நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அருகே பழிக்கு பழியாக தந்தை மற்றும் அவரது 5 வயது மகன் காரில் வந்த கும்பலால் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது
நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மூலச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் காளிமுத்து (40). இவர் இன்று தனது இரு மகன்களான சின்னதுரை (15) மற்றும் ஜெயராஜ் (5) ஆகியோருடன் இருசக்கர வாகனத்தில் வீரவநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வல்லத்தி நம்பிகுளம் பகுதியில் இருந்து மூலச்சி கிராமத்திற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, இவர்களைப் பின்தொடர்ந்து காரில் வந்த மர்ம கும்பல், திடீரென இவர்களது இருசக்கர வாகனத்தில் மோதி அவர்களை நிலைகுலையச்செய்துனர்.
இந்த விபத்தில் 5 வயது சிறுவன் ஜெயராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தப்பி ஓட முயற்சித்த காளிமுத்துவை சரமாரியாக அரிவாளால் வெட்டி கொலை செய்து அவரது தலையை துண்டித்து சுமார் 5 கிலோமீட்டர் தூரம் கொண்டு வந்து கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள கரம்பை மாநில நெடுஞ்சாலையின் நடுவே வைத்துவிட்டு தப்பியோடிவிட்டனர். இந்தத் தாக்குதலின் போது, தந்தையுடன் சென்ற 5 வயது சிறுவன் ஜெயராஜும் உயிரிழந்தார். மற்றொரு மகனான 15 வயது சின்னதுரைக்குத் தாக்குதலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருநெல்வேலி சரக டிஐஜி திருநாவுக்கரசு நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஸ்வேஷ் பாலசுப்பிரமணிய சாஸ்திரி, ஆகியோர் நேரில் விசாரணை நடத்தினர் தொடர்ந்து இருவரின் உடல்களையும் மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பிவைத்தனர்.காயம் அடைந்த சின்னத்துரை மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், இப்பகுதியில் சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த இரட்டை கொலைச் சம்பவத்திற்குப் பழிக்கு பழியாகவே இந்தக் கொலை நடந்துள்ளது தெரியவந்துள்ளது.
மேலும், இந்தக் கொலையைச் செய்தவர்கள் உயிரிழந்த காளிமுத்துவின் அதே ஊரைச் சேர்ந்தவர்கள் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த இரட்டைக் கொலைச் சம்பவத்தால் மூலச்சி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பெரும் பதற்றம் நிலவுகிறது. அசம்பாவிதங்களைத் தவிர்க்க அந்தப் பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தப்பியோடிய எதிரிகள் குறித்த விவரங்களைச் சேகரித்துள்ள போலீசார், 6 தனிப்படைகள் அமைத்து அவர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
மோப்பநாய் வரவழைக்கப்பட்டு சம்பவ இடத்தில் ஆய்வு நடத்தியதோடு கொலையாளிகளை பிடிப்பதற்கான நடவடிக்கையிலும் ஈடுபட்டது மகன் மற்றும் தந்தையைத் துடிக்கத் துடிக்கக் கொலை செய்த இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் ஒரே சமூகத்தைச் சேர்ந்த இரு தரப்பினர் கடந்த 2007 ஆம் ஆண்டு முதல் மோதிக்கொண்டது கொலை சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.
முதலில் சுப்பிரமணியன் என்பவர் கொலை செய்யப்பட்ட நிலையில் அதனை தொடர்ந்து அதற்கு பழிக்கு பழியாக பெருமாள் மற்றும் பாபநாசம் ஆகிய இருவர் காரை வைத்து மோதி கொலை செய்யப்பட்டுள்ளனர் இச்சம்பவம் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் நடைபெற்றதாக தெரிகிறது இச்சம்பவத்திற்கு பழிக்கு பழியாகவே நடந்த சம்பவம் போல காரை வைத்து மோதி காளிமுத்து மற்றும் அவரது 5 வயது மகன் மகன் ஜெயராஜ் ஆகிய இருவரையும் கொலை செய்துள்ளனர் கடந்த கொலை சம்பவங்களில் காளிமுத்துவிற்கு நேரடி தொடர்பு எதுவும் இல்லை என்ற நிலையிலும் கூட இச்சம்பவம் அரங்கேறியுள்ளது.
கொலை சம்பவத்தில் சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்பு உயிர் இழந்த பெருமாள் என்பவரின் மகன் பட்டு நண்பர்களான மகேஷ், கிட்டு , மகாலிங்கம் மகேந்திரன் உள்ளிட்ட இளைஞர்கள் ஈடுபட்டதாகவும் அவர்கள் உள்ளிட்ட கூலிப்படையினர் சுமார் 25 பேர் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். காளிமுத்து வின் உறவினர் தெரிவித்துள்ளார். மேலும் காளிமுத்துவின் தலையை துண்டித்து மூலச்சி கிராமத்திற்குள் கொண்டு சென்று அங்குள்ள பெண்களிடம் காட்டி மிரட்டியதாகவும் அவர் தெரிவித்தார். இதனால் அவர்கள் பயந்து வீடுகளின் கதவை பூட்டி உள்ளேயே இருந்து கொண்டதாகவும் தெரிவித்துள்ளார். 20 ஆண்டுகளுக்கு மேலாக தொடரும் பகை இந்த சிறுவன் உள்ளிட்ட இரட்டை கொலைக்கு பிறகாவது முடிவுக்கு வருமா என்ற ஏக்கத்தில் கிராம மக்கள் உள்ளனர்.



