குடிநீர் வாரிய வளாகத்தில் பயங்கர தீ விபத்து; கருகி சாம்பலான பறிமுதல் செய்யப்பட்ட நூற்றுக்கணக்கான வாகனங்கள்!

 

சென்னை மடிப்பாக்கத்தில் உள்ள சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய (CMWSSB) வளாகத்தில் இன்று (ஜூன் 3) திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. குடிநீர் வாரிய அலுவலகத்தின் பின்புற வளாகத்தில் இருந்து திடீரென கிளம்பிய கரும்புகை மற்றும் பெரும் தீப்பிழம்புகள் அந்தப் பகுதி முழுவதும் காட்டுத்தீயாகப் பரவியதால் அங்குப் பெரும் பரபரப்பு நிலவியது. இந்த அதிர்ச்சி சம்பவத்தை அடுத்து, பொதுமக்களும் அலுவலக ஊழியர்களும் உடனடியாக தீயணைப்புத் துறைக்குத் தகவல் தெரிவித்து அவசர அவசரமாக வெளியேறினர்.

முதற்கட்ட விசாரணையில், குடிநீர் வாரிய வளாகத்தின் ஒரு பகுதியில் காவல்துறையினரால் பல்வேறு குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்டு, நீண்ட நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள் (Seized Two-Wheelers) இருக்கும் இடத்திலேயே இந்தத் தீ விபத்து தொடங்கியதாகத் தெரியவந்துள்ளது. வெயிலின் தாக்கம் மற்றும் காய்ந்த புற்கள் நிறைந்திருந்த பகுதியில் ஏற்பட்ட மின் கசிவு அல்லது ஏதேனும் ஒரு தீப்பொறி காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இதில் அங்கு நிறுத்தப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான பைக்குகள் முற்றிலும் எரிந்து கருகி எலும்புக்கூடுகளாக மாறின.

தீ விபத்தின் தீவிரம் காரணமாக, மடிப்பாக்கம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள உள்ளூர் குடியிருப்புப் பகுதிகள் முழுவதும் ராட்சத கரும்புகை மூட்டத்தால் சூழப்பட்டது. இதனால் அப்பகுதி மக்களுக்குக் கடுமையான கண் எரிச்சல் மற்றும் மூச்சுத் திணறல் ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வேளச்சேரி, கிண்டி மற்றும் மேடவாக்கம் ஆகிய பகுதிகளில் இருந்து விரைந்து வந்த 3-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் மற்றும் மீட்புப் படை வீரர்கள் சுமார் இரண்டு மணி நேரம் தீவிரமாகப் போராடி தீ மேலும் பரவாமல் தடுத்து முழுமையாக அணைத்தனர்.