பணக்கார குடும்பத்தால் கொலை செய்யப்பட்ட இளம்பெண்
தனது முதலாளியின் மகனும் அவரது தனிப்பட்ட ஓட்டுநரும், கடந்த 1 வருடமாக அவரைத் திரும்பத் திரும்ப பாலியல் வன்கொடுமை செய்ததாக அந்த இளம் பெண் கூறியிருந்தார்.
பலமுறை கூட்டுப் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டதாகக் கூறப்பட்டதை அடுத்து, தவறாகச் செய்யப்பட்ட கருக்கலைப்பு காரணமாக மன அதிர்ச்சிக்கு உள்ளான பதின்மவயதுப் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
பாகிஸ்தானின் லாகூரில் உள்ள ஒரு வசதியான குடும்பத்தில் பதினெட்டு வயதான ஆயிஷா என்ற பெண் வீட்டுப் பணிப்பெண்ணாகப் பணிபுரிந்து வந்துள்ளார். தனது மரணத்திற்கு முன்பு, கடந்த நவம்பரில் தான் கர்ப்பமாக இருப்பதை அறிந்துள்ளார். அதற்கு முன்னர் தனது முதலாளியின் மகனும் அவரது தனிப்பட்ட ஓட்டுநரும், கடந்த 1 வருடமாக அவரைத் திரும்பத் திரும்ப பாலியல் வன்கொடுமை செய்ததாக அந்த இளம் பெண் கூறியிருந்தார்.
தங்கள் குடும்பத்தின் நற்பெயரைக் காப்பாற்றிக்கொள்ளும் ஒரு தீவிர முயற்சியாக, அவருடைய முதலாளிகள் ஒரு தனியார் மருத்துவமனையில் சட்டவிரோதமாக கர்ப்பத்தைக் கலைக்குமாறு அப்பெண்ணை கட்டாயப்படுத்தியுள்ளனர். அறுவை சிகிச்சைக்குப் பிறகு, ஆயிஷாவின் உடல்நிலை கடுமையாக மோசமடைந்துள்ளது. தொடர் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், அவரது உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்து, மே 26 அன்று அவர் காலமானார். இருப்பினும், தனது காயங்களால் உயிரிழப்பதற்கு முன்பு, ஆயிஷா தனக்கு நேர்ந்த கொடுமைகளை விவரித்து காவல்துறையிடம் முழுமையான வாக்குமூலம் அளித்ததுடன், மருத்துவமனைப் படுக்கையில் இருந்து மனதை உருக்கும் இறுதிக் காணொளியையும் பதிவு செய்திருந்தார் என்று கூறப்படுகிறது.
அந்தக் காணொளி வைரலாகப் பரவி, சமூக ஊடகங்களில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியதுடன், இந்த வழக்கின் மீது பரவலான கவனத்தையும் ஈர்த்தது. சட்ட ஆவணங்களின்படி, ஆயிஷா தனது மாதவிடாய் நின்ற பிறகு, முதலில் தனது முதலாளியின் மனைவியிடம் இதைப் பற்றித் தெரிவித்துள்ளார். அதன்பிறகு, அவர் கர்ப்பப் பரிசோதனை செய்துகொள்ளக் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளார். அதில் அவர் கர்ப்பமாக இருப்பது உறுதிசெய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து, கருக்கலைப்பு மாத்திரைகளை உட்கொள்ளுமாறு உடனடியாக வற்புறுத்தப்பட்டதாகவும், அதனால் அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் நோய்வாய்ப்பட்டதாகவும் அந்தப் பதின்வயதுப் பெண் குற்றம் சாட்டியுள்ளார்.
இதனையடுத்து, ஆயிஷாவை லாகூருக்குத் திருப்பி அனுப்புமாறு மேலதிகாரிகள் கோரியதாகவும், அங்கு அவர் மிரட்டப்பட்டு, அறுவை சிகிச்சை செய்துகொள்ளும்படி வற்புறுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. பின்னர் மருத்துவ நிபுணர்கள், அவரது வயிற்றில் இருந்த பிறக்காத குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதைக் கண்டறிந்துள்ளனர். கூட்டுப் பாலியல் வன்கொடுமை மற்றும் கொலைக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக, சந்தேகிக்கப்படும் தாக்குதல் நடத்தியவர்கள், ஆயிஷாவின் முதலாளி மற்றும் அங்கீகரிக்கப்படாத மருத்துவமனையின் மருத்துவப் பணியாளர்கள் மீது கவனம் செலுத்தி அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். ஓட்டுநர் காவலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், செல்வந்தரான முதலாளியும் அவரது மகனும் பிணை பெற்றுள்ளனர்.
ஆயிஷாவின் தந்தை, தன் மகள் என்ன துன்பத்தை அனுபவித்துக் கொண்டிருந்தாள் என்பது தனக்குத் துளியும் தெரியாது என்று கண்ணீர் மல்க கூறியுள்ளார். அவர் கூறியதாவது, “அவள் ஃபைசலாபாத் வந்தபோது, அவளது உடல்நிலை மோசமடைந்தது. அப்போது, கிளினிக்கில் இருந்த மருத்துவர் எங்கள் மகள் கர்ப்பமாக இருப்பதாகக் கூறினார். இதைக் கேட்டதும் என் கால்கள் நடுங்கின; என் மீது வானமே இடிந்து விழப்போவது போல் இருந்தது.” தற்போது இந்தத் துயரச் சம்பவம் பாகிஸ்தான் முழுவதும் நாடு தழுவிய சீற்றத்தைத் தூண்டியுள்ளது.




