ஆணுறுப்பை காட்டிய டெலிவரி பாய்… அதிர்ச்சியில் உறைந்த பெண் –

தனியாக வீட்டில் இருந்த பெண்ணிடம், பாத்ரூம் போக வேண்டும் என சொல்லி, அத்துமீறி வீட்டுக்குள் நுழைந்து, அந்த பெண்ணின் முன் நிர்வாணமாக நின்றிருக்கிறார் ஒரு டெலிவரி பணியாளர். தற்போது பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரில் அந்த நபர் கைது செய்யப்பட்டார்.

பெங்களூருவில் தனியாக வீட்டில் இருந்த பெண்ணுக்கு அதிர்ச்சிக்கர சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அவரது வீட்டிலேயே நடந்த இந்த சம்பவம் அவருக்கு பெரும் மன அதிர்ச்சியையும், பதற்றத்தையும் அளித்திருக்கிறது.

டெலிவரிக்கு வந்த நபர் அந்த பெண்ணின் முன் அந்தரங்க உறுப்பை காட்டி பேரதிர்ச்சியை கொடுத்துள்ளார். அந்த பெண்ணின் அனுமதியின்றி வீட்டுக்குள் நுழைந்தும் அத்துமீறியிருக்கிறார். அந்த பெண் அளித்த புகாரில் தற்போது அந்த நபர் கைதாகி உள்ளார். இந்த சம்பவத்தின் முழு பின்னணியை இங்கு காணலாம்.

மறுப்பு சொன்ன பெண்

பெங்களூருவில் நடந்த இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண் இணையத்தில் பதிவிட்டு, இதை வெளிச்சத்திற்கு கொண்டுவந்துள்ளார். அந்த பெண்ணின் கூற்றுப்படி, பிரபல நிறுவனத்தில் இருந்து பார்சல் டெலிவரி செய்ய வந்த அந்த டெலிவரி பணியாளர்.

அந்த பெண்ணிடம் பார்சலை கொடுத்த பின், அவரது வீட்டின் கழிவறையை பயன்படுத்திக்கொள்ளலாமா என கேட்டுள்ளார். அதற்கு அந்த பெண் மறுப்பு தெரிவித்துள்ளார். தொடர்ச்சியாக கேட்டுக்கொண்டே இருக்க, அந்த பெண் மறுப்பு தெரிவித்தது மட்டுமின்றி, அவசரம் என்றால் பக்கத்து வீட்டில் கேட்டு பார்க்கும்படி கூறியிருக்கிறார்.

நிர்வாணமாக நின்ற பணியாளர்

ஆனால், இதையெல்லாம் கேட்காத அந்த இளைஞர் அத்துமீறி அந்த பெண்ணின் வீட்டுக்குள் நுழைந்துள்ளார். வீட்டின் கழிவறையையும் பயன்படுத்தியிருக்கிறார். கழிவறையில் இருந்து வெளியே வந்த அந்த நபர், அந்த பெண்ணின் முன்னர் தனது அந்தரங்க உறுப்பை வெளிப்படுத்தி உள்ளார்.

இது அந்த பெண்ணுக்கு பெரும் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. வசிக்கும் வீட்டிலேயே பாதுகாப்பின்றி உணர்ந்திருக்கிறார். உடனே அந்த சம்பவங்களை வீடியோவாக எடுத்து, சமூக வலைதளங்களில் பதிவிட்டிருக்கிறார்.

கைது செய்த போலீசார்

அந்த பெண்ணின் சமூக வலைதளப்பதிவை தொடர்ந்து, பெங்களூரு மார்த்தஹள்ளி காவலர்கள் அந்த பெண்ணிடம் இருந்து புகாரை பெற்றுள்ளார். பாதிக்கப்பட்ட பெண் அளித்த பாலியல் புகாரின் அடிப்படையில் குற்றஞ்சாட்டப்பட்ட டெலிவரி பணியாளர் கைது செய்யப்பட்டார்.

பெண்ணின் புகாரை தொடர்ந்து, பாரதிய நியாய சன்ஹிதா (BNS) 75, 78, 329(2) ஆகிய பிரிவுகளின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்ட டெலிவரி பணியாளர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கைதான நபரின் பெயர் விஜய் மல்லிகார்ஜூன் காமத் என தெரியவந்துள்ளது. அவர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.

அன்று நடந்தது என்ன?

முன்னர் இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண்மணி அவரது இன்ஸ்டாகிராம் பதிவில், “அவர் பார்சலை டெலிவரி செய்துவிட்டு, கழிவறையை பயன்படுத்தலாமா என கேட்டார். நான் பலமுறை மிக நிதானமாகவே மறுப்பு தெரிவித்தேன்.

யார் என்று தெரியாதவர்களை வீட்டுக்குள் அனுமதிக்க மாட்டேன் என தெரிவித்தேன். உங்களுக்கு மிகவும் அவசரம் என்றால் பக்கத்து வீட்டில் ஆண்கள் இருக்கிறார்கள், அவர்களிடம் கேட்டுப் பாருங்கள் என்று கூட சொன்னேன். ஆனால் அவ்வளவு தூரம் நான் மறுத்தும் அந்த நபர் அவரின் காலணியை கழட்டிவிட்டு, எனது அனுமதியின்றி அத்துமீறி வீட்டுக்குள் நுழைந்தார்.

எனது பாதுகாப்பு குறித்த அச்சம் எனக்கு ஏற்பட்டது. எனவே, மொபைல் கேமராவில் வீடியோ எடுக்க தொடங்கினேன். மேலும் முன் வாசலிலேயே நின்றுகொண்டிருந்தேன். அசம்பாவிதம் ஏதும் ஏற்பட்டால் உடனே வெளியே ஓடி உதவிக்கேட்கலாம் என்பதற்காக அங்கே நின்றேன்.
அந்தரங்க உறுப்பை காட்டிய நபர்

ஏனென்றால், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குற்றங்கள் தினமும் நடப்பதை பார்க்கிறோம். நான் தனியாக வசிக்கிறேன். எனவே எனது பாதுகாப்புதான் முக்கியமாக இருந்தது, எதுவும் நடக்காது என நம்பினேன்.

உடனே கழிவறையில் இருந்து வெளியே வந்த அந்த நபர், அவரது அந்தரங்க உறுப்புகளை எனக்கு காட்டினான். நான் அதிர்ச்சி அடைந்து. என தனியுரிமை மீறப்பட்டது போல் உணர்ந்தேன், அவமானப்படுத்தப்பட்டேன். என் சொந்த வீட்டிலேயே முற்றிலும் பாதுகாப்பற்றதாக உணர்ந்தேன்.
‘சொந்த வீட்டில் பாதுகாப்பு இல்லை…’

என் சொந்த வீட்டிலேயே முற்றிலும் பாதுகாப்பற்றதாக உணர்ந்தேன். ஒரு பெண் ‘வேண்டாம்’ என்று சொன்னாள், அதோடு அந்த உரையாடல் முடிந்திருக்க வேண்டும். அவளுடைய பேச்சை புறக்கணிக்கவோ அல்லது அவளுடைய வீட்டில் அத்துமீறி நுழையவோ யாருக்குமே உரிமை இல்லை” என அதில் குறிப்பிட்டிருந்தார்.

மேலும், தனக்கு நீதி கிடைக்கவும், விழிப்புணர்வை ஏற்படுத்தவும், இதன்மூலம் வேறு எந்தப் பெண்ணும் இதுபோன்ற ஒரு நிலையை எதிர்கொள்ளாமல் இருக்கவும் வேண்டும் என்பதற்காகவே இதை பதிவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

பெங்களுரு காவல்துறையினரும், பெங்களூரு மக்களும் தயவுசெய்து எனக்கு ஆதரவளித்து, இந்த தகவல் சரியான நபர்களை சென்றடைய உதவுங்கள் என்றும் ஒவ்வொரு பெண்ணும் தனது சொந்த வீட்டில் பாதுகாப்பாக உணர உரிமையுடையள் என்றும் குறிப்பிட்டிருந்தார்.