கோடைக்கால வெப்ப அலைகள் அதிகரித்து வரும் நிலையில், ஜப்பானில் மனிதர்களை சில நிமிடங்களில் குளிர்விக்க உதவும் ‘தனிநபர் குளிர்விக்கும் பெட்டி’ அறிமுகமாகியுள்ளது. ‘Do Hiemon’ எனப்படும் இந்த சாதனம், மனிதர்களுக்கான குளிர்சாதனப் பெட்டி என்ற புதிய கருத்தை நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளது. கட்டுமானத் தொழிலாளர்கள், வெளிப்புற பணியாளர்கள் மற்றும் அதிக வெப்பத்தில் பணிபுரிபவர்களுக்கு இது விரைவான உடல் குளிர்ச்சியை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
உலகின் பல நாடுகளில் கோடைக்கால வெப்பநிலை ஆண்டுதோறும் புதிய உச்சத்தை எட்டிவரும் நிலையில், வெப்பத்தால் ஏற்படும் உடல்நல பாதிப்புகளை குறைக்கும் புதிய தொழில்நுட்பங்களை உருவாக்கும் முயற்சிகள் தீவிரமடைந்துள்ளன. அந்த வகையில், ஜப்பானைச் சேர்ந்த SDRS மற்றும் Trusco நிறுவனங்கள் இணைந்து ‘ Do Hiemon ‘ என்ற தனிநபர் குளிர்விக்கும் பெட்டியை அறிமுகப்படுத்தியுள்ளன.
விற்பனை இயந்திரம் போல தோற்றம்
இந்த சாதனம் வெளிப்புற தோற்றத்தில் ஜப்பானில் பரவலாக காணப்படும் விற்பனை இயந்திரங்களைப் போன்றே வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆனால் அதன் உள்ளே நுழையும் நபருக்கு சில நிமிடங்களிலேயே உடலை விரைவாக குளிர்விக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
சுமார் 7 அடி உயரமும், 3.9 அடி ஆழமும் கொண்ட இந்த எஃகு பெட்டிக்குள் ஒருவர் நின்றவுடன், உடலின் முக்கிய பகுதிகளான தலை, கழுத்து, தோள்பட்டை மற்றும் முதுகுப் பகுதிகளை நோக்கி குளிர்ந்த காற்று வீசும்.
சில நிமிடங்களில் உடல் குளிர்ச்சி
இந்த சாதனத்தின் உள் வெப்பநிலை 15 டிகிரி செல்சியஸாக பராமரிக்கப்படுகிறது. அதே நேரத்தில், 5 டிகிரி செல்சியஸ் அளவுக்கு குளிர்விக்கப்பட்ட காற்று நேரடியாக உடலின் மேல் பகுதியை தாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
TVK வில் நிர்வாக மாற்றம் வாழ்த்து சொன்ன CM என்ன விஷயம் ?
இந்த அமைப்புக்குள் ஐந்து நிமிடங்கள் இருந்தாலே உடலில்குறிப்பிடத்தக்ககுளிர்ச்சி ஏற்படும் என்றும், சுமார் பத்து நிமிடங்கள் பயன்படுத்தினால் வெப்ப சோர்வின் தாக்கத்தை குறைக்க உதவக்கூடும் என்றும் தயாரிப்பு நிறுவனம் தெரிவிக்கிறது.
பாதுகாப்புக்காக தானியங்கி டைமர்
அதிக நேரம் குளிர்ந்த சூழலில் இருப்பதைத் தவிர்க்கும் வகையில், இந்த சாதனத்தில் 20 நிமிடங்கள் கழித்து தானாகவே இயங்குவதை நிறுத்தும் டைமர் வசதி வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பாதுகாப்பும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
குறைந்த மின்சார நுகர்வு
வழக்கமான ஏர் கண்டிஷனிங் அமைப்புகளுடன் ஒப்பிடும்போது, இந்த சாதனம் குறைந்த மின்சாரத்திலேயே இயங்கும் என்று Trusco நிறுவனம் தெரிவிக்கிறது. மேலும், சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளதால் தேவையான இடங்களுக்கு எளிதாக எடுத்துச் செல்ல முடியும். சாதாரண மின்சார இணைப்பு இருந்தாலே இதை பயன்படுத்தலாம்.
எங்கு பயன்படுத்தலாம்?
கட்டுமானத் தளங்கள், தொழிற்சாலைகள், பண்ணைகள்போன்ற அதிக வெப்பத்தில் பணிபுரியும் இடங்களில் இந்த சாதனம் பயனுள்ளதாக இருக்கும் என்று தயாரிப்பாளர்கள் கூறுகின்றனர். அதேபோல், வணிக வளாகங்கள், பள்ளிகள், விளையாட்டு அரங்குகள், திருவிழாக்கள் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் இதைப் பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜப்பானில் நல்ல வரவேற்பு
இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் விற்பனைக்கு வந்த ‘Do Hiemon’ சாதனம், ஜப்பானில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. சமூக ஊடகங்களிலும் இதற்கு நேர்மறையான கருத்துகள் வெளியாகி வருகின்றன. குறிப்பாக, வெளிப்புற பணியாளர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
தற்போது இந்த சாதனம் ஜப்பானில் மட்டுமே கிடைக்கிறது. ஜப்பானுக்கு வெளியே விற்பனை செய்யப்படுமா என்பது குறித்து SDRS மற்றும் Trusco நிறுவனங்கள் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை.



