10 மாத குழந்தையின் தாயை நடுரோட்டில் தாக்கிய கும்பல்..

 

பெங்களூரு-மைசூரு விரைவுச்சாலையில் மத்தூர் அருகே அரங்கேறிய ஒரு கொடூரமான ‘ரோடு ரேஜ்’ வன்முறை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடும் போக்குவரத்து நெரிசலில் சாகர் குமார் என்பவரின் கார், மற்றொரு வாகனத்தின் மீது லேசாக மோதியதால் இந்த மோதல் வெடித்ததாக கூறப்படுகிறது.

ஆத்திரமடைந்த சுமார் 9 பேர் கொண்ட கும்பல், சாகரின் காரை நடுவழியில் மறித்து, அவரை வெளியே இழுத்து போட்டு கொடூரமாக தாக்கியுள்ளது. காருக்குள் இருந்த அவரது மனைவி, தங்களின் 10 மாதக் குழந்தையைக் காட்டி கைகளைக் கூப்பி அழுதுள்ளார். “எங்களிடம் இருக்கும் தங்கம், பணம் என எல்லாவற்றையும் எடுத்துக் கொள்ளுங்கள், தயவுசெய்து எங்களை விட்டுவிடுங்கள்” என்று கெஞ்சியும் அந்தக் கும்பல் தாக்குதலை நிறுத்தவில்லை. சாகரை காப்பாற்ற அவரது மனைவி குறுக்கே விழுந்து தடுத்தும் பலனில்லை.

இச்சம்பவம் பின்னால் வந்த காரின் ‘டேஷ்கேமில்’ பதிவானதால், இந்த கொடூரம் வெளிச்சத்திற்கு வந்தது. இந்த வீடியோ ஆதாரத்தின் அடிப்படையில் சாகர் காவல்துறையில் புகார் அளித்தார். இதுவரை 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நெடுஞ்சாலைகளில் கண்காணிப்பு கேமராக்களை அதிகரிக்க வேண்டும் என்றும், அப்போதுதான் குற்றவாளிகள் தப்ப முடியாது என்றும் பாதிக்கப்பட்ட சாகர் குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.