436 புதிய திட்டங்களை மக்களுக்காக முவைத்த முதல்வர் விஜய் ; அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார் பேட்டி!

 

சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையில் இன்று (ஜூன் 5) நடைபெற்ற தவெக-கூட்டணி அரசின் முதல் அமைச்சரவைக் கூட்டம் வெற்றிகரமாக நிறைவடைந்தது. சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இக்கூட்டத்தில், தமிழகத்தின் புதிய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ், விசிக, இயூமுல உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் 35 அமைச்சர்கள் பங்கேற்றனர். இக்கூட்டம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, தவெக அரசின் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் செய்தியாளர்களைச் சந்தித்து அமைச்சரவையில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகளைப் பகிர்ந்துகொண்டார்.

செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார், தவெக அரசின் முதன்மை நோக்கமே லஞ்சம் மற்றும் போதைப்பொருள் புழக்கம் இல்லாத தூய்மையான ஆட்சியைத் தமிழக மக்களுக்கு வழங்குவதுதான் என்று முதலமைச்சர் விஜய் அமைச்சரவையில் திட்டவட்டமாக அறிவுறுத்தியதாகத் தெரிவித்தார். “கடந்த 5 ஆண்டுகால ஆட்சியில் தமிழகம் முழுவதும் கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதைப்பொருட்கள் பெருமளவில் பரவியுள்ளன; அதன் விற்பனையை முற்றிலும் ஒழிக்க தவெக அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் முதற்கட்டமாக, தமிழ்நாட்டில் இதுவரை மொத்தம் 717 டாஸ்மாக் (TASMAC) மதுபானக் கடைகள் அதிரடியாக மூடப்பட்டுள்ளன” என்று அவர் குறிப்பிட்டார்.

மேலும், தவெக அரசு தனது தேர்தல் வாக்குறுதிகளில் குறிப்பிட்டிருந்த மக்கள் நலத்திட்டங்களை விரைந்து செயல்படுத்தும் வகையில், அனைத்துத் துறைகளுக்கும் தொலைநோக்கு இலக்குகளை முதலமைச்சர் விஜய் வகுத்துக் கொடுத்துள்ளார். அதன்படி இளைஞர்கள் மேம்பாடு, மகளிர் நலன், விவசாயிகள் மற்றும் மீனவர்கள் வாழ்வாதார வளர்ச்சி ஆகியவற்றை உள்ளடக்கி ஒட்டுமொத்தமாக 436 புதிய திட்டங்களை முதல்வர் விஜய் வழங்கியுள்ளார். இத்திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் குறித்தும் இக்கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட்டதுடன், துறை சார்ந்த அமைச்சர்கள் தங்களின் ஐஏஎஸ் அதிகாரிகளுடன் இணைந்து இதனை மிகத் துரிதமாகச் செயல்படுத்தத் திட்டமிடுவார்கள் என்றும் அமைச்சர் கூறினார்.

கர்நாடகா அரசு மேகதாது அணை கட்டும் விவகாரத்தில் தமிழக அரசு சட்டப்பூர்வமான கடுமையான நடவடிக்கைகளை எடுக்கும் என்று உறுதியளித்த அமைச்சர் நிர்மல் குமார், மகளிர் உரிமைத் தொகையான ரூ.2,500 எப்போது வழங்கப்படும் என்ற கேள்விக்கு, தேவைப்படும் போது முதலமைச்சர் விஜய்யே நேரடியாகச் செய்தியாளர்களைச் சந்தித்து விளக்குவார் என்று தெரிவித்தார். இதற்கிடையே, தவெக அரசின் முதல் கூட்டத்தொடர் வரும் ஜூன் 18-ஆம் தேதி ஆளுநர் உரையுடன் முறைப்படி கூடும் என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.