இந்தியாவில் 35 ரூபாய் மருந்து அமெரிக்காவில் ரூ.85,000.. அமெரிக்க பெண் சுட்டிக்காட்டிய மருத்துவ கொள்ளை…

 

அமெரிக்கா மற்றும் இந்தியாவின் மருத்துவ செலவுகளை ஒப்பிட்டு அமெரிக்க பெண் ஒருவர் வெளியிட்ட இன்ஸ்டாகிராம் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

‘லிஸ்’ என்ற அந்த பெண், அமெரிக்காவில் மக்கள் மருத்துவ கட்டணங்கள் கொள்ளை அடிக்கப்படுவதாக குற்றம் சாட்டியுள்ளார். ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள தனது அத்தைக்கு தேவைப்படும் ‘ரெவ்லிமிட்’ என்ற மருந்தின் விலையை அவர் உதாரணமாக காட்டியுள்ளார்.

அமெரிக்காவில் இந்த மருந்தின் ஒரு மாத்திரையின் விலை சுமார் ரூ.85,000 ஆகும். ஆனால், அதே மருந்து இந்தியாவில் ஜெனரிக் வடிவில் வெறும் ரூ.35 முதல் ரூ.300 வரை மட்டுமே கிடைக்கிறது என்று அவர் வியப்புடன் தெரிவித்துள்ளார். இந்தியா தனது மக்களுக்கு மிகவும் மலிவான விலையில் தரமான மருத்துவத்தை வழங்குவதாகவும், அமெரிக்க மருத்துவ முறை ஒரு ஏமாற்று வேலை என்றும் அவர் சாடியுள்ளார்.

இதேபோல், ‘விக்டோரியா’ என்ற மற்றொரு அமெரிக்கப் பெண்ணும், அமெரிக்காவில் 1,000 டாலர்மதிப்புள்ள ஒரு மருந்தை, காப்பீட்டு நிறுவனம் மறுத்ததால் இந்திய உற்பத்தியாளரிடமிருந்து வெறும் $25-க்கு வாங்கியதாகக் குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோக்களைப் பார்த்த நெட்டிசன்கள், இந்திய மருத்துவத் துறையின் மலிவான மருந்து உற்பத்தியைப் பாராட்டியும், அமெரிக்காவின் மிக மோசமான மருத்துவக் கட்டண அமைப்பைக் கண்டித்தும் கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர்.