதிகாரிக்கு எதிராக உரிய சட்ட மற்றும் துறைரீதியான நடவடிக்கையைத் தொடங்க வேண்டும் என்று டிஜிபிக்கு உத்தரவிட்டுள்ளார்”

“அவரிடமிருந்த அனைத்து விசாரணை அதிகாரங்களும், இந்த உத்தரவு கிடைக்கப் பெறும் நாளிலிருந்து குறைந்தது மூன்று ஆண்டுகளுக்கு பறிக்கப்பட வேண்டும் என்றும் அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.”

“நேர்மையான மற்றும் நம்பகத்தன்மை கொண்ட, உரிய பதவிநிலையில் உள்ள காவல் அதிகாரி ஒருவரை நியமித்து மேல் விசாரணையை மேற்கொண்டு, 60 நாட்களுக்குள் துணை இறுதி அறிக்கையைத் தாக்கல் வேண்டும்” என்று டிஜிபிக்கு பிறப்பித்த அந்த உத்தரவில் தெரிவித்துள்ளார்.

உயிரிழந்த சரண்ராஜின் தாயார் மாரியம்மாள் விழுப்புரத்தில் வசிக்கிறார். நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்காக மட்டுமே அவர் சென்னை வந்து செல்கிறார். மகனை இழந்த துயரம் அடங்குவதற்குள் அடுத்த 6 மாதங்களில் தனது கணவரையும் இழந்துவிட்டதாக கூறும் மாரியம்மாள், தன் மகன் இறப்பில் நீதி வேண்டும் என்றே போராடுவதாக கூறுகிறார்.

பிபிசி தமிழிடம் பேசிய மாரியம்மாள், “குடும்பத்தில் பெரிய அளவில் கஷ்டம் இல்லை. ஆனால் தந்தையின் தொழிலை எடுத்து நடத்தாமல் சொந்தக்காலில் நிற்க வேண்டும் என்ற கனவோடு வாழ்க்கையில் ஓடிக் கொண்டிருந்த சரண்ராஜ் தற்போது நிரந்தரமாக ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறான்” என்றார்

” சினிமாவில் நடிக்க வேண்டும் என்பதே சரண்ராஜின் கனவு, ஆனால் அதே சினிமா அவனுக்கு வில்லங்கமாக அமையும் என்றோ, அவனுடன் பழகியவர்களே அவனுக்கு ஆபத்தாய் மாறுவார்கள் என்றோ நினைத்துக் கூட பார்க்கவில்லை” என்று அவர் கூறினார்.

நண்பர்களாக இருந்தவர்களே பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனையால் சரண் ராஜை கொன்றுவிட்டதாக மாரியம்மாள் தரப்பு வழக்கறிஞர் கவிதா குற்றம்சாட்டுகிறார்.

பிபிசி தமிழிடம் பேசிய அவர், “சரண்ராஜின் நண்பர்கள் 3 பேர் தங்களது காரால் திட்டமிட்டு சரண்ராஜ் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது இடித்துள்ளனர். அதனை சிசிடிவி ஆதாரத்தோடு நீதிமன்றத்தில் தெரிவித்தோம்” என்றார் கவிதா.

இந்த வழக்கை விபத்தாக மாற்ற பல்வேறு வகையிலும் எதிர் தரப்பினர் முயற்சி செய்ததாக கவிதா கூறினார். இதுகுறித்து பேசிய அவர், “வழக்கு நடந்துகொண்டிருந்த போதே விபத்தால் ஏற்படும் மரணத்திற்கு வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகையை வழங்குவதாக தெரிவிக்கப்பட்டது ஆனால் வழக்கு நிலுவையில் இருப்பதால் அதனை பெற்றுக்கொள்ள சரண்ராஜின் தாயார் விரும்பவில்லை. மாரியம்மாள் தனி ஆளாக போராடி இந்த சிசிடிவி காட்சிகளை பெற்று, நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார்.” என்றார் அவர்.

சிசிடிவி காட்சியில் என்ன உள்ளது?

“விருகம்பாக்கம் மெட்ரோ வேலை நடக்கும் சாலையில் யு டர்ன் செய்யும் இடத்தில் திரும்புவதற்காக சரண்ராஜ் கையால் சிக்னல் காண்பித்துள்ளார். ஆனால் பொறுமையாக வர வேண்டிய இடத்தில் முன்னால் இருந்த காரை முந்திக்கொண்டு சரண்ராஜின் இருசக்கர வாகனத்தின் மீது எதிர்தரப்பினர் தங்களது காரால் மோதியுள்ளனர்” என்று சிசிடிவி காட்சிகள் குறித்து விவரித்தார் கவிதா.

மாரியம்மாள் தரப்பு வழக்கறிஞர் கவிதாவின் குற்றச்சாட்டுகள் தொடர்பாக விளக்கம் கேட்டு எதிர்மனுதாரரின் வழக்கறிஞர் கணேசனிடம் பிபிசி தமிழ் தொடர்பு கொண்டது. “இந்த வழக்கு இன்னும் முடிவுக்கு வரவில்லை. விசாரணை முழுமையாக நிறைவடையாத நிலையில் இதுகுறித்து மேலும் விவரங்களை தெரிவிக்க விரும்பவில்லை” என்று அவர் கூறினார்.