‘உன்னை நினைத்தே உலகில் இருந்தேன்’

உன்னை நினைத்தே உலகில் இருந்தேன்
உண்மைக் காதல் என்று நம்பிவந்தேன்
உடலைத் தந்து என்னை மயக்கினாய்
உள்ளதையும் பறித்து வீதியில் விட்டாய்!
கண்கள் நான்கும் சந்தித்த வேளை
விண்ணில் பறந்தேன் அறிவைத் தொலைத்தேன்
எண்ணம் மறந்து கையைப் பிடித்தேன்
வண்ண அழகில் பொய்யை மறைத்தாய்!
மனைவியை மறந்து புத்தன் ஆனான்
மணவாட்டியின் ஆட்டத்தில் புத்தி கெட்டேன்!
……………………………………………………………………..
‘கண்களென்ன வண்டினமா என்னை மொய்க்கிறதே’
கண்களென்ன வண்டினமா என்னை மொய்க்கிறதே
கன்னியென்னை முகர்ந்து பார்த்து மகிழ்கிறதே
கன்னமிரண்டிலும் முத்தம் கொடுத்து பறக்கிறதே
கட்டியணைத்து தேன் குடிக்க மேய்கிறதே!
பெண்களென்ன காமம் சுரக்கும் உடலா
கிண்ணத்தில் ஏந்திக் குடிக்கும் போதையா
பெண்மையைப் போற்றி காதலைத் தேடு
மண்ணின் பெருமையை அவளிடம் காட்டு!
…………………………………………………..
‘பட்டாம்பூச்சியின் தேடல்’
பட்டாம்பூச்சி பூவைச் சுற்றித் தேடி
பச்சைக் கொடியில் தவம் இருந்து
பக்குவமாக மலரின் மணத்தை முகருது!
பருவக் காளை பூவையரை நாடி
பல்வரிசைக் காட்டி பின்னால் தொடர்ந்து
பகட்டை நம்பி தன்னையே தொலைக்குது!
கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்