மாமல்லபுரம்: “திமுகவுக்கும் அதிமுகவுக்கும் இடையே உடன்படிக்கை ஏற்பட்டுவிட்டது. மு.க.ஸ்டாலினும், எடப்பாடி பழனிசாமியும் கூடிய விரைவில் கூட்டணி குறித்து அறிவிக்கப் போகிறார்கள்” என்று தவெக மூத்த தலைவரும், அமைச்சருமான ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தவெகவில் இணையும் விழா சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் இன்று நடைபெற்றது. இதில், தவெக பொதுச் செயலாளரும், அமைச்சருமான ஆனந்த், அமைச்சர் செங்கோட்டையன், அமைச்சர் ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
விழாவில் பேசிய ஆதவ் அர்ஜுனா, “தமிழக அரசியல் 2026 அரசியலுக்கு முன்பு, பின்பு என மாறி இருக்கிறது. தவெகவில் இணைய வந்திருக்கும் சி. விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர் ஆகிய இருவரின் எதிர்காலமும் பிரகாசமாக இருக்கும். இணைந்து பணி செய்வோம். தமிழகத்தில் விஜய் எத்தகைய அரசியலை உருவாக்கி இருக்கிறார் என்றால், 75 ஆண்டுகால பண அரசியல், மத அரசியல், சாதி அரசியல் தூக்கி எறியப்பட்டிருக்கிறது.
எம்எல்ஏக்கள் தவெகவில் இணையும்போது அது குதிரை பேரம் என சில விமர்சகர்கள் கூறுகிறார்கள். நாங்கள் ஏற்கனவே சொன்னோம். அதிமுகவின் 90% பேர், தவெகவில் இணையப் போகிறார்கள் என்று. ஏன் என்பதற்கான காரணத்தையும் 30 நாட்களுக்கு முன்பே சொன்னோம்.
நேற்று நடைபெற்ற கூட்டணி கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் பங்கேற்ற கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் ஒரு விஷயத்தைச் சொன்னார்கள். “தேர்தல் முடிவுக்குப் பிறகு தவெகவுக்கு 108 இடங்கள் கிடைத்ததும், 47 இடங்களில் வெற்றி பெற்ற அதிமுகவிடம் நீங்கள் ஆதரவு கேட்பீர்கள் என்று நினைத்தோம். அந்த ஆதரவுடன் நீங்கள் எளிதாக முதல்வராக ஆகி இருக்கலாம். ஆனால், நீங்கள் காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், விசிக, ஐயுஎம்எல் கட்சிகளை அழைத்தீர்கள். நீங்கள் மதச்சார்பற்ற கொள்கையிலும் சமூக நீதி கொள்கையிலும் உறுதியாக இருக்கிறீர்கள்” என்று நாங்கள் நம்பினோம் என்றார்கள்.
ஆட்சி அமைப்பதற்கு நாங்கள் கடைசி நாள் வரை போராடினோம். இருந்தும் நாங்கள் ஏன் அதிமுகவிடம் ஆதரவு கேட்கவில்லை என்றால், அது ஓர் அரசியல் வியூகம். தேர்தல் முடிவுகள் வெளியான அன்றே, மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, அவரது மகன் மிதுன், பாஷ்யம் கட்டுமான நிறுவனத்தின் உரிமையாளர் ஆகியோர் திமுகவும் அதிமுகவும் இணைந்து ஆட்சி அமைக்க பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அதிமுகவின் நிறுவனர் யார்? எம்ஜிஆர் எதற்காக கட்சி ஆரம்பித்தார்? ஜெயலலிதா என்ன சொல்லி அரசியல் செய்தார்? தீய சக்தி திமுக, குடும்ப ஊழலுக்காக உருவாக்கப்பட்டது.
சட்டப்பேரவை மரபு குறித்து திமுகவினர் பேசுகின்றனர். சட்டப்பேரவையில் ஜெயலலிதாவுக்கு என்ன செய்தார்கள் என்ற உணர்வு ஒவ்வொரு அதிமுக தொண்டனின் உயிர்நாடியிலும் இருக்கிறது. ஆனால், தான் முதல்வர் ஆக வேண்டும் என்பதற்காக மு.க. ஸ்டாலினிடமும், உதயநிதியுடனும் எடப்பாடி பழனிசாமி பேச்சுவார்த்தை நடத்தியது எவ்வளவு பெரிய துரோகம்.
தேர்தலுக்கு முன்பு முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் திமுகவில் இணைந்ததும், அவரை துரோகி என்றார் எடப்பாடி பழனிசாமி. அவராவது பரவாயில்லை, கட்சியில் இருந்து விலகிவிட்டு தனிப்பட்ட முறையில் திமுகவில் இணைந்தார். ஜெயலலிதாவால் மூன்று முறை முதல்வராக்கப்பட்ட ஓபிஎஸ்-ஸை துரோகி என்றவர் எடப்பாடி பழனிசாமி. ஆனால், ஒட்டுமொத்த கட்சியையும் திமுகவிடம் அடமானம் வைக்கும்போதுதான் உண்மையான விசுவாசிகள் கொதித்தெழுந்தார்கள்.
இயற்கையாகவே தவெகவும் அதிமுகவும் ஒன்று. இரண்டுக்கும் ஒரே குறிக்கோள், ஒரே எண்ணம், ஒரே லட்சியம். தேர்தலுக்கு முன்பே தவெகவின் மதுரை மாநாட்டில் அண்ணாவும் எம்ஜிஆரும் எங்கள் அரசியல் தலைவர்கள் என அறிவித்தவர் விஜய். தேர்தலுக்கு முன்பே தொண்டர்கள் மட்டத்தில் இந்த கூட்டணி உருவாக்கப்பட்டது. இதை தனது சுய நலத்துக்காக எதிர்த்த ஒரே நபர் எடப்பாடி பழனிசாமி. இப்போது எடப்பாடி பழனிசாமியும் அவரது மகனும் மட்டும்தான் கட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். வேறு யாரும் இப்போது இல்லை. இரண்டு விஜயபாஸ்கர்களும் இணைந்ததும் 60% அதிமுக, தவெகவில் இணைந்துவிட்டது. இன்னும் 30 சதவீதமதான் உள்ளது.
திமுகவுக்கும் அதிமுகவுக்கும் இடையே உடன்படிக்கை ஏற்பட்டுவிட்டது. இன்னும் அறிவிப்பு மட்டும்தான் வெளியாகவில்லை. திமுக தலைவர் மு.க. ஸ்டாலினும், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் கூடிய விரைவில் கூட்டணியை அறிவிக்கப் போகிறார்கள். அது உள்ளாட்சித் தேர்தலாக அல்லது மக்களவைத் தேர்தலாக இருக்கும். இவர்கள் இருவரும் சேரும்போது, கையில் இருக்கும் பணமும் டெல்லி பாஜகவின் ஆதரவும் சேர்ந்து தமிழகத்தில் தவறான அரசியல் சூழலை உருவாக்கிவிடக்கூடாது.
திமுகவும் அதிமுகவும் கூட்டணி சேரும்போது அல்ல, சேருவதற்கு முன்பாகவே அதிமுகவினர் எல்லோரும் தவெக பக்கம் வந்துவிடுவார்கள். அதன் பிறகு அதிமுக லெட்டர்பேட் கட்சியாகிவிடும். அதிமுகவுக்காக வேலை செய்ய ஒரே ஒரு நிர்வாகிகூட இருக்க மாட்டார். எடப்பாடி பழனிசாமியும் அவரது மகனும் மட்டும்தான் கட்சியில் இருப்பார்கள்.
இப்போதே, மிதுன் கட்சியை வழிநடத்த வேண்டும், இளைஞரணி தலைவராக வேண்டும் என்று அதிமுகவில் தீர்மானம் போடுகிறார்கள். எனது மகன் உறுப்பினர் மட்டும்தான் என்று எடப்பாடி பழனிசாமி கூறினார். அரசியல் ஆசை இல்லையென்றால் எதற்கு அவரை உறுப்பினராக வைத்திருக்கிறீர்கள். உதயநிதிக்கு எப்படி ஸ்டாலின் பல்வேறு பொறுப்புகளைக் கொடுத்தாரோ அதையேதான் தனது மகன் விஷயத்தில் எடப்பாடி பழனிசாமியும் பின்பற்றப் போகிறார். அதிமுக மாவட்டச் செயலாளர்கள் எல்லோருக்கும் இது தெரிந்துவிட்டது.
திமுக – அதிமுக கூட்டணி குறித்து சொன்னவர் சிபிஎம் பொதுச் செயலாளர் பேபி. திமுகவும், அதிமுகவும், பாஜகவும் சேர்ந்து ஆட்சி அமைக்க இருந்ததால்தான் நாங்கள் அதை எதிர்த்தோம் என்று அவர் தெரிவித்தார். முதல் இரண்டரை ஆண்டுகள் எடப்பாடி பழனிசாமி முதல்வராகவும், அடுத்து இரண்டரை ஆண்டுகள் உதயநிதி முதல்வராகவும் இருக்கும் வகையில் அவர்கள் திட்டமிட்டதாக ஐயூஎம்எல் தலைவர் தெரிவித்திருக்கிறார். இது எவ்வளவு பெரிய சூழ்ச்சி; எவ்வளவு பெரிய அநியாயம். இதை எதிர்த்து ஒட்டுமொத்த அதிமுக தொண்டர்களும் குரல் கொடுத்தார்கள்.



