;
நாமல் ராஜபக்சவிற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள எயார் பஸ் ஊழல் வழக்கில் சாட்சியமளிப்பதற்காக பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பிரான்ஸ் தடயவியல் புலனாய்வாளரான யூசர் கலீல் இலங்கைக்கு வரவுள்ளதாக செய்திகால் வெளியாகியுள்ளது.
‘பொரன்சிக் ரிஸ்க் அலையன்ஸ்’ (Forensic Risk Alliance – FRA) நிறுவனத்தின் பங்காளரும் அதன் பாரிஸ் அலுவலகத்தின் தலைவருமான யூசர் கலீல் (Yousr Khalil) என்பவரே இந்தச் சர்ச்சைக்குரிய வழக்கில் முறைப்பாட்டாளர் தரப்பினால் பெயரிடப்பட்டுள்ள பிரதான சாட்சிகளில் ஒருவராக உள்ளடக்கப்பட்டுள்ளார்.
இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில் பல நாடுகளில் இடம்பெற்ற விமானக் கொடுக்கல் வாங்கல்கள் குறித்து நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக எயார் பஸ் நிறுவனம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விரிவான விசாரணையில் கலீல் முக்கிய பங்காற்றியுள்ளார்.
சர்வதேச ஊடகச் செய்திகளின்படி, குற்றப்பத்திரிகையில் பெயரிடப்பட்டுள்ள மற்றுமொரு முக்கிய சாட்சியான எயார் பஸ் நிறுவனத்தின் உப தலைவர் கார்ல் ஹெனெஸியுடன் (Karl Hennessee) இணைந்து அவர் இவ்வாறு சாட்சியமளிப்பதற்காக முன்னிலையாகவுள்ளார்.
பிரான்ஸ், ஐக்கிய இராச்சியம் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளின் சட்ட அமுலாக்கல் நிறுவனங்களுடன் இணைந்து முன்னெடுக்கப்பட்ட குறித்த எயார் பஸ் விசாரணையின் ஊடாக, விமான விற்பனையுடன் தொடர்புடைய சட்டவிரோத நிதி கொடுப்பனவுகள் மேற்கொள்ளப்பட்ட உலகளாவிய வலையமைப்பொன்று அம்பலமானதாக முறைப்பாட்டாளர் தரப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
குறித்த விசாரணையின் இலங்கையுடன் தொடர்புடைய பகுதியானது, சுமார் 2.3 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான 10 எயார் பஸ் விமானங்களைக் கொள்வனவு செய்வதற்கான முன்மொழியப்பட்ட கொடுக்கல் வாங்கல் மீதே கவனம் செலுத்தியிருந்தது.
அக்காலப்பகுதியில் ஸ்ரீலங்கன் விமான சேவையின் பிரதம நிறைவேற்று அதிகாரியாகக் கடமையாற்றிய கபில சந்திரசேன, இக்கொடுக்கல் வாங்கலுடன் தொடர்புடைய 16 மில்லியன் அமெரிக்க டொலர் இலஞ்சப் பணம் குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தியதாக விசாரணை அதிகாரிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
குற்றப்பத்திரிகையின்படி, விமானக் கொடுக்கல் வாங்கலுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் ஊழலில் ஈட்டப்பட்ட பணத்தைப் பெற்றுக்கொண்டதாக நாமல் ராஜபக்ஷ மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.



