ஈரான்! அணுமின் நிலையப் பகுதியில் பலத்த வெடிச்சத்தங்கள் – அமெரிக்கா தீவிர தாக்குதல்

 

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே எட்டப்பட்டிருந்த தற்காலிகப் போர்நிறுத்த உடன்படிக்கை முடிவுக்கு வந்துவிட்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்த சில மணிநேரங்களிலேயே ஈரான் மீதான தனது இரண்டாவது கட்டத் தாக்குதலை அமெரிக்கா தீவிரப்படுத்தியுள்ளது.

இந்தநிலையில் அமெரிக்க மத்திய கட்டளைத் தலைமையகம் (CENTCOM) ஈரான் மீது இந்த புதிய வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளது.

ஈரானின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள முக்கிய துறைமுக நகரமான பந்தர் அப்பாஸ் (Bandar Abbas), கடலோர நகரமான சிரிக் (Sirik) மற்றும் ஈரானின் தென்மேற்குப் பகுதியில் உள்ள புஷெர் (Bushehr) மாகாணம் ஆகிய மூன்று முக்கியப் பகுதிகள் மீது அமெரிக்கப் படைகள் தீவிரத் தாக்குதலை நடத்தியுள்ளன.

ஈரானின் அணுமின் நிலையம் அமைந்துள்ள புஷெர் பகுதியிலும் முக்கிய எண்ணெய் ஏற்றுமதி மையங்களுக்கு அருகிலும் அடுத்தடுத்து பலத்த குண்டுவெடிப்புச் சத்தங்கள் கேட்டுள்ளதாக ஈரானிய அரசு ஊடகங்கள் மற்றும் சர்வதேசச் செய்திகள் உறுதிப்படுத்தியுள்ளன.

சர்வதேச வர்த்தகக் கப்பல்கள் மற்றும் பொதுமக்களாகிய மாலுமிகள் மீது ஈரான் நியாயமற்ற முறையில் அண்மையில் நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களுக்குப் பதிலடியாகவே இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

அமெரிக்க மத்திய கட்டளைத் தலைமையகம் (CENTCOM) தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் இது குறித்த அதிகார பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

குறித்த பதிவில், ஹோர்முஸ் நீரிணையில் சர்வதேசக் கப்பல் போக்குவரத்தின் சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் ஈரானின் இராணுவத் திறனை மேலும் முடக்குவதற்காக அமெரிக்க மத்திய கட்டளைத் தலைமையகப் படைகள் கூடுதல் தாக்குதல்களை நடத்தத் தொடங்கியுள்ளன.

ஒரு முக்கிய சர்வதேச நீர்வழியில் சுதந்திரமாகப் பயணிக்கும் வர்த்தகக் கப்பல்கள் மற்றும் பொதுமக்களாகிய மாலுமிகளுக்கு எதிரா ஈரான் அண்மையில் மேற்கொண்ட நியாயமற்ற ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்கு அந்த நாட்டை அமெரிக்கா பொறுப்பேற்கச் செய்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேட்டோ மாநாட்டில் பங்கேற்ற ட்ரம்ப், இன்று இரவு அவர்களை மிகவும் கடுமையாகத் தாக்கப் போகிறோம் என எச்சரித்ததைத் தொடர்ந்தே இந்தத் தாக்குதல்கள் களத்தில் தீவிரமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.