‘சனிப் பிணம் தனி போகாது’ என்பதுபோல் அந்தக் காதலர்கள் ஒரு கோர விபத்தில் சிக்கி இறந்து போயிருந்தனர்! அந்தத் துர்ச்சம்பவத்திற்குப் பின்னர், அவர்கள் திருமணம் செய்துக்கொள்ளத் தீர்மானித்திருந்த பிப்ரவரி 14-ம் திகதி, ஒவ்வொரு மாதமும் மீண்டெழிந்து, பெற்றோரைச் சித்ரவதைக்குள்ளாக்கிக் கலக்கியது. அவர்கள், நிம்மதியில்லாமல் தவித்தனர்!
‘போயும் போயும் இந்த சனியன் புடிச்ச 14-ம் தேதீலீயா கல்யாணத்த வெப்பான்?’
காதலர்கள், முப்பது வயதுகூட நிறம்பாத இளம் தொழிலதிபர்கள். இரண்டு குடும்பத்தினரும் எண்ணியெண்ணி பெருமைபட்டுக்கொண்டிருந்த வாரிசுகள். அந்தப் பொருத்தம் ஒரு தெய்வ கடாட்சம் என்று பூரித்துப் போய், காதலர்களுக்கு ஈடான உற்சாகத்துடன் பெற்றவர்களும் திருமணத்தை எதிர்ப்பார்த்து ஆவலுடன் காத்திருந்தனர். ஒரு மழை நாளில், கோர விபத்தொன்றில் அந்தக் கனவு சிதைந்தபோது, ‘அவர்கள் இருவரும் ஒன்று சேரக்கூடாது என்பது கடவுளின் சித்தம் போலும்?’ என்று நெருங்கிய உறவுகள் கடவுளின்மேல் பாரத்தைப் போட்டு தேற்றிக்கொள்ள முயன்றன. பாவம்! மகனின் தாய் தந்தையர் மட்டும் கல்யாணம் நிச்சயிக்கப்பட்டிருந்த திகதியின் சாபம் தெரிந்திருந்தும் அவனின் முடிவை மாற்ற முடியாமல் போனதையெண்ணி அழுத்துத் துடித்தனர்.
* * *
சீனர்களின் கலாச்சாரத்தில் குடும்பத்தில் பிறந்த முத்த மகன் முதலில் திருமணம் செய்துக்கொள்வது பெற்றோர், உறவுக்காரப் பெரியவர்கள் மற்றும் மூதாதையர்களுக்கு அவன் செலுத்தும் தலையாய மரியாதையாகப் பார்க்கப்பட்டது. மகன் சூங் வா, காதலி லீ நாவை அறிமுகப்படுத்தி, அடுத்த பிப்ரவரியில் திருமணம் செய்துக்கொள்ளவிருந்த செய்தியைச் சொன்னபோது பெற்றோர் சந்தோஷத்தில் திளைத்தனர். ஓர் ஆண் வாரிசைப் பெற்றெடுத்து வம்ச விருத்தியைத் தொடர மகன் தயாராகிவிட்டான் என்று கொண்டாடி மகிழ்ந்தனர். மேலும், குடும்பத்தின் தலைச்சன் பிள்ளைகள் இருவரும் கல்யாணத்தில் இணைவது மிகவும் சிரேஸ்டமென்று சீனர்கள் நம்பியதால் இது ஒரு தெய்வ சங்கல்பமென்று பூரித்துப் போயினர். அதற்குத் தோதாக அந்த ஜோடியும் முன் அறிமுகம் ஏதும் இல்லாமலேயே கண்டதும் காதல் வயப்பட்டிருந்தனர்.
சூங் வா, வருடந்தோரும் சீனப் பெருநாளின் 15-வது நாள் கொண்டாட்டத்தை (அவனுடைய கெந்தனீஸ் வட்டார மொழியினர் ‘Lantern Festival’ என்று அழைத்தனர்) கோலாலம்பூரிலேயே கொண்டாடுவதுதான் வழக்கம். கடந்த வருடம் ஒரு மாற்றத்திற்கு, பினாங்கிற்குச் செல்ல தீர்மானித்தான். பினாங்கின் ஆதிக்கச் சீன வட்டார மொழியினரான ஹொக்கியன் பிரிவினர் அதே 15-ம் நாளை ‘Chap Go Mei’ என்று கொண்டாடினர். அது, ஹொக்கியன் மொழியில் ‘காதலர் தினம்’ என்று பொருள் பட்டது.
காதலன் இல்லாத கன்னிப் பெண்கள் ‘Chap Go Mei’ தினத்தில் மெண்டரின் ஆரஞ்சு பழத்தில் தமது பெயரையும், தொடர்பு விபரத்தையும் எழுதி ஆற்றில் வீசுவார்கள். அதைக் கண்டெடுக்கும் ஆண்கள், அந்த யுவதியைத் தொடர்புகொண்டு, காதல் கொண்டு, திருமணம் செய்துக்கொள்வது அதன் பாரம்பரிய ஐதீகமாக இருந்தது.
இன்றையக் கைப்பேசி யுகத்தில் இது பொருளற்றதாகியிருந்தாலும் ஒரு வேடிக்கைக்காக அந்த மரபைப் பேணுவதுபோல் இன்றும் பல கன்னிப் பெண்கள், பினாங்கு ஜார்ஜ் டவுன், கெர்ன்னி டிரைவ் போன்ற கடற்கரை ஸ்தலங்களில் திரண்டு, மாண்டரீன் ஆரஞ்சுகளை கடலில் வீசி மகிழ்ந்தனர். சில குறும்புக்கார ஆண்களும் விசைப் படகுகளில் காத்திருந்து பழங்களைப் பொறுக்கி மரபைக் காத்துக் குறும்பு செய்தனர்.
சூங் வா அப்படியெல்லாம் ஏதும் செய்து குமாரி லீ நாவைக் கண்டடையாவிட்டாலும், அந்தக் கேளிக்கையைப் பார்க்கக் கடற்கரையில் திரண்டிருந்த போதுதான், அகஸ்மாத்தாய்ப் பார்த்துக்கொண்ட விநாடி அவர்கள், கண்டதும் காதல் வயப்பட்டுப் போயினர். பின் தொடர்ந்த சிநேகிதத்தில் அவரவர் துறையில் சிறந்து விளங்கும் இளம் தொழிலதிபர்களாய் இருந்தது, அவர்களை மேலும் ஒன்றிணைத்தது.
ஒருவர் மற்றொருவரின் குணநலன்கள், பழக்கவழக்கங்களை நேரடியாகப் பார்த்துப் புரிந்துகொள்ள சில மாதங்கள் சேர்ந்து வாழத் தொடங்கினர். இருவருக்கும் நல்ல புரிதல் இருப்பது தெரிந்தது. புத்ரபாக்கியத்திற்குக் குறையில்லையென்பதும் உறுதியானது.
அவர்கள் கல்யாணம் செய்துக்கொள்ளத் தீர்மானித்தனர்.
2024, கடல் நாகத்தின் ஆண்டாக இருப்பதால் திருமணத்திற்கு மிகவும் உகந்ததென்று சீன ஜோதிடம் சொன்னதைப் பெற்றோர்கள் நினைவூட்டியபோது, பிப்ரவரி 14-ம் திகதி காதலர் தினத்தன்று திருமணம் செய்துக்கொள்ள அவர்கள் முடிவெடுத்தனர்.
14-ம் எண்ணின் ‘Sap sei’ என்ற உச்சரிப்பிற்கு ‘சாவு நிச்சயம்’ என்ற வேறொரு அர்த்தமும் கெந்தனீஸ் மொழியில் இருப்பதால் அது, அபசகுனமான எண் என்று காதலனின் பெற்றோர் சொன்னபோது, அது ஒரு மூட நம்பிக்கையென்று ஹொக்கியன் மொழிக் காதலி சிரித்துப் புறக்கணித்தாள். ஆங்கிலேயர்களின் காதலர் தினத்தன்று திருமணம் செய்துக்கொள்வதை அந்த இளம் தலைமுறை ஒரு பேராகக் கருதியது.
காதலியின் வியாபாரம் பினாங்கிலும் காதலனின் வியாபாரம் கோலாலம்பூரிலும் இருந்ததால் அவர்கள் அடிக்கடி நிறைய பிரயாணங்கள் செய்ய வேண்டி வந்தது. அப்படியானதொரு பிரயாணத்தின் போதுதான் அவர்கள், ஒரு கோர விபத்தில் சிக்கிச் செத்துப் போயினர்.
பேர் சொல்லும் சந்ததிக்கு உத்தரவாதம் தரும் படிப்பும், செல்வமும், செல்வாக்கும் இருந்த ஜோடியின் மேல் ‘யாருடைய கண் பட்டதோ, நாசமாப் போவ..’ என்று பாட்டிமார்கள் சாபம் விட்டழுதனர். திருமணம் செய்துக்கொள்ளவிருந்த 14-ம் எண்னாலேயே சாவு நிகழ்ந்ததாகக் காதலனின் பெற்றோர் உறுதியாக நம்பி, ‘அந்த நாள் வேண்டாமென்று எவ்வளவோ சொல்லியும் கேட்கவில்லையே, பாவி!’ என்று புலம்பித் துடித்தனர்.
* * *
பிள்ளைகளின் அகால மரணம் தாய்மார்களை நடைப்பிணங்களாக்கின. சூங் வாவின் தாயார் ஆஸ்துமா நோயாளி. மகனின் மரணம் சுவாசத்தை அடைத்து ஆயுளை அச்சுறுத்தியது. மன உளைச்சலுக்குள்ளாகிப் போனாள். 14-ன் எண்ணின் துர்திருஷ்டத்தைச் சொல்லி மகனைக் காப்பாற்றிவிட்டதாக பிரம்மை பிடித்துப்போய், அடிக்கடி மகனின் அறையைத் திறந்து பார்த்து, தனக்குள் பேசிக் கொண்டாள்.
‘சூங் வா எங்க போயிருக்கான்? ரெண்டு நாளா ஆளயே காணலியே. பினாங்கு போயிருக்கானா? ஏங்கிட்ட சொல்லவே இல்ல.. ‘
உணவின் தேவை அவசியமில்லாமல் போனதுபோல் சாப்பிட மறுத்தாள். மறதியில், ஏற்கனவே சாப்பிட்டுவிட்டதாகவும் சாதித்தாள். அக்கம்பக்கத்து ‘Ak Soh’-க்களுடன் (முதிய பெண்கள்) கூடி ‘Tai Chi’ பயிற்சிக்குப் போகும் பழக்கத்தை உடனடியாக நிறுத்திக்கொண்டாள். தினமும் காலையில் ஆர்வத்துடன் செய்து வந்த தோட்ட வேலை, ‘Sin Chew Jit Poh’ சீன நாளிதழைப் பக்கம் விடாமல் வாசிப்பது, சீன வானொலி கேட்பது போன்ற செயல்களை முற்றாக நிறுத்திக்கொண்டாள்..
வெளி உலகத்தையே பார்க்க விரும்பாதவள்போல் தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டாள். பேசிக்கொள்ள வேறு ஆளே தேவைப்படவில்லை! சதா தனக்குள்ளேயே ஏதேதோ முணுமுணுத்துக்கொள்ளலானாள். அந்த முணுமுணுப்பில் மகனின் பெயர் மட்டுமே தெளிவாகக் கேட்டது. இரவில், அடிக்கடி எழுந்து படுக்கையில் உட்கார்ந்துகொண்டு, மகன் தன்னைப் பார்க்க வந்ததாகவும், நீண்ட நேரம் தன்னுடன் பேசிக்கொண்டிருந்ததாகவும் புலம்பத் தலைப்பட்டாள்.
தாயின் உடல்நிலை குடும்பத்தினரை அச்சம்கொள்ள வைத்தது. கொடுத்த மருந்துகளும் பலனளிக்கவில்லை. மகனின் ஆவியே தாயின் ஆரோக்கியக் கேட்டிற்குக் காரணம் என்று குடும்ப முதியவர்கள் அபிப்பிராயப்பட்டனர். தாவோஷி (Daoshi) என்று அறியப்பட்ட தாவோயிச துறவியின் உதவியை நாடினர்.
* * *
தாவோஷி (Daoshi) என்று அறியப்பட்ட தாவோயிச துறவியின் உதவியை நாடினர்.
அவர் மதச் சடங்குகளுக்கு மந்திரம் ஓதுவது, தெய்வ வழிபாடு செய்வது, ஆவியுலக ஆசீர்வாதம், ஆத்ம ரட்சிப்பு, நோய்த் தீர்ந்து நலம்பெற தியானிப்பது போன்ற நற்காரியங்களுக்குத் தன்னை அர்ப்பணித்துத் துறவு பூண்டிருந்தவர்.
மகனின் மரணத்தையும் தாயின் சங்கடத்தையும் கேட்டறிந்த துறவி, கொஞ்ச நேரம் தியானத்தில் ஆழ்ந்தார். காதலியுடன் திருமணத்தில் இணைய முடியாமல் ஏங்கித் தவிக்கும் மகனின் ஆவியால்தான் தாயிற்கு இவ்வளவு தொல்லைகளும் என்பதை விளக்கி, ‘மிங்ஹுன்’ செய்து, தனித்து அலையும் ஆவிகளை தம்பதிகளாக மேலுலகில் இணைத்து வைத்தால் இந்தத் தொல்லைகள் நீங்கும் என்ற தாவோயிச நம்பிக்கையை எடுத்துச் சொன்னார்.
இரு குடும்பத்தினருக்கும் அது நல்ல யோசனையாகப் பட்டது. ஆவித் திருமணச் சடங்கைச் செய்ய ஒப்புக்கொண்டனர்.
* * *
‘மிங்ஹுன்’ சடங்கில் ஆவித் திருமணமும், கர்ம காரியமும் ஒரே நாளில் அடுத்தடுத்து செய்யப்பட்டதால் கொண்டாட்டத்திற்கு இடமில்லை. சீனக் கல்யாணச் சடங்குகளில் பலரும் விரும்பி அணியும் சிவப்பு நிற ஆடைகளை அணிய, இந்தச் சடங்கில் ‘தம்பதிக்கு’ மட்டுமே அனுமதியிருந்தது. மற்றவர்கள் வெள்ளை அல்லது கருப்புநிற உடைகளையே அணிந்து, துக்கம் அனுஷ்டிக்க கேட்டுக்கொள்ளப்பட்டனர்.
மூங்கில் கழிகளால் முடையப்பட்ட உருவங்களின்மேல் காகிதக்கூழைக் கொண்டு மெழுகி, நான்கரை மற்றும் நான்கடி உயரத்திற்கு இரண்டு பொம்மைகள் தயாரிக்கப்பட்டன. மணப்பெண் பொம்மை, ‘qipao’ என்று அழைக்கப்பட்ட சீனர்களின் பாரம்பரிய சிவப்பு நீற திருமண உடையில் அலங்கரிக்கப்பட முகம், சல்லடைத் துணிக்குள் மறைந்திருந்தது. சிகை அலங்காரம் அஜந்தா கொண்டையை நினைவூட்டியது. கழுத்து, தங்க முழாம் பூசப்பட்ட தகர ஆபரணங்களால் மின்னியது.
‘Changpao’ என்று அழைக்கப்பட்ட கழுத்திலிருந்து கால் வரையிலான நீண்ட அங்கியும், ‘Ma Gua’ என்ற சொல்லப்பட்ட ஜாக்கெட் போன்ற மேலங்கியும் மணமகனுக்கான திருமண உடைகளாக பொம்மைக்கு உடுத்தியிருந்தனர். இரண்டு அங்கிகளும் சிகப்பு நிறத்தில், காலர் இல்லாமல் மொட்டைக் கழுத்தாகவே இருந்தன. மேலங்கியின் பொத்தான்கள் வழக்கமான சட்டைகளுக்கு இருப்பதுபோல் நடுவில் இல்லாமல் வலது மார்புக்கு நேராக கீழ்நோக்கி இருந்தன. நிஜ திருமணத்தைப் போலவே ‘மணப்பெண்ணிற்கு’ இருந்த அலங்காரம், ‘மணமகனுக்கு’ இருக்கவில்லை.
* * *
துறவி, சடங்கை ஆரம்பிக்க ஆயத்தமானார்.
அந்தத் தாவோயிச கோவிலில் ‘மிங்ஹுன்’ சடங்கிற்கென்றே பிரத்தியேகமாக அமைக்கப்பட்ட பிரார்த்தனை மேடையொன்று இருந்தது. அங்கே, ‘தம்பதிகளின்’ முன்னோர்களுக்குப் ப்ரீதியான உணவு, சீன மதுரசம், தேயிலை நீர் போன்றவை படைக்கப்பட்டிருந்தன. துறவி, சில மந்திரங்களை ஜெபித்து முன்னோர்களைச் சடங்கிற்கு அழைத்து,விவாகத்திற்கு அனுமதியும், ஆசிர்வாதமும் தந்து ரட்சிக்கும்படி பணிவுடன் வேண்டிக்கொண்டார்.
அடுத்தப் படியில், வலது புறம் மணமகளின் பொம்மையும் இடதுபுறம் மணமகனின் பொம்மையும் நிறுத்தப்பட்டிருந்தன. கழுத்தில், அவரவரின் சமீபத்திய புகைப்படம், பெயருடன் தொங்கிக்கொண்டிருந்தது. இரண்டு பக்கமும் மூன்றடி உயரத்திற்கு இரண்டு வேலைக்கார பொம்மைகள் நின்றுக்கொண்டிருந்தன. காதலர்களின் பெயர், பிறந்த திகதி, மரணமடந்த நேரம் ஆகியவற்றை சிவப்புநிற காகிதத்தில் கருப்புநிற மையில் எழுதி, ‘Yin Shu’ என்று அழைக்கப்பட்ட திருமண ஒப்பந்த பத்திரம் ‘தம்பதி’யின் காலடியில் வைக்கப்பட்டிருந்தது. முன்னோர்கள் விவாகத்தை ஆவியுலகில் ஆன்மீகரீதியாக பதிவு செய்ய, அந்தப் பத்திர அத்தாட்சி அவசியமென்று நம்பப்பட்டது.
துறவி, மணமக்களின் பொம்மைகளுக்குள் முன்பே வைக்கப்பட்டிருந்த தகடுகளுக்குரிய முன்னோர்களை வணங்கி வேண்டிவிட்டு, ‘மிங்ஹுன்’க்கு உரிய விசேஷ மந்திர ஸ்லோகங்களையும், பிரார்த்தனைகளையும் ஜெபித்து, தம்பதியின் ஆவிகளைச் சடங்கிற்கு வரழைத்து பொம்மைகளை உயிர்ப்பித்தார். பின்னர், சகல கல்யாண மந்திரங்களையும் ஓதி, பந்தமின்றி அலைந்துகொண்டிருந்த சூங் வா, லீ நா ஆவிகளை ஆவித் திருமணத்தில் ஒன்றிணைத்து, ஆத்ம சாந்தி செய்து வைத்தார்.
ஆவித் திருமணமேயானாலும் மறுமை வாழ்க்கையிலும் தம்பதிகளின் சுகபோக வாழ்க்கைக்கு அத்தியாவசியமென நம்பி, மண்ணுலக உறவினர்கள் பங்களா, கண்ணாடியுடன் கூடிய அலங்கார மேசை, ஆறு முக்காலிகளுடன் கூடிய சாப்பாட்டு மேசை, பணப் பெட்டி, குளிர்சாதன பெட்டி, ஆடைகள், சொகுசு வாகனம், மணமகனுக்கு ஒரு வேலைக்காரனும், மணமகளுக்கு ஒரு வேலக்காரியும் என காகிதம் மற்றும் மூங்கில்களால் ஆன பொருட்களை இரு வீட்டாரும் வரதட்சணையாக வழங்கி மகிழ்ந்தனர். கருப்பு, நீலம் அபசகுன நிறங்களாகக் கருதப்பட்டதால் அந்த நிறத்தில் எந்தப் பொருளுமே இருக்கவில்லை. பரிசுப் பொருட்களுக்கு மத்தியில், ஒரு சிவப்புநிறத் தாளில், தங்கநிற மையில் ‘கடவுள் இணைத்ததை மனிதன் பிரிக்காதிருப்பானாக..’ என்ற ஸ்லோகம் மண்டரின் மொழியில் அழகாக எழுதப்பட்டிருந்தது.
ஒரு வழியாக கல்யாணச் சடங்குகள் முடிந்தபோது, எல்லோருடைய முகங்களிலும் இனம் புரியா நிம்மதி படர்ந்து, ஒளிர்ந்தது. மணமகனின் தாய், மனப்பூர்வமான திருப்தியில் முகம் மலர்ந்து காணப்பட்டாள்.
அடுத்து, கர்ம காரியம் ஆரம்பமானதுஸ
துறவி, ‘jingshui’ என்று அழைக்கப்பட்ட புனித நீரை உருவ பொம்மைகள், பரிசுப் பொருட்கள், கூடியிருந்த குடும்பத்தினர்கள் மேலெல்லாம் தெளித்து அந்த ஸ்தலத்தைப் புனிதப் படுத்தி ஆசீர்வதித்தார். அந்த ஜல அர்ச்சனையை வானத்தை நோக்கியும் அர்ச்சித்து, வைபவத்தில் கலந்துகொள்ள வந்த முன்னோர்களின் ஆவிகளையும் சாந்தப்படுத்தி, நன்றி கூறிக்கொண்டார்.
‘மிங்ஹுன்’ சடங்கின் உச்சகட்டமாக உருவ பொம்மைகளும், பரிசுப் பொருட்களும், ஸ்லோக காகிதமும் குவியலாகக் குவிக்கப்பட்டன. பின்னர், தீயிட்டுக் கொளுத்தப்பட்டன. ஆவிகளின் முனகலோ என்னவோ, அவ்வப்போது தீக்குள்ளிருந்து வெடிப்புச் சத்தம் கேட்டுக்கொண்டிருந்தது. ஆவிகளுக்கு மறுமை வாழ்க்கைக்கான வழியைக் காட்டுவதுபோல் தீ, வானத்தை நோக்கி ஆர்ப்பரித்து எழுந்து, ஆவேசத்துடன் எரியத் தொடங்கியது. எல்லோரும் இரு கரங்களையும் கூப்பி வணங்கி, ’மணமக்களை’ வழியனுப்பி வைப்பதுபோல் மரியாதையுடன் மேல்நோக்கி, தீயையே பார்த்துக்கொண்டு நின்றனர்.
கொஞ்ச நேரத்தில் எல்லாம் எரிந்து சாம்பலாயின. துறவி, சாம்பலைக் கைகளில் ஏந்தி, மந்திரம் முழங்கி, காற்றில் வீசி, சடங்கை முடித்து வைத்தார்.
* * *
சூங் வாவும் லீ நாவும் அநியாயமாக இறந்துபோன அந்தத் துர்திருஷ்ட சனி மாலை!ஸ
இன்னும் ஒரு மாதமே இருந்த கல்யாணத்தையொட்டி அவர்களிருவரும் பினாங்கில் சில ஏற்பாடுகளைச் செய்துவிட்டு கோலாலம்பூருக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். சூங் வாவின் வலது கை ஸ்டீரிங்கில் இருக்க, இடது கை காதலியின் கரத்தைப் பற்றியிருந்தது. லீ நா அவனது கையை தனது மடியில் வைத்துக்கொண்டு விரல்களால் மெல்ல தடவிக் காதலில் கனிந்திருந்தாள். அப்போது, அவனுடைய கைப்பேசிக்கு அழைப்பு ஒன்று வந்தது. பெயரைப் பார்த்துவிட்டு அழைப்பைத் துண்டித்தான். சில விநாடிகளிலேயே கைப்பேசி மீண்டும் அலறியது. மீண்டும் துண்டித்தான்.
“டார்லிங், ஏதாவது முக்கியமான அழைப்பாக இருக்கப் போவுது. ஹண்ட் ஃபிரிலாதான் பேசுங்களேன்..“ என்று காதலி சிணுங்கினாள்.
“அப்படியெல்லாம் ஒன்னுமில்ல டியர்..” என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே மீண்டும் வந்த அழைப்பை லீ நா கடுப்புடன் பார்த்தாள்.
‘யாரது?. பெண்ணின் முகம் போலல்லவா தெரிகிறது?..’
அவன், உடனடியாக அழைப்பைத் துண்டித்தே அவளின் சந்தேகத்தை ஊர்ஜிதம் செய்தான். லீ நா உடனே தன் மடியிலிருந்த கையை அவன் பக்கம் வீசியடித்தாள். அடுத்தக் கணம், உடம்பெல்லாம் ஒருவித பதற்றம் பற்றிக்கொண்டது.
“அழைப்பை ஏற்றுப் பேச நான் அருகிலிருப்பதுதான் உங்களுக்கு சங்கடமாக இருக்கிறதா?..” அவளின் குரல் சீற்றத்துடன் ஒலித்தது.
“அப்படியெல்லாம் ஒன்றுமில்லையே!” என்று சொன்னதை அவனே மறுப்பதுபோல் அசடு வழிந்தான்.
லீ நா, உடனே அவனுடைய கைப்பேசிக்கு அழைத்தாள். அது, ‘சுவிட்ச் ஆஃப்’ செய்யப்பட்டிருப்பதாக அவனுக்கும் கேட்க, இவளது கைப்பேசி இவள் நினைத்ததை உறுதி செய்தது.
லீ நாவால் அந்த அயோக்கியத்தனத்தைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை.
“அயோக்கியப் பயலே!. நாடகம் ஆடிக்கொண்டிருக்கிறாயா? நான் என்ன ‘நீயே எனக்கு எல்லாம் என்று உன் காலையே நக்கிக்கொண்டு கிடப்பேன்..’என்று நினைத்துக்கொண்டிருக்கிறாயா?. நோ வே!. நல்ல வேளை! உன் லட்சணம் இப்போதே தெரிந்துவிட்டது. எனக்கு இந்தக் கல்யாணம் வேண்டாம். நான் இந்த விநாடியே இந்தக் கல்யாணத்தை ரத்து செய்கிறேன்.. யூ கெட் லாஸ்ட்!” என்று கத்தினாள்.
இருவருமே செல்வந்தர்கள். ஒருவரின் ஆத்திரத்தையோ, ஆவேசத்தையோ பொறுத்துக்கொள்ள மற்றவரின் அகங்காரம் இடங்கொடுக்கவில்லை.
சூங் வா, மன்னிப்பெல்லாம் கேட்டுக் கெஞ்சவில்லை!
“உனக்கு அதுதான் வேண்டுமென்றால் செய்துக்கொண்டு போ!. எனக்குமட்டுமென்ன, உன்னைப் போன்ற ஒரு ராட்சசியைக் கல்யாணம் செய்துக்கொள்ளவேண்டுமென்று தலையெழுத்தா என்ன?. அனுபவித்த வரைக்கும் லாபம் என்று போகிறேன். ஒரு ஆண்பிள்ளைக்கு வேறு என்ன வேண்டும்?.” என்று ஆணவத்துடன் அவமானம் செய்தான்.
லீ நாவால் அந்த அவமானத்தைச் சகிக்க முடியவில்லை. ‘இவனா இப்படியெல்லாம் பேசுகிறான்?’ அதிர்ந்து போனாள்! ‘இந்த ஒரு வருட காதல் இவ்வளவு பொய்யானதா?’ அவளால் நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை. வயிறெரிந்து போனாள். உடல் பதறி, நடுங்கியது. ஆத்திரம் அறிவை மழுங்கடித்தது.
“You chaunistic bastard! Hell with you..” என்று குமுறி, கையிலிருந்த கைப்பேசியை அவன் மேல் வீசியடித்தாள்.
“You Bitch? Are you mad? ஆக்சிடண்ட் ஆனா ரெண்டு பேருமே செத்தோம்..” என்று அவன் பதற்றத்துடன் கைபேசியைத் தடுக்கத் திரும்பினான். அடுத்தக் கணம், வாகனம் சாலையோரத்திலிருந்த சிமெண்ட் தடுப்பில் மோதி, கோர விபத்திற்குள்ளானது.
“ஓ மை காட்! நாம செத்தோம். ஐயோ, அம்!..”
ஹொக்கியன் மற்றும் கெந்தனீஸ் பாஷையில் இரண்டு அலறல்கள் பாதியிலேயே துண்டாகி ஒன்றாகக் கலந்தன.
இருவரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.
* * *
சற்று முன்புவரை தனித் தனியாக எங்கெல்லாமோ சுதந்திரமாக அலைந்து திரிந்துகொண்டிருந்த சூங் வாவின் ஆவியும் லீ நாவின் ஆவியும் இப்போது, ‘மிங்ஹுன்’ சடங்கால் பலவந்தமாகக் கட்டாயத் திருமணம் செய்து வைக்கப்பட்ட அதிர்ச்சி தாங்காமல் கொந்தளித்துக்கொண்டிருந்தன. கோபாவேசத்தின் அனலில் ஆவிகளிரண்டும் துடித்தன. சூங் வாவின் ஆவி கோபக்கனல் காட்டி எரிந்தது. லீ நா பார்வையைத் திருப்பிக்கொண்டது.
‘நமக்கு ‘மிங்ஹுன்’ செய்து வைக்கச் சொல்லி நீ ஏதும் முட்டாள்தனமாக உனது பெற்றோர்களின் கனவில் தோன்றி தொந்தரவு செய்தாயா, சானியனே?’ – சூங் வா, ஆவியுலகமே அதிரும் குரலில் லீ நாவைப் பார்த்துக் கேட்டது. அந்த ஆவேசக் குரலைக் கேட்ட வேலைக்கார பொம்மைகள் இரண்டும் ஓரடி தள்ளிப் போய் நின்றுக்கொண்டன.
லீ நாவும், சூங் வாவிற்கு ஈடான ஆத்திரத்தைக் காட்டிக் கத்தியது.
‘அட ச்சி, வாய மூடு. அது நான் கேட்கவேண்டிய கேள்வி. கல்யாணம் செய்துக்கொள்ள ஆளாய்ப் பறந்த நாம் எப்படி பிரிந்து போனோம் என்பதை நீ மறந்துவிட்டாயா?. இந்தக் கல்யாணமே வேண்டாம் என்று முதலில் சொன்னது நான்தான். ஞாபகம் இருக்கிறது தானே?..’
‘You Bitch!. கல்யாணமே வேண்டாமென்று முதலில் சொன்னது மட்டுமா நீ? Hell with you என்று மொட்டையாகச் சாபம் விட்டு, என்னோடு செத்தவளும் நீதானே?.’ என்றது சூங் வா.
‘போதும் வாயை மூடுடா பாஸ்டர்ட். இந்தக் கட்டாயக் கல்யாணம் நடப்பதற்கு முன்புவரை நான் இந்த ஆவி உலகில் எங்கெல்லாமோ தனியாக எவ்வளவு சந்தோஷமாகத் திரிந்துகொண்டிருந்தேன். உன்னைப் பார்த்ததுகூட கிடையாதே! உங்க முட்டாள் குடும்பத்தினர்தாம் ‘கிணறு வெட்டுகிறேன் என்று பூதத்தைக் கிளப்பி விட்டுவிட்டார்கள்.’ இனி, தினமும் இங்கே சண்டைச் சச்சரவுகளுடன்கூடிய சனியன் பிடித்த பூலோக வாழ்க்கைதான் எனக்கு!. கடவுளே, இது யார் கொடுத்த சாபமோ தெரியவில்லையே!. எனது நிம்மதியே கேட்டுப் போனதே..” – லீ நா நெற்றியில் அடித்துக்கொண்டது.
‘எனது உறவினர்கள் முட்டாள்கள் என்றால், உனது உறவினர்கள் வடிக்கட்டின முட்டாள்கள். தெரிந்துகொள்!. ‘கடவுள் இணைத்ததை மனிதன் பிரிக்காதிருக்கட்டும்’ என்று காகிதத்தில் எழுதி எரியூட்டி, செய்தியை இங்கே அனுப்பி வைத்த முழு மூடர்கள்.’
‘கடவுள், மரணத்தில் நம்மை பிரித்து வைத்தானா? இணைத்து வைத்தானா? You idiot!.’ – சூங் வா, லி நாவைப் பார்த்துக் கத்தியது




