கோட்டாபயவின் ஆலோசனை எங்கள் அரசுக்கு தேவையில்லை – பிரதி அமைச்சர் ருவன் ரணசிங்க!

 

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆலோசனைகள் தற்போதைய அரசாங்கத்திற்குத் தேவையில்லை, கடந்த ஆட்சியின் தவறுகளை மீண்டும் செய்யாமல் நாட்டின் பொருளாதாரத்தையும் சட்டத்தின் ஆட்சியையும் வலுப்படுத்தும் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகிறது சுற்றாடல் பிரதி அமைச்சர் ருவன் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் செவ்வாய்க்கிழமை (21) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

தற்போதைய ஜனாதிபதி, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் அரசியல் மற்றும் நிர்வாக ஆலோசனைகளைப் பெற வேண்டும் என சாகர காரியவசம் அண்மையில் தெரிவித்திருந்தார்.

கடந்த காலத்தில் கோட்டாபய ராஜபக்ஷவின் தவறான ஆலோசனைகளைச் செயல்படுத்தியதன் விளைவாகவே நாட்டின் பொருளாதாரம் முற்றிலும் சீர்குலைந்து, இரசாயன உர இறக்குமதி இடைநிறுத்தப்பட்டு, விவசாயமும் ஒட்டுமொத்த பொருளாதாரமும் பேரழிவைச் சந்தித்தது.

இறுதியாக அவர் நாட்டிலிருந்தே தப்பிச் செல்ல வேண்டிய சூழலும் உருவானது. எனினும், தற்போதைய அரசாங்கம் பேரழிவிற்குள்ளான பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்பியுள்ளதுடன், கடந்த ஆட்சியில் கைவிடப்பட்ட வீதி அபிவிருத்தி மற்றும் குளங்கள் புனரமைப்பு உள்ளிட்ட அனைத்து அபிவிருத்தித் திட்டங்களையும் மீண்டும் ஆரம்பித்துள்ளது.

நாட்டில் சட்டத்தின் ஆட்சி, ஊழல், இலஞ்சம், போதைப்பொருள் மற்றும் பாதாள உலகக் குழுக்களுக்கு எதிரான நடவடிக்கைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், தோல்வியடைந்த பழைய ஆட்சியாளர்களின் ஆலோசனைகள் அரசாங்கத்திற்கு எவ்வகையிலும் தேவையில்லை.

தாம் 2029 ஆம் ஆண்டில் ஜனாதிபதியாவார் என்ற பயத்தினாலும், அரசாங்கத்திற்குப் பெரியதொரு அரசியல் சவாலாக உருவெடுத்துள்ளதாலுமே தம்மை சிறையில் அடைக்க முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதாக நாமால் ராஜபக்ஷ குற்றங்களை முன்வைத்துள்ளார்.

நாட்டின் நீதிமன்றங்களும், விசாரணை அமைப்புகளும் எவ்வித அரசியல் தலையீடுகளுமின்றி முற்றிலும் சுயாதீனமாகவே இயங்கி வருகின்றன.

சட்டத்தின் முன்னிலையில் முன்னாள் ஜனாதிபதிகளோ அல்லது அவர்களின் மகன்களோ எவ்வித சிறப்புச் சலுகைகளையும் பெற முடியாது. எனவே, சட்டத்திற்கு அஞ்சாமல் குற்றச்சாட்டுகள் உள்ள அனைவரும் நீதிமன்றத்திற்கு வருகை தந்து தங்கள் மீதான வழக்குகளை எதிர்கொள்ள வேண்டும்.

மேலும், நீதிபதிகள், பல்கலைக்கழக பேராசிரியர்கள், வைத்தியர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் போன்ற அனுபவமிக்க தொழில் வல்லுநர்களின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் பொருட்டு, அவர்களின் ஓய்வுபெறும் வயது எல்லை குறித்து சர்வதேச நடைமுறைகள் மற்றும் நாட்டின் தேவைகளைக் கருத்திற் கொண்டு அரசாங்கம் பொருத்தமான தீர்மானங்களை மேற்கொள்ளவுள்ளது.

அத்துடன், தற்போதைய சூழலில் விவசாயிகள் மேற்கொண்டு வரும் போராட்டங்கள் எதிர்க்கட்சிகளின் அரசியல் தூண்டுதல்களால் மட்டுமே முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

தற்போதைய அரசாங்கம் பதவியேற்ற பின்னர் விவசாயிகளுக்கான உர மானியத்தை இரட்டிப்பாக்கியுள்ளதுடன், நாடு, சம்பா மற்றும் கீரி சம்பா நெல் போன்ற வகைகளுக்கு முறையே ரூ. 120, 130 மற்றும் 140 என நியாயமான நிலையான கொள்முதல் விலையையும் நிர்ணயித்துள்ளது.

நெல் கொள்முதல் நடவடிக்கைகளுக்காக கடந்த ஆண்டுகளை விட இருமடங்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதுடன், பயிர் இழப்புகளுக்குக் காப்பீட்டு நிவாரணம் வழங்குவதற்கும் நுகர்வோரைப் பாதுகாக்கும் வகையில் சந்தைச் சமநிலையைப் பேணுவதற்கும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

சர்வதேச அமைப்புகளின் புதிய ஆய்வுகளின்படி, தற்போதைய ஜனாதிபதிக்கான மக்கள் ஆதரவும் அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையும் 75 சதவீதம் வரை அதிகரித்துள்ளதாகவும், எதிர்க்கட்சியினரின் குறுகிய அரசியல் சூழ்ச்சிகள் மூலம் அரசாங்கத்தின் முன்னோக்கிய பயணத்தை தடுக்க முடியாது என்றார்.