தலதா மாளிகையை முதலில் தாக்கியது விடுதலைப் புலிகள் அல்ல! ராஜித பகிரங்கம்

 

கண்டியில் உள்ள தலதா மாளிகையைத் தாக்கிய முதல் அமைப்பு தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு அல்ல என்றும், மாறாக 1989-ல் அந்த மதத்தலத்தின் மீது முதல் ஆயுதத் தாக்குதலை நடத்தியது ஜேவிபி தான் எனவும் முன்னாள் அமைச்சர் ராஜித சேனரத்ன குற்றம் சாட்டியுள்ளார்.

முன்னாள் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியின் கூட்டணியான புதிய ஜனநாயக முன்னணியில் தற்போது இணைந்துள்ள, ராஜித மாகாண சபை முறையின் வரலாறு மற்றும் அதன் அறிமுகத்தைச் சுற்றியிருந்த அரசியல் வன்முறை குறித்த ஒரு விவாதித்தபோது இந்தக் கருத்துக்களைத் தெரிவித்ததாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இது குறித்த கருத்துக்களில், விடுதலைப் புலிகள் அமைப்பு கூட ஒரு கட்டத்தில் அதிகாரப் பகிர்வு ஏற்பாட்டிற்கு ஒப்புக்கொண்டிருந்த வேளையில், இலங்கை அரசாங்கம் அதனைச் செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வந்தது.

மாகாண சபை முறையின் பிரதான எதிர்ப்பாளர்களில் ஒன்றாக ஜே.வி.பி மாறியுள்ளது. அதற்கு எதிராக ஒரு தீவிரவாதப் பிரசாரத்தைத் தொடங்கியுள்ளது.

மாகாணங்களுக்கு இடையே பயணம் செய்ய மக்களுக்கு இறுதியில் விசாக்கள் தேவைப்படும் என்ற அச்சத்தை ஜே.வி.பி பரப்பியது. சீர்திருத்தங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் தீ வைப்புத் தாக்குதல்களை நடத்தியது.

ஜே.வி.பி பெருமளவில் அரசுச் சொத்துக்களைக் குறிவைத்து, பெரும் பொருளாதார இழப்புகளை ஏற்படுத்தியதாக அவர் குற்றம் சாட்டினார்.

அந்தக் காலகட்டத்தில் அரசுப் பேருந்துகளுக்கு மட்டும் ஏற்பட்ட சேதத்தின் மதிப்பு ரூ. 288 மில்லியனுக்கும் அதிகமாகும். மேலும், அந்த இயக்கம் அரசு தொடருந்து மற்றும் தனியார் போக்குவரத்து வாகனங்களையும் குறிவைத்தனர்.

குறிப்பாக கண்டியில் உள்ள தலதா மாளிகையைத் தாக்கிய முதல் அமைப்பு தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு அல்ல.

நாட்டிற்குத் தீ வைத்து, பொருளாதாரத்தைச் சேதப்படுத்திய அதே ஜே.வி.பி, இப்போது பொது மேடைகளில் தோன்றி, கடந்த 75 ஆண்டுகால அரசியல் நிர்வாகங்களை தேசத்தின் சாபக்கேடு என்று வர்ணிக்கிறது.

உண்மையில் நாட்டிற்குச் சாபக்கேடாகச் செயல்பட்டவர் யார்? என்பதைப் புரிந்துகொள்வதற்காக, இளைய தலைமுறையினர் இலங்கையின் அரசியல் வரலாற்றை கூர்ந்து ஆராய வேண்டும்.

மாகாண சபைகள் குறித்த ஜே.வி.பியின் தற்போதைய நிலைப்பாடடு விமர்சிக்கத்தக்கது.

ஒரு காலத்தில் இந்த அமைப்புக்கு எதிராகக் குரல் எழுப்பிய அக்கட்சி, தற்போது ஆட்சியில் இருப்பதோடு மாகாண சபைத் தேர்தல்களை நடத்தவும் தவறிவிட்டது” என்று கூறியுள்ளார்.